Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நீங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகலாம்

16 Apr 2024 1:19 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures ias-10

(10) மொழித்திறன் தீர்வுகள் மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவம்

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தொடக்கநிலை தேர்வில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் அடுத்ததாக எதிர்கொள்வது முதன்மை எழுத்துத் தேர்வு. மொழித்திறன் தேர்வுகள் (2 தாள்கள்), கட்டுரை (1 தாள்), பொது அறிவு தேர்வுகள் (4 தாள்கள்) மற்றும் விருப்ப பாடத் தேர்வு (2 தாள்) என 9 தாள்கள் கொண்டது முதன்மை எழுத்து தேர்வு. இவற்றில் பொது அறிவின் முக்கியத்துவம் மற்றும் அதனை பெருக்கும் விபரங்கள் சென்ற அத்தியாயத்தில் விரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அத்தியாயத்தில் முக்கியத்துவம் மிக்க மொழித்திறன் தேர்வுகள் மற்றும் தமிழ்மொழியின் முக்கியத்துவம் பற்றி விரிவாகக் காண்போம்.

மொழித்திறன் தேர்வு

முதன்மை எழுத்து தேர்வுக்கான 9 தாள்களிலும் மொழி தேர்வுக்கான இரண்டு தாள்களும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டவை. தேர்வு எழுதுவோர் இவ்விரு மொழி தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவரது மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படும் எனவே தேர்வு எழுதிய அவரது விடைத்தாள்கள் அனைத்தையும் திருத்தி வெற்றி தோழி தீர்மானிக்கப்பட வேண்டுமானால் அவர் கண்டிப்பாக இந்திய மொழி மற்றும் ஆங்கிலத் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெறுவது இன்றியமையாதது.

மொழி தேர்வு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவு ஏற்றுக் கொண்டுள்ள மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கட்டாய இந்திய மொழித் தேர்வு எழுத வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகள் வருமாறு :

அசாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிபுரி, மராத்தி, நேபாளி, ஓடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சந்தாலி.

• தேர்வுக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கும் மொழி அவருடைய தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஆயினும் பெரும்பாலானோர் தங்கள் தாய் மொழியையே இந்திய மொழித்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கின்றனர்.

• தாம் வசிக்கும் மாநிலத்தின் மொழியைத்தான் ஒருவர் இந்திய மொழி தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய மொழியை தேர்ந்தெடுக்கலாம்.

சில மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு இந்திய மொழித் தேர்வு கட்டாயமன்று. அம்மாநிலங்கள் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகியன

இந்திய மொழித் தேர்வுக்கான வினாக்கள்

கட்டுரை எழுதுதல், ஒரு பகுதியை வாசித்து கேட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்தல், சுருக்கி எழுதுதல், ஆங்கிலத்தில் உள்ள பகுதியை இந்திய மொழியில் மொழி பெயர்த்தல், இந்திய மொழியில் உள்ள பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல், சொற்களையும் தொடர்களையும் வாக்கியத்தில் அமைத்தல், பிரித்து எழுதுதல், எதிர்ச்சொல் குறிப்பிடல், பிழை திருத்தல், பொருள் வேறுபடுத்தி காட்டுதல் போன்ற வினாக்கள் அமைகின்றன தமிழ் மொழி தேர்வு தாளுக்கான மதிப்பெண் 300

ஆங்கில மொழித் தேர்வு

முதன்மை எழுத்து தேர்வு எழுதுகின்றவர் ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்தவர்தானா ? என்று சோதிக்கும் வகையில் தான் ஆங்கில மொழி தேர்வு அமைந்திருக்கும். இத்தேர்வுக்கான வினாத்தாளும் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கான தரமுடையதாக இருக்கும். ஆங்கில மொழி தேர்வு தாளுக்கான மதிப்பெண் 300

ஆங்கில மொழி தேர்வுக்கான வினாக்கள்

கட்டாய ஆங்கிலத் தாளிலும் இந்திய மொழிகளில் உள்ளது போல கட்டுரை வரைதல் (Essay Writing), ஒரு பகுதியை வாசித்து அது பற்றி கேட்கப்படும் வினாக்களுக்கு விடை அளித்தல்
(Comprehension ), சுருக்கி வரைதல் ( Precise Writing ), பொருள் உணர்ந்து கோடிட்ட இடம் நிரப்புதல், திருத்தி எழுதுதல், வாக்கியம் அமைத்தல் போன்றவற்றுடன் இலக்கண அறிவை சோதிக்கும் வகையில் உள்ள கேள்விகள் சிலவும் அமைந்திருக்கும்.

