21 Dec 2021 10:13 amFeatured
18.12.2021 சனிக்கிழமை அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மும்பை புறநகர் மாநில மாவட்ட செயலாளர் அலிசேக் மீரான் கலந்து கொண்டார். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து மும்பைத் தமிழர்கள் சார்பாக தமிழ்நாடு பவன், வெளிமாநில வாழ் தமிழர் நல வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் உள்ள விபரங்கள் பின் வருமாறு.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் , கழகத் தலைவர் ஆருயிர் அண்ணன் தளபதி அவர்களுக்கு வணக்கம், மும்பையிலிருந்து, கழக மாநிலச் செயலாளர் அ.மீரான் எழுதுவது,
தமிழகத்தை, இந்தியாவில் முதன்மை மாநிலமாக உயர்த்த ஒவ்வொரு கணந்தோறும் சிந்தித்து செயலாற்றும் தங்களது ஆற்றலையும், நுட்பத்தையும் கண்டு வெளிமாநில தமிழர்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் பிற மாநிலங்களை விட மும்பை நகரத்தில் வாழும் பிற மாநில மக்களும் வியந்து மாபெரும் தலைவராக ஏற்று தங்களைப் பாராட்டிப் பேசுகின்ற பொழுது கழகத் தொண்டனாக எம் பெருமிதம் இரட்டிப்பாகுகிறது.
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பாராட்டிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் கூற்றை பலமுறை நேரில் கண்டிருந்தாலும் அதையும் தாண்டி தமிழக நலனுக்காவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் தங்களின் பன்மடங்கு உழைப்பை பார்க்கும்பொழுது கழகத் தொண்டனாக இன்னும், இன்னும் பெருமிதம் கொள்கிறேன்.
நவிமும்பை தமிழ்ச்சங்க கட்டிட நிதிக்காக ருபாய் 25 இலட்சம் சங்கத்தின் அறங்காவலர் குழத் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் வழங்கியது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். மராட்டிய மாநில தமிழர்கள் சார்பாகவும், கழகத் தோழர்கள் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன், உரிமைகளை காக்கும் வகையில் தமிழக அரசில் வெளி மாநிலத் தமிழர் நல வாரியம் அமைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
மும்பையில் பல்வேறு மாநிலங்களின் பவன்கள் இருப்பது போல தமிழ்நாடு பவன் அமைய கடந்த கழக ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் மராத்திய மாநில அரசு நவிமும்பை, கார்கர் பகுதியில் இடம் ஒதுக்கி உள்ளதாக அறிகிறோம் . அப்பணிகள் விரைந்து நடைபெற ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
வெளிமாநிலத் தமிழ் குழந்தைகள் தடையின்றி தமிழ் வழிக் கல்வி பயில உரிய நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளிமாநில தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் உள்ஒதுக்கீடு வழங்க ஆவன செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய வடமாநில நகரங்களிருந்து தமிழகம் செல்லும் இரயில்கள் கொங்கன் இரயில் தடத்தில் கேரள மாநிலம் முழுதும் பயணித்து திருவனந்தபுரம் , நாகர்கோவில் வழியாக நெல்லை வந்தடைவதால் பயண நேரமும், தூரமும் அதிகரிக்கிறது. மட்டுமின்றி நேரடியாக தமிழகத்திற்கு வரும் இரயில்கள் பிற தென் மாநிலங்களை ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகக்குறைவுமாகும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்திய ஒன்றிய அரசின் இரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி தமிழகத்திற்கு கூடுதல் இரயில்கள் கிடைக்கவும், கொங்கன் இரயில் தடத்தில் இயங்கும் இரயில்களை கோவை, மதுரை வழியாக இயக்கவும் ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
உயிர் காக்கும் காப்பீடுத்திட்டத்தில் வெளிமாநில வாழ் தமிழர்களும் பயன்பெற வழிவகை செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
வெளிமாநிலங்களிருந்து மீண்டும் தமிழகத்திற்கு குடிபெயரும் தமிழர்களுக்கு வீடு கட்ட மானிய கடனும், சிறு,குறு தொழில்கள் தொடங்க கூட்டுறவு வங்கி மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் குறைந்த வட்டிக்கு கடனும் கிடைக்க வழிவகை செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நல்ல முயற்சி. மும்பை புறநகர் திமுக செயலாளர் திரு அலிசேக் மீரான் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வெளி மாநிலத் தமிழர் நலம் காக்க அளித்த கோரிக்கைகள் பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.