19 Apr 2022 10:43 pmFeatured
மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்குப் பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை புரிந்தார்.
தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரதம் செல்ல இருந்தது. இதை இன்று ஆளுநர் ரவிதான் ஆதீனத்தில் துவங்கி வைத்தனர். இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்கக் கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர். ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் செய்தன.
காவல்துறை விளக்கம்
ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியைக் கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இதற்கிடையே ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தச் சூழலில் இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகளை வீசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள காவல் துறை, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்து இருந்ததாகவும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியதாகவும் கூறியுள்ளது.
மேலும், ஆளுநரின் வாகனம் மற்றும் இதர வாகனங்கள் காலை 9.50 மணிக்கே ஏவிவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கடந்துவிட்டது என்றும் ஆளுநர் ரவியின் கான்வாய் முற்றிலும் சென்ற பிறகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளை வீசி எறிந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆளுநர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை சார்பில் அத்துறையின் கூடுதல் இயக்குநர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்பு மூன்றடுக்கு இரும்பு தடுப்புகள், பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆளுநரின் கான்வாய் கடந்து சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசி எறிந்தனர். ஆனால் அவ்வாறு வீசப்பட்டவை ஆளுநரின் வாகனம் மீது வீசப்பட்ட வில்லை. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆளுநருகே நாட்டில் பாதுகாப்பில்லை. தமிழக முதல்வர் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்' என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்
இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் பதவி விலக வேண்டும் என அண்ணாமலையும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.