27 Jul 2019 9:06 pmFeatured
தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, முன்பு மூன்று முறை முதல்வராக இருந்திருந்த போதிலும் தன்னுடைய முழு பதவிக்காலத்தை ஒருமுறை கூட நிறைவு செய்யவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
சுதந்திர இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அரசியல் அதிசயமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இங்கு பெரும்பாலான தேர்தல்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைத்ததில்லை அதேபோல் இந்த 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மூன்று பேர் மட்டுமே கர்நாடகத்தின் முதல்வராக தங்களுடைய முழு பதவி காலத்தையும் நிறைவு செய்துள்ளார்கள்.
பச்சை சால்வை சென்டிமென்ட்
எடியூரப்பா முக்கியமான விழாக்களில், அதுவும் கண்டிப்பாக பதவியேற்பு விழாக்களில் பச்சை நிற சால்வை அணிவது வழக்கம்.
இந்த முறையும் முதல்வராக பொறுப்பேற்றபோது பச்சை சால்வை அணிந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
நியுமராலஜி சென்டிமென்ட்
புக்னகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா என்ற தனது முழுப் பெயரை 2007-ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற போது B.S Yeddyurappa என ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டார். ஆனால் அப்போது அவர் அப்போது பதவி வகித்த நாட்களோ வெறும் 7. அதன் பின்னர் பதவியேற்றக் காலங்களிலும் அவர் முழுமையாக பதவி வகிக்கமுடியவில்லை. இதனால், இந்த முறை நியூமராலஜியின் அடிப்படையில் சில எழுத்துக்களை மாற்றம் செய்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் B.S Yediyurappa என மாற்றிக்கொண்டுள்ளார்.
இந்த முறையாவது செண்டிமெண்ட் அவரின் முதலமைச்சர் பதவியை தக்கவைக்குமா ?
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் 15 எம்எல்ஏக்கள்(காங்கிரஸ்-12 , மஜத-3) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தோற்று கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக சார்பில் ஆட்சியமைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆளுநரின் அழைப்பை ஏற்று, எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார்.
சட்டசபையின் மொத்த பலம் 224, இதில் பாஜகவுக்கு மொத்தம் 105 உறுப்பினர்கள் உள்ளனர். சிம்பிள் மெஜாரிட்டிக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை. தற்போதைய அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு தேர்தல் நடைபெற்றால் அதில் குறைந்தபட்சம் 8 இடங்களையாவது பாஜக வென்றால்தான் ஆட்சியை தக்க வைக்கமுடியும்.
இந்நிலையில் பதவியை இழந்த குமாரசாமியோ, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கோஷ்டியினர் தனது அரசை கலைப்பதில் தீவிரமாக இருந்தது என்று குமாரசாமி கோபத்தில் உள்ளார்.
எனவே காங்கிரசை பழிவாங்க பாஜகவுடன் இணக்கமாக போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு சான்றாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின் போது கூட பாஜகவை குமாரசாமி அதிகம் தாக்கி பேசவில்லை என்றும் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர்கள்தான் பாஜகவை அதிகம் தாக்கி பேசி வருகிறார்கள் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிருபர்களிடம் பேசிய அக்கட்சி மூத்த எம்எல்ஏ ஜி.டி.தேவகவுடா, "பாஜக அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கலாம் என சில எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர். சில எம்எல்ஏக்களோ, கட்சியை பலப்படுத்த, சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவதே நல்லது என்றனர்" என்று தெரிவித்துள்ளார்.