29 Sep 2019 5:44 pmFeatured
-பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
யாரடி பெண்மணி! கேளடி கண்மணி!!
ஓரடி நில்லடி கீழடி பாடடி
வேரடி என்னிடம் சீரடி மாறுமுன்
கூறடி காவியம் செந்தமி ழோவியம்
கண்ணடி நிறைந்து நெஞ்சடி மகிழ
முன்னடி வடிந்து வேற்றடி ததும்ப
நானடி என்றுமே நின்மடி வணங்க
பாரடி பண்மொழி பைந்தமிழ் போற்றடி
சிந்தனை நூறடி தென்மொழி தேனடி
வெம்பிய மனதிலே சங்கொலி பாடடி
மூ'வாயிர மாண்டடி ஆசையோ ஒன்றடி
தரணியின் தோளிலே தவழ்ந்தவள் நீயடி
கொஞ்சிய மொழிகளில் விஞ்சிய மொழியடி
கோபுரக் கலசமாய் மின்னிய விளக்கடி
வேற்றுவர் மனங்களில் வேதனை ஏனடி
விண்ணில் பரந்திடும் காட்சியே கீழடி!
பாரதி தாசனின் பொற்றமிழ் ஏடடி
மாகவி வேந்தனின் செந்நிறக் கூற்றடி
கம்பனின் காலடி மலர்ந்திடும் பூவடி
கபிலரின் நட்பெனும் கருத்தியல் பண்படி
அவ்வையின் அறவுரை ஏந்திய யாழடி
வள்ளுவன் போற்றிய வண்டமிழ்ச் சாரடி
தொல்லிய காப்பியன் தொழுத நல்தேரடி
கணியன் குன்றனின் கண்ணிய மேலடி
எண்ணிய நெஞ்சினில் திகட்டா பாவடி
நேர்நிரை ததும்பிய செங்கனிப் பாகடி
நுன்புலக் கூற்றிலே நெஞ்சுரச் சோறடி
அகிலம் வியக்கும் கண்மணி கீழடி!!