30 Aug 2019 6:58 pmFeatured
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அதில் நாடு முழுவதும் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபமாக இயங்குவதாகவும், 4 வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகள் மேலும் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக செயல்படும் என்றும் சிண்டிகேட் வங்கியுடன், கனரா வங்கி இணைக்கப்பட்டு நாட்டில் நான்காவது மிகப்பெரிய வங்கியாக 15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் தொடர்ந்து செயல்படும் என்றும், கார்ப்பரேஷன் வங்கியுடன் ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இணைக்கப்பட்டு நாட்டில் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியாக செயல்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அலகாபாத் வங்கியுடன், இந்தியன் வங்கி இணைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம், 27 பொதுத்துறை வங்கிகளில் இருந்து 12 ஆக குறைந்துள்ளது.
நான்காக பிரிக்கப்படும் 10 பொது துறை வங்கிகள்
1.ஒரியண்டல் வங்கி (Oriental Bank of Commerce) யுனைட்டட் வங்கி (United Bank of India) பஞ்சாப் நேஷ்னல் வங்கி (Punjab National Bank)
2.கனரா வங்கி (Canara Bank)- சிண்டிகேட் வங்கி (Syndicate Bank)
15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் செயல்படும் என்றார்.
3.யூனியன் வங்கி (Union Bank Of India),ஆந்திரா வங்கி (Andhra Bank), கார்ப்பரேஷன் வங்கி (Corporation Bank)
4.இந்தியன் வங்கி (Indian Bank),அலஹாபாத் வங்கி (Allahabad Bank) 8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் செயல்படும்
பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இரண்டும் வழக்கம் போல் தனி தனியாக இயங்கும்
நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்றும், அரசு வங்கிகளின் சேவை சிறப்படைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும் அரசு வங்கிகளுக்கு தேவையான மூலதனம் வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் நடவடிக்கையால் வாரா கடனின் அளவு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.