24 Sep 2024 11:19 amFeatured
மும்பை புறநகரான தானே மாவட்டத்தின் பத்லாப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், கடந்த 12-ஆம் தேதியன்று, பள்ளி கழிப்பறைக்குச் சென்ற இரு குழந்தைகளையும் பின்தொடர்ந்து சென்ற பள்ளி ஊழியர், அங்கு அந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், அந்த பிஞ்சுக் குழந்தைகள் பள்ளியில் நடந்த சம்பவத்தை தங்கள் பெற்றோரிடம் விவரித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின்பேரில், அதே பள்ளியில் துப்புரவுப் பணி உதவியாளராக பணிபுரிந்த அக்ஷய் ஷிண்டே என்ற நபர் கடந்த மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பொது மக்கள் போராட்டம்
இச்சம்பவம் பத்லாப்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 20ம் தேதி பத்லாபூரில் பொதுமக்கள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பந்த்தின்போது பத்லாபூர் ரயில் நிலையத்தில் 10 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வன்முறையில் இறங்கினர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளியைச் சிறுமியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து இச்சம்பவம் நாடு முழுவதும் வைரலாக பரவியது. எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்து பின்னர் அதனைக் கைவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டது. குற்றம் நிகழ்ந்த பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளிச் செயலர் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ், வழக்கு பதியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் ஷிண்டே தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு அவர் மீது காவல்துறை கடந்த 16ம் தேதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
அக்ஷய் ஷிண்டே மனைவி புகார்
இதற்கிடையில் இயற்கைக்கு மாறான முறையில் உறவு வைத்துக்கொண்டதாக அக்ஷய் ஷிண்டே மீது அவரது இரண்டாவது மனைவி காவல்துறையில் புகார் செய்து இருந்தார். அப்புகாரின் அடிப்படையில் ஷிண்டேயிடம் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை ஷிண்டேயை காவல்துறை தலோஜா சிறையிலிருந்து காவல்துறை வாகனத்தில் பத்லாபூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
தப்பிக்க முயற்சி-சுட்டுக்கொலை
காவல்துறை வாகனம் மும்ப்ரா பைபாஸ் ரோட்டில் வந்தபோது, திடீரென அக்ஷய் ஷிண்டே தனது அருகில் அமர்ந்திருந்த காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். இதில் சில காவலர்கள் காயம் அடைந்தனர். உடனே ஆய்வாளர் சஞ்சய் ஷிண்டே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஷிண்டே மீது சுட்டார். இதில் தோட்டா ஷிண்டே தலையில் பட்டது. காவல்துறை வாகனம் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இத்துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஷிண்டே கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் அங்கிருந்து ஜூபிடர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், "குற்றவாளி காவல்துறையினரின் துப்பாக்கியைப் பிடுங்கிச் சுட்டதால் காவல்துறை தற்பாதுகாப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டனர்" என்றார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
காவல்துறை போலி என்கவுண்டரில் அக்ஷய் ஷிண்டேயை கொலை செய்துவிட்டதாக அக்ஷய் ஷிண்டேயின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் தற்பாதுகாப்புக்காகத்தான் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் தெரிவித்துள்ளார். காவல்துறையும் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
உடலை வாங்க மறுப்பு
அக்ஷய் ஷிண்டேயின் தாயார் இது குறித்து அளித்த பேட்டியில், "எனது மகன் தீபாவளி பட்டாசுக்கு கூட பயப்படுவான். அப்படி இருக்கும் போது எப்படி துப்பாக்கியைப் பிடுங்கிச் சுடுவான். இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்ததோடு அக்ஷய் ஷிண்டே உடலை வாங்க மறுத்தார். இத்துப்பாக்கிச்சூடு குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகளும் இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அக்ஷய் ஷிண்டே துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பத்லாபூர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இத்துப்பாக்கிச் சூட்டுக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சட்டமன்ற உறுப்பினர்.ராஜு பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சரத் பவார்
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், குற்றவாளியை அழைத்துச் சென்றபோது காவல்துறை கவனக்குறைவாக நடந்து கொண்டதாகவும், இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்டுள்ளார்