10 May 2022 8:38 amFeatured
புயல் காரணமாக 12-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசானி புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் தீவிர புயலாக இன்று மாறியுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் நோக்கி நகர்ந்து வலுப்பெற்ற நிலையில் மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் இன்று நகர்ந்தது.
இது மேலும் தெற்கு வங்ககடல் பகுதியில் நிக்கோபார் தீவில் இருந்து 870 கி.மீ தொலைவிலும், போர்ட்பிளேயருக்கு மேற்கு வடமேற்காக 730 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் ஒடிசா பூரிக்கு தெற்கு தென்கிழக்கே 680 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த தீவிர புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியை புயல் நெருங்கும். நாளை 10-ந் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியை நெருங்கக்கூடும்.
அங்கிருந்து ஒடிசா கடல் எல்லையை ஒட்டிய வடமேற்கு வங்க கடலை அடையலாம். இது அடுத்த 48 மணிநேரத்தில் படிப்படியாக வலுவிழக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல் காரணமாக ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும். 11ந்தேதி ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.
தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக 12-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.