06 Jul 2020 11:43 pmFeatured
பல்கலைக் கழங்கள் மற்றும் கல்லூரிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தலாம் என பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் 24ம்தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 12 வகுப்புக்கு மட்டும் தமிழகத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு இருந்தது மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
பொதுவாக கல்லூரிகளில் தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடத்தபட்டு வந்தன. ஆனால் இந்த முறை கொரோனா லாக்டவுன் காரணமாக இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில் சில பல்கலைக்கழங்கள் இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.
இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த வேண்டும் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ககாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படிதேர்வுகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து பல்கலைக்கழங்களில் மற்றும் கல்லூரிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தலாம் என பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை செய்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நிலுவையில் உள்ள தேர்வுகள் நடத்துவது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை யூஜிசி அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.