09 Sep 2019 12:55 amFeatured
விமான நிலையத்தில் ஊடுறுவல்
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான்.
தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது.
ஏனென்றால் அந்த வீடு என்டபே விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது!
விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் இஸ்ரேலியக் கமாண்டோக்கள், என்டபே விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்துவதே திட்டம். அப்போது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள அந்த வீட்டில் இருந்தால் என்னாகும்?
அவர்களிடம் இருந்து ஆயுத ரீதியான எதிர்ப்புக் கிளம்பலாம். அதற்கு ஏற்ற ஒழுங்குகளையும் செய்துகொள்ள செய்யவேண்டும்.
இந்த விபரங்களை அறிய ரிஸ்க் எடுத்தாவது மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்குள் அனுப்பியே ஆகவேண்டும்.
இரு உளவாளிகள் ஊடுருவுகின்றனர்
டேவிட் கிம்சே இதற்காக இரண்டு மொசாத் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைவதற்குத் தயார் செய்தார். அவர்கள் இஸ்ரேலில் இருந்து முதலில் கென்யாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
கென்யா சென்றடைந்த அவ்விரு உளவாளிகளும் அங்கிருந்து உகண்டாவுக்குள் ஏரி ஒன்றின் ஊடாகவே ஊடுருவுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கென்யாவிலிருந்து திருட்டுத்தனமாக படகு ஒன்றின் மூலம் லேக் விக்டோரியா ஏரியில் பயணம் செய்து உகண்டாவுக்குள் நுழைந்தார்கள்.
இதிலுள்ள மற்றொரு முக்கியமான விஷயம், இரு உளவாளிகளின் இந்த ஊடுருவல் கென்யாவின் உளவுத் துறைக்குத் தெரிந்தே நடைபெற்றது.
உண்மையில் படகு மூலமாக உகண்டாவுக்குள் நுழையும் ஐடியாவை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்குக் கொடுத்ததே கென்யாவின் உளவுத்துறைதான். அத்துடன் இரு மொசாத்தின் உளவாளிகளையும் அந்தப் பாதையூடாக உகண்டாவுக்குள் அழைத்துச் செல்ல கென்யாவின் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரையும் கூடவே அனுப்பி வைத்திருந்தது கென்ய உளவுத்துறை.
என்டபே பகுதிக்குள் இந்த மூன்றுபேரும் ஊடுருவி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தால், வீடு காலி!
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர், உகண்டாவில் இருந்து தங்களது நடவடிக்கைகளையெல்லாம் அங்கோலா நாட்டுக்கு நகர்த்திவிட்டார்கள் என்ற விபரம் அதன் பின்னரே மொசாத்துக்குத் தெரியவந்தது.
ஒரு தடை நீங்கியது. அதிரடி ஆப்பரேஷனின்போது விமான நிலையத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தேவையில்லை.
இந்த இடத்தில், இவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஒன்றும் அடித்தது.
பாதுகாப்பு அதிகாரியின் உறவினர்
இரண்டு மொசாத் உளவாளிகளுடன் கென்யாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சென்றிருந்தார் என்று சொன்னோமல்லவா… அந்தப் பாதுகாப்பு அதிகாரிக்கு உகண்டாவில் நல்ல தொடர்புகள் இருந்தன.
அந்தத் தொடர்புகள் மூலம் தகவல் சேகரித்ததில் அவரின் மனைவியின் உறவினர் ஒருவர் விமான நிலையத்தில் பணயக் கைதிகளை காவல் காக்கும் பணியில் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பிட்ட இந்த உறவினருடன் பேசிய கென்யப் பாதுகாப்பு அதிகாரி, தங்களை எப்படியாவது என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் அது ஆபத்தான விளையாட்டு என்று அந்த உறவினர் மறுத்துவிட்டார்.
காரணம், இரு இஸ்ரேலிய உளவாளிகளையும் அவர்களது உருவத் தோற்றத்தை வைத்தே கடத்தற்காரர்கள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
இப்போது ஒரு மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டது.
இஸ்ரேலிய உளவாளிகள் இருவரையும் பாதுகாப்பான இடம் ஒன்றில் விட்டுவிட்டுத் தன்னை மாத்திரம் தனியே என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் கென்யப் பாதுகாப்பு அதிகாரி.
இதில் சிக்கல் ஏதும் இருக்காது. காரணம் உகண்டா நாட்டவருக்கும் கென்ய நாட்டவருக்கும் உருவ அளவில் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு அவரது உறவினர் ஒப்புக்கொண்டார். அவருடன் இவரும் ஒரு காவல் காக்கும் சகா என்ற தோற்றத்தில் என்டபே விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டார்.
அங்கே நோட்டமிட்டதில் பணயக் கைதிகள் அனைவரும் உயிருடன் இருப்பதை இவர் கண்களால் பார்த்தார். அத்துடன் என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த காவல் ஏற்பாடுகளையும் இந்தப் பாதுகாப்பு அதிகாரி மனதில் பதிவு செய்துகொண்டார்.
மொத்தம் 15 பேர் பணயக் கைதிகளைக் காவல்காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் இப்படியான வேலைகளுக்கே புதியவர்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. இந்தப் புதியவர்கள் துப்பாக்கியையே முன்பின் இயக்கிப் பழக்கமில்லாத ஆட்கள் என்பது அவர்கள் துப்பாக்கியை மிரட்சியுடன் பிடித்திருந்ததில் இருந்தே தெரிந்தது.
துப்பாக்கி பிடிக்கத் தெரிந்த மற்றயவர்களும் அனுபவசாலிகள் அல்ல. அவர்களும் நகத்தைக் கடித்தபடி பயத்துடனும் பதட்டத்துடனும் காணப்பட்டார்கள்.
இந்தத் தகவல்கள் ரேடியோ மூலம், இஸ்ரேலிலுள்ள மொசாத் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதே நேரத்தில் கென்யாவுக்கு முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?