18 Sep 2019 11:26 amEditorial
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சியினருடன் அதுவும் திமுகவினரிடம் பேசுவது என்பது அபூர்வம்.. நிழலை தொடாமலே ஓடுவர்.
பொது நிகழ்சிகளிலோ தெரிந்தவர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களிலோ திமுகவினர் கலந்து கொள்வதாக இருந்தால் அந்தப்பக்கம் போகக்கூட அதிமுகவினர் நடுங்குவார்கள். அதையும் மீறி யாராவது கலந்து கொண்டாலோ, நெருக்கம் காட்டினாலோ, கட்டம்கட்டி அடிமட்ட உறுப்பினர் பதவியில் நீக்கியதாக மின்னல் வேக அறிக்கை வரும். அதனால் திமுக-அதிமுக தரப்பினர் நேருக்கு நேர் பார்த்தால்கூட முகத்தை திருப்பி செல்லும் நிலை இருந்தது.
ஆனால் இப்போது அப்படி ஒரு நிலை இல்லை. பயம், நடுக்கங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. கட்சியின் பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமான இயல்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்வான விசயமே
ஓ.பி.எஸ்
சமீபத்தில் ஓபிஎஸ், தேனியில் நடந்த அரசு விழாவில் திமுக எம்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவண குமாருடன் உட்கார்ந்து சிரித்தபடியே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திரகுமார் எம்.பி
அதை மிஞ்சும் அளவுக்கான அரசியல் நாகரீகம் தேனியிலும் தென்பட்டுள்ளது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது பொதுகணக்கு குழுவின் தலைவர் துரைமுருகனுடன் தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினார்.
அப்போது ரவீந்திரநாத் துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார்
துரைமுருகன்
துரைமுருகனும் ஓபிஎஸ் மகனை "ரொம்ப நல்லா வரணும்" என்று மனசார வாழ்த்தி
உள்ளார்..
மாற்று கட்சியினருடன் நட்பு பாராட்டும் அரசியல் தலைவர்களில், முன்னாள் பொதுப்பணித்
துறை அமைச்சரும்,திமுக பொருளாளருமான துரைமுருகன்
ரொம்பவும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது, சட்டசபையிலும் அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு
அனைவரும் கட்சி பாகுபாடின்றி சிரித்து மகிழ்வர்.
இருவருமே கிட்டத்தட்ட 30 நிமிஷம் சிரித்தபடியே பேசியிருக்கிறார்கள். தனிப்பட்ட விவகாரம், மற்றும் அரசியல் ரீதியாக இவர்கள் பேசியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இருவரும் சந்தித்து கொண்டதும், சால்வை போர்த்தியதும், சிரித்து சிரித்து பேசியதும் போட்டோக்களாக வெளிவந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
வாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா
இதில் என்ன ஹைலைட் என்னவென்றால், மதிய விருந்துக்கு வீட்டுக்கு சாப்பிட வருமாறு துரைமுருகனை ரவீந்திரநாத் கூப்பிட.. அதற்கு "பரவாயில்லைப்பா.." என்றுகூறி இருக்கிறார் துரைமுருகன். இப்படி திமுக மூத்த தலைவரும், அதிமுக எம்பியும் இப்படி சகஜமாக பேசியதை, பழகியதை பார்க்கும்போது, அரசியல் நாகரீகம் இன்னும் மக்கி போகாமல் உயிர்ப்புடனே இருக்கிறது என்று நாம் நம்புவோமாக.