வெற்றிக்கு தமிழ் உதவும்

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோரில் தமிழ் மொழி அறிவு கொண்டவர்களுக்குத் தமிழ் பல வகைகளில் பயன்படுகிறது.

  1. கட்டாய இந்திய மொழி தேர்வுக்கு தமிழை தேர்ந்தெடுக்கலாம் (இது பற்றி கட்டாய மொழி தேர்வுகள் என்று பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.)
  2. முதன்மை எழுத்து தேர்வினைத் தமிழ் மொழி வழியில் (Tamil as a Medium) எழுத வாய்ப்புள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வினை தமிழ் வழியில் எழுதி வெற்றி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வும் தமிழிலேயே நடைபெறும்.
  3. முதன்மை எழுத்துத் தேர்வு எழுதுவோர் தேர்ந்தெடுக்க வேண்டிய இரண்டு விருப்ப பாடங்களில் தமிழ் மொழி இலக்கியத்தையும் ஒரு விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம்

தமிழ் மொழி வழித்தேர்வு

சிவில் சர்வீஸ் தேர்வு பற்றிய முழு விபரமும் தெரியாத பலர், இத்தேர்வினை ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வழியில் (Medium of Exam) மட்டும்தான் எழுத முடியும் என்று எண்ணுகிறார்கள். இது சரியன்று. ஆங்கிலம், இந்தி மொழிகள் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவு ஏற்றுக் கொண்டுள்ள எல்லா மொழிகளிலும் இத்தேர்வு எழுதலாம். முதன்மை எழுத்து தேர்வில் கட்டாய ஆங்கில மொழி தேர்வு தவிர மற்ற தேர்வுகள் அனைத்தையும் ஆங்கில மொழியில் எழுதாமல் தமிழிலேயே எழுதவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் மொழி வழியில் முதன்மை எழுத்து தேர்வினை எழுதி வெற்றி பெறுவோர் தமக்கு நேர்முகத் தேர்வு தமிழ் மொழியில் தான் நடைபெற வேண்டும் என்று கேட்கலாம். அவ்வாறு கேட்போர் அனைவருக்கும் தமிழிலேயே நேர்முகத்தேர்வு நடத்த வேண்டியது UPSCயின் கடமை. இவர்கள் விரும்பினால் நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்.

முதன்மை எழுத்து தேர்வு தமிழ் வழியில் எழுதி, நேர்முகத் தேர்வும் தமிழிலேயே நடைபெற்று இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் உயர்பணிகளில் பலர் உள்ளனர்.

தமிழ் வழியிலேயே முதன்மை எழுத்துத் தேர்வையும் நேர்முகத் தேர்வையும் சந்திப்போருக்கு பின்வரும் நன்மைகள் உள்ளன.

  • படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கும்
  • தமிழ் புத்தகங்களை ஒரு சில முறை படித்தால் போதும் கருத்துக்களை உடனடியாக புரிந்து கொள்ளலாம். நாம் சிந்திக்கும் மொழியிலேயே எண்ணங்களை வெளியிட வழி இருப்பதால் சிந்தனை தடை இருக்காது.
  • நேர்முகத் தேர்வும் தமிழிலேயே நடக்கும் என்பதால் நேர்முகத் தேர்வில் நமது கருத்தை தெளிவுடன் விவரமாகவும் எளிதில் தெரியப்படுத்தி விடலாம். நேர்முகத் தேர்வு குறித்த பயம் பெரும் அளவு குறைந்துவிடும்.

நமது தாய் மொழியிலேயே தேர்வு எழுதி சிறப்பாக வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனால் நமக்குத் தான் பெருமை. ஆனால் அதற்கு ஆங்கில வழியில் எழுதுவதே எழிது என்று நிலையில் உள்ளோர் தமிழ் மேல் உள்ள பற்றின் காரணமாக தமிழ் மொழி வழியில் தேர்வு எழுதுவதை பெருமையாக எண்ணி எழுதிச் சிரமப்பட வேண்டாம்.

ஆங்கில வழியில் படித்து தேர்வு எழுதுவது கடினம் என்று கருதுபவர்கள் தமிழ் வழியை (Tamil Medium) தேர்ந்தெடுக்கலாம். ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவதே எளிது என்று கருதுபவர்கள் ஆங்கில வழியைத் (English Medium) தேர்ந்தெடுக்கலாம்.

