30 Sep 2019 11:47 pmFeatured
பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக கடந்த முறை தனித்துப்போட்டியிட்டு 122 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது இம்முறை அதைவிட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது பா.ஜக வின் நிலைப்பாடாக உள்ள நிலையில் சிவசேனாவோ இரு கட்சிகளுக்கும் சம அளவிலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இதுவரை தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படவில்லை
இந்நிலையில் சிவசேனா கட்சி தனக்கு செல்வாக்கு அதிகமுள்ள சில தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டது. அதன்படி மாநில உள்துறை மந்திரி தீபக் கேசர்கர், சாவந்த்வாடி தொகுதியிலும், மூத்த தலைவர் ராகேஷ் சிரேஸ்கர் கோலாப்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
மேலும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஒர்லி தொகுதியில் அவர் போட்டியிட வைக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, மற்றும் அவரது மகன் உத்தவ் தாக்கரே உள்பட அவரது குடும்பத்தினர் யாரும் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை கட்சி பொறுப்புகளை மட்டுமே வகித்து வந்துள்ளனர்
இந்நிலையில் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஒர்லி தொகுதி சிவசேனாவுக்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால் இந்த தொகுதியில் ஆதித்யா தாக்கரே வெற்றி பெறுவது உறுதி என கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஒர்லி தொகுதியில் தற்போது சிவசேனாவின் சுனில் ஷிண்டே எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். ஆதித்யா தாக்கரேவுக்காக அவர் வேறு தொகுதிக்கு மாற உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது