30 Dec 2024 11:50 amFeatured
வாழ்வியல் தேவை அறிவியலா ? சோதிடமா ? - (பகுதி - 2) சோதிடத்தில் செவ்வாய்
சோதிடத்தில் செவ்வாய்
அறிவியல் கூற்றுப்படி ஞாயிறு மற்றும் நிலவு கோள்களாக கருதப்படுவதில்லை என்றாலும், இந்திய சோதிட முறைப்படி கணிப்பதற்கு அவை கோள்களாக கருதப்படுகின்றன. முதலில், 7 கோள்கள் மட்டுமே சோதிடத்தில் இருந்துவந்த நிலையில், பின் நாட்களில் ராகு மற்றும் கேது என, அறிவியலில் இல்லாத 2 நிழல் கோள்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த ஒன்பது கோள்களும் மூன்று பாலினமாக பிரிக்கப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை ஆண் என்றும், நிலவு, வெள்ளி ஆகியவை பெண் என்றும், அறிவன், காரி மற்றும் இராகு, கேது ஆகியவை மூன்றாம் பாலினம் என்றும் பிரிக்கப்படுகின்றன. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் தனக்கென உரித்தானதாக ராசிகளை வீடுகளாக அமைத்துக் கொண்டுள்ளதாக இந்திய சோதிடம் கணிக்கிறது. அவை முறையே
செவ்வாய் கோளுக்கு மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள், வெள்ளி கோளுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள், புதன் (அறிவன்) கோளுக்கு மிதுனம் மற்றும் கன்னி ராசிகள், நிலவு கோளுக்கு கடகம் ராசி, ஞாயிறு கோளுக்கு சிம்மம் ராசி, வியாழன் கோளுக்கு தனுசு மற்றும் மீனம் ராசிகள், சனி (காரி) கோளுக்கு மகரம் மற்றும் கும்பம் ராசிகள்.
கோள்கள் பயணிக்கும் திசை
ஞாயிறு நிலவு செவ்வாய் வியாழன் அறிவன் காரி வெள்ளி ஆகிய ஏழு கோள்களும் இடமிருந்து வலமாக தம் பயணத்தை கொண்டிருக்கும். ராகு மற்றும் கேது ஆகியவை வலமிருந்து இடமாக தம் பயணத்தை கொண்டிருக்கும். அங்காரகன் என்பவர் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேடம் மற்றும் விருச்சிகம் ஆகிய இராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சோதிடத்தில் செவ்வாய் கிரகத்தினால் விளையும் நன்மை தீமைகள்
செவ்வாய் என்பது ஜாதகதாரர்களுக்கு நன்மைகளை செய்யும் கோள் என்றாலும் ஒரு சிலருக்கு அது இருக்கும் இடத்தை பொறுத்து தீமைகளையும் செய்யும். செவ்வாய் கிரகத்தால் ஏற்படக்கூடிய தீமைகள் விபரீத விளைவுகளை உண்டு செய்பவையாக இருக்கும். அந்த வகையில் ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் செவ்வாய் எங்கு ஆபத்தான பலன்களை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும். செவ்வாய் உச்சம் பெற்று இருக்கும் பொழுதும், நீசம் பெற்று இருக்கும் பொழுதும் அவருக்குரிய வழிபாட்டை செய்து விட்டால் ஜாதகக்காரர்கள் தப்பித்துவிடலாம். செவ்வாயால் ஏற்படும் தோஷம், அதே செவ்வாய் தோஷத்தால் முறியடித்து விடலாம். இதுபோல செவ்வாயால் வரக்கூடிய பிரச்சனைகளை பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கிறோம். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் அமைந்து விட்டால் அவருடைய வாழ்நாளில் ஒருமுறையாவது உடலில் வெட்டுக் காயத்தை வாங்கிக் கொள்வான். மேலும் லக்னத்தில் செவ்வாய் இருப்பது மிகவும் மோசமான பலன்களை கொடுக்கும். தீராத நோய் தாக்கம், பெற்றோர்கள் இடத்தில் அன்பு இல்லாமல் இருக்கும். மேலும் ஒருவிதமான பயத்துடனும், சுய நலத்துடனும் இருப்பார்கள். நெருப்பினால் ஆபத்து ஏற்படலாம். தலையில் காயம் ஏற்படும். கண்பார்வை பாதிப்புகள் உண்டாகும். தற்பெருமை கொண்டு மற்றவர்களுடைய வெறுப்பிற்கு ஆளாவார்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் இரண்டில் இருந்தால் ‘தவளை தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி உங்களுக்கு தான் பொருந்தும். உங்கள் வாய் தான் உங்களுக்கு எதிரியாக மாறும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் உண்டாகும். எதையும் மனதில் போட்டு வைத்துக்கொள்ள தெரியாமல் வெளிப்படையாக பேசுவதால் பல இடங்களில் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். சிக்கனமாக இல்லாமல் தேவையற்ற செலவுகள் செய்து வறுமையை உண்டாக்கி கொள்வீர்கள். ஜாதகத்தில் செவ்வாய் மூன்றில் இருந்தால் கூடப் பிறந்தவர்களே பிரச்சனைகளை கொடுப்பார்கள். நாலில் செவ்வாய் அமைந்திருந்தால் உடல் ஆரோக்கியம், இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தாயுடைய சாபத்தை வாங்கிக் கொள்வீர்கள். இதயம் தொடர்பான நோய்களும், வாகன விபத்தும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உறவினர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். கல்வியில் மந்தநிலை இருக்கும். செல்வ செழிப்பு உடையவர்களாக இருந்தாலும் நிம்மதி கெடும். ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்தால் சந்ததிகள் உருவாவதில் பிரச்சனை நீடிக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் பகைவர்கள் தொல்லை அதிகமாக இருக்கும். மேலும் ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். ஏழாமிடத்தில் இருந்தால் திருமண பந்தத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறுக்கு வழி பாதையில் புத்தி சென்று வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்வீர்கள். எட்டாமிடத்தில் இருந்தால் ஆயுட்காலம் குறையும். அந்தரங்க நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். திருமணத்தில் நிம்மதி என்பது இருக்காது. பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் விவாகரத்து நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். இல்லற வாழ்வில் மகிழ்வு இருக்காது.