தமிழ் மொழி இலக்கிய விருப்பப்பாடம்

முதன்மை எழுத்து தேர்வுக்கு ஒரு விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் என்று அறிவோம். தமிழ் மொழி இலக்கியத்தை (The Literature of Tamil Language) தமிழ் அறிந்த அனைவரும் முதன்மை எழுத்து தேர்வுக்கான ஒரு விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து விரும்பிப் படிக்கலாம்.

தமிழ்மொழி இலக்கியத்தை தேர்ந்தெடுக்கலாம் என்று குறிப்பிடுவது பலருக்கு வியப்பாக இருக்கலாம் தமிழ் என்றாலே மதிப்பெண்கள் அதிகம் பெற முடியாது: செய்யுள் பலவற்றை மனப்பாடம் செய்திருக்க வேண்டும். தமிழ் புலவராக இருந்தால் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்று பலரும் பலவாறாக எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை நிலை இதுவன்று.

முதன்மை எழுத்து தேர்வுக்கான எல்லா விருப்ப பாடங்களையும் போலவே தமிழ் மொழி இலக்கியம் இரண்டு பகுதிகளை கொண்டது. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரண்டும் முறையே 250 மதிப்பெண் கொண்டவை. ஆக முதன்மை எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி இலக்கிய பாடம் விருப்பபாடமாக எடுப்பவர்கள் மொத்தம் 250 + 250=500 மதிப்பெண்கள் கொண்ட தமிழ் மொழி இலக்கிய பாடத்தினை தயார் செய்யும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

முதல் தாளைப் பொருத்தவரை எவ்வளவு அதிகம் படிக்கிறோமோ அவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெற முடியும். தமிழ் எழுத்து திறனுக்கு ஏற்ப இரண்டாம் தாளில் மதிப்பெண்கள் பெறலாம்.

முதல் தாள் தமிழ் மொழி வரலாறு. தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது. இரண்டாம் தாள் தமிழ் இலக்கியங்கள் பற்றியதாகும். முதல் தாளில் இலக்கணம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். இத்தாளில் இலக்கணத்தை நன்கு பயின்றவர்கள் அதிக மதிப்பெண்கள் வாய்ப்பு உள்ளது. இலக்கிய வரலாறு தொடர்பான கேள்விகள் எளிதாகவே அமைந்திருக்கும்.

இரண்டாம் தாளுக்கு பயில வேண்டிய இலக்கியப் பகுதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் மற்றும் தற்கால கவிதை, உரைநடை கதை இலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் கொண்டவை. இத்தாளில் சிறப்பாக தேர்வு பெற கொடுக்கப்பட்டுள்ள இலக்கியங்களைக் கருத்தூன்றித் தெளிவாக கற்றிருக்க வேண்டியது அவசியம். இவற்றில் கேட்கப்படும் வினாக்கள் தேர்வு எழுதுபவரின் விமர்சனத் திறனை சோதிப்பதாக அமைந்திருக்கும். இப்பகுதியில் எழுத்து திறன் கொண்டோர் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

தமிழை விருப்பப் பாடமாக எடுத்து இடைநிலை அல்லது முதுநிலை கல்வி கற்றவர்கள் தான் முதன்மை எடுத்து தேர்வுக்கு தமிழை சிறப்புப் பாடமாக எடுத்து பயில வேண்டும் என்பதன்று. தமிழைப் பிழையின்றி எழுத தெரிந்த மற்றவர்களும் இப்பாடத்தை அதிக சிரமமின்றி பயின்றுவிடலாம். பொறியியல் போன்ற பட்டம் பெற்று பணியில் இருப்போர் கூடக் குறைந்த காலத்தில் படித்து நிறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். பலர் தமிழ் மொழி இலக்கியத் தாள்கள் ஒவ்வொன்றிலும் 250க்கு 180 க்கும் மேல் மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழறிவைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். நல்ல தமிழில் எழுதக்கூடியவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வாய்ப்புள்ளது.

அடுத்து வரும் அத்தியாயத்தில் முதன்மை எழுத்து தேர்வில் விருப்பப்பாடம் தேர்வு செய்வது பற்றி விரிவாக விவரிக்கப்படுகிறது.

You already voted!
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097934
Users Today : 2
Total Users : 97934
Views Today : 2
Total views : 419384
Who's Online : 0
Your IP Address : 13.58.191.60

Archives (முந்தைய செய்திகள்)