17 May 2022 7:28 amFeatured
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துணர்வு பெற்றுள்ளது.
செயல்படுத்திய கலைஞர்
போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள், பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக செல்கின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வருவாய் பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தவிர்க்க 2007 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை 1655 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது.
அதனை தொடர்ந்து மதுரவாயல் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் சுமார் 20 கிலோமீட்டர் நீளம், 20-மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலத் திட்டத்திற்கு 2007- ஆம் அனுமதி பெறப்பட்டது. இத்திட்டத்திற்கு 2009- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கல் நாட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து, பணிகள் தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.
முடக்கிய ஜெயலலிதா
பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி திட்டத்தை முடக்கினார் ஜெயலலிதா.
புத்துயிரூட்டும் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,855 கோடி மதிப்பில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
இந்த 2 அடுக்கு உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக, நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் நிலுவையிலிருந்த இப்பணியினை செயல்படுத்திடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இந்நிகழ்வின்போது, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் கே.கோபால், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், நாகாய் முதன்மை பொது மேலாளர் பி.ஜி.கோடாஸ்கர், மண்டல அலுவலர் எஸ்.பி.சோமசேகர், தேசிய நெடுஞ்சாலைகள் முதன்மை பொறியாளர் பாலமுருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா பிளாக் ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் புனித் சதா, நேவல் ஆபிசர் கமாண்டர் எஸ்.ராகவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். அதிமுக ஆட்சி வந்தவுடன் இந்த பறக்கும் சாலை திட்டத்தை கைவிட்டது. தற்போது மீண்டும் இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திட்டம்
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,855 கோடி மதிப்பில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
2வது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்கு வரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.