பதினொன்றாம் இடத்தில் திடீரென நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். லாபம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். சிம்மம், கடகம் போன்ற ராசிகளுக்கு 11வது இடத்தில் செவ்வாய் இருந்தால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்கும். இராவணன் மகன் மேகநாதன் பிறக்கும் போது எல்லா கிரகங்களையும் 11ஆம் வீட்டில் அடைத்து வைத்ததாகவும் அந்த சூழலில் பிறந்தால் மேகநாதன் அனைத்து வல்லமை பொருந்தியத்தான, யாராலும் வெல்ல முடியாதவனாகப் பிறப்பான் என நாரதர் சனியிடம் சொல்ல மேகநாதன் பிறக்கும் போது சனி தனது ஒரு காலை 12ஆம் வீட்டில் வைத்ததாகவும் இதை அறிந்த இராவணன் சனியின் காலை வெட்டி வெட்டிவிட்டதாகவும் அதனால் சனி (காரி ) சூரியனை வலம் வர அதிக காலம் எடுப்பதாகவும் ஒரு கதை உண்டு. சூரியனைச் சுற்றி வர சனிக் கிரகம் 29.46 ஆண்டுகள் அதாவது 10755.7 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
செவ்வாய் தோஷமும் பரிகாரமும்
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தகுந்த வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பதில் தாமதத்தை சந்திக்க நேரிடலாம். அதிக செவ்வாய் தோஷம் செவ்வாய் 1, 2, 4, 7, 8 அல்லது 12 ஆம் வீடுகளில் ஜாதக கட்டம். சந்திரன் மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் இருந்தால், அது அதிக செவ்வாய் தோஷமாக கருதப்படும். ஒரு நபர் தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.
இருபாலரும் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தைக் கொண்டிருக்கலாம். இந்த தோஷத்தில் பிறந்தவர்கள் திருமணம் சம்பந்தமாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்கு சரியான துணையை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. உறவில் எதுவும் சரியாக நடக்கவில்லை என்றால், அது விவாகரத்து மற்றும் பிரிவினைக்கு வழிவகுக்கும். இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் எதிர்மறையான தாக்கத்தை நீக்குவதற்கு சில தீர்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதற்கான தீர்வுகளை கீழே உள்ள பட்டியலைப் பார்ப்போம்:
செவ்வாய் தோஷ ஜாதகக்காரர் கும்ப விழா செய்ய வேண்டும். அதற்கு, செவ்வாய் எதிர்மறையான விளைவுகளை நீக்கும் பொருட்டு, அவர்கள் முதலில் ஒரு அரச மரம், வாழை மரம் அல்லது வெள்ளி / தங்க நாணயத்தை திருமணம் செய்ய வேண்டும். செவ்வாய் கிரகத்தின் அனைத்து எதிர்மறையான செல்வாக்கையும் எடுக்கும் மற்றும் ஒரு நபர் செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபடுவார். பிற்காலத்தில் யாருடனும் எந்தத் தீங்கும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷ உள்ள ஒரு பெண்ணின் திருமண வயது சராசரி 28 முதல் 30 வயது வரை. செவ்வாய் கிழமைகளில் அனுமனை வழிபடுவதன் மூலம் செவ்வாய் தோஷத்தின் பாதிப்புகள் நீங்கும். இப்படிப்பட்ட செவ்வாய் தோஷத்தினால் எத்தனை பேர்கள் வாழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டு திருமணம் தடைபட்டுள்ளது.
நம்பிக்கை வேண்டுவது சோதிடத்திலா? அறிவியலிலா?
சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் நிரைக்கோடு (Longitude), அகலக்கோடு (Latitude) மிக மிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம்.
சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், சுனாமி போன்ற பேரழிவு, கொரோன போன்ற பேரழிவு நோய்கள் மூலம் உலக மக்கள் பாதிப்பு, இயற்கையின் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.
உலகில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் வியத்தகு வளர்ச்சி அடைந்து நம் கையில் விரல் நுனியில் வைத்துள்ள முன்னேற்றத்தில் பழமையின் நல்ல பண்பாடுகளை கடைபிடித்தும், மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணை கொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். நம்பிக்கைதான் வாழ்க்கை என்றாலும் மூடநம்பிக்கையைத் தவிர்ப்போம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடைய செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம்! {நன்றி : வாழ்வுரிமை விழிப்புணர்வு - நூல், கூகிள் (Google)}