22 Feb 2021 11:22 amFeatured
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் வகையில் நடைபெறும் அரசியல், மத மற்றும் சமூக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவும் உத்தரவு
பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கேரளா போன்று மகாராஷ்டிராவிலும் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பை, கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நகராக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் அடுத்த 8 முதல் 15 நாட்களுக்கு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
ரூ.1 லட்சம் அபராதம்
கொரோனா விதிமுறைகளை மீறி திருமண விழாக்களில் 50-க்கும் மேற்பட்டோர்களை அனுமதிக்கும் அரங்குகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் முறையை பரிசீலித்து வருகிறோம். உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் உட்பட மாவட்ட நிர்வாகங்களை தங்கள் பகுதிகளில் உள்ள நிலைமைகளைப் பொறுத்து இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்த கேட்டுக்கொள்வோம். ஊரடங்கு உத்தரவின் போது, திருமண அரங்குகள், சந்தைகள், தியேட்டர்கள் என கூட்டம் கூடும் அனைத்து இடங்களும் மூடப்படும் என்று விஜய் வதேட்டிவார் கூறினார்.
மஹாராஷ்ட்ரா முதல்வர் பேச்சு
இது குறித்து மஹராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், "கடந்த சில நாட்களாகவே மும்பையில் வைரஸ் பரவல் இரட்டிப்பாகியுள்ளது. மாநிலத்தில் வைரஸ் பரவல் மிகவும் மோசமாக உள்ளது. மீண்டும் இங்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமா என்பதைப் பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால், ஊரடங்கு தேவைப்படாது.
இரண்டாவது அலை ஏற்படுகிறதோ இல்லையோ அடுத்த 8 முதல் 15 நாட்களில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பது தெரியவரும். பொதுமக்கள் முறையாக மாஸ்க்குகளை அணிந்து கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதைத் தவிர வேறுவழி இல்லை" என்றார்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ள மாவட்டங்களில் நிலைமையைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவலைக் குறைக்க ஊரடங்கு உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்தக் குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் வகையில் நடைபெறும் அரசியல், மத மற்றும் சமூக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொது நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கிய நபர்கள் மட்டும் கலந்துகொண