பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் மூன்றாவது பொதுப் பேரவை கூட்டம்- பத்லாபூர் தமிழர் நலச் சங்கத்தின் பொதுப் பேரவை 22.09.2019 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் “பி" விங், பக்தி பார்க், போஸ்லே நகர், சிர்காவ், பத்லாபூர் கிழக்கில் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எஸ். அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கீழ்க்காணும் பொருள்கள் பற்றி விவாத்திற்குப் பின் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
- நவம்பர் 2017 முதல் மார்ச் 2019 வரையிலான நடைமுறைக் குறிப்புகள் / ஆண்டு அறிக்கை பொருளாளர் திரு ஜே. எபினேசர் வாசித்து ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 2017 - 2018 & 2018-2019 ஆம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட சங்க வரவு-செலவு கணக்குகளை திரு ஜே. எபினேசர் விளக்கம் அளிக்க விவாத்திற்குப் பின் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
- 28.07.2019 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்ட புதிய பொருளாளர் திரு ஜே. எபினேசர் அவர்களையும் மற்றும் நிர்வாகக் குழு, ஆலோசகர் குழுவையும் பொதுப் பேரவை ஏற்று அங்கீகரித்தது.
திருவள்ளுவரின் “திருக்குறள்” தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்
கீழ்க்காணும் தீர்மானம் திரு இரவிக்குமார் ஸ்டீபன் முன்மொழிய, முனைவர் வெங்கட் ரமணி வழி மொழிய ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான நூல். சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு உலக முழுமைக்கும் ஒத்துவரக் கூடிய வாழ்க்கை வழிகாட்டி. வாழ்க்கைக் கலையில் அறம் பொருள், இன்பம் என்னும் முப்பாலை நினைந்தூட்டும் நூற்பெட்டகம் திருக்குறள். திருக்குறள் தமிழினத்தினர் மட்டுமல்ல அனைத்து மொழி அனைத்து உலகவாழ்வின் நெறிமுறைகளிலும் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய பொதுவான நெறிமுறைகள் கொண்டது.
உலக மொழிகளில் மூத்த முதன் மொழியாம் தமிழ் மொழியில் திருவள்ளுவரின் அறம், பொருள், இன்பம் எனும் முப்பால், 133 அதிகாரங்களில் 1330 அருங் குறட்பாக்களைக் கொண்டு உலக மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாவது இடத்தைப் பெற்று அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள சாதி, மத, பேதமற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் அறநெறி புகட்டும் பொது நூல்.
"ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்று அதன்பின் போய் ஒருத்தர் வாய்கேட்க நூலுமுளவோ" என்ற நந்தனார் வாக்கிற்கிணங்க சிறப்புடைய திருவள்ளுவரின் “திருக்குறள்” தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த பொதுப் பேரவை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
- Mediclaim (மெடிகிலைம்} சங்க ஆயுள் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு காப்பீடு Group Insurance மற்றும் ஆயுள் / ஆண்டு சந்தா உறுப்பினர்களின் தனி காப்பீட்டிற்கும் உறுப்பினர்களின் விருப்பதிற்கிணங்க முயற்சிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
- வருகிற 26..01.2020 அன்று முப்பெரும் விழா கொண்டாடவும் மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்தியும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு பரிசுகள் திருக்குறள் நூற்கள், சான்றிதழ்கள் வழங்கவும் ஆலோசகர் திரு எஸ். கோவிந்தராசு முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றியது.
தென்னரசுக்கும் நன்றி!?
- தினத்தந்தி, தினகரன் நாளிதழ்கள், வணக்கம் மும்பை வார இதழ், மற்றும் தமிழ் அறம், தென்னரசு.நெட் ஆகிய இணைய தள ஊடகங்கள் சங்க செய்திகள் வெளியிட்டுதவுவதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வெங்கடேஷ் அவர்கள் நன்றி கூற அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்த ஆலோசகர் திரு கணேஷ் கண்ணன் அவர்களுக்கும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பேரவையில் எஸ். அருணாச்சலம், திரு ஜே. எபினேசர், திரு அ. அகஸ்டின், திரு டி. வெங்கடேசன், திரு எஸ். கோவிந்தராஜ், திரு கணேஷ் கண்ணன், இரவிக்குமார் ஸ்டீபன், முனைவர் வெங்கட் ரமணி, சுபாஷ் சந்திரன், எஸ்.ஏ. முருகானந்தம், பத்மப்ரியா கோவிந்தராஜ், ஜி.விஜயலக்ஷ்மி, என். அலமேலு, ஜி.ஆர்த்தி, வி. சசிகலா, வி.சௌமியா, டி. மலர், கரண் கணேஷ் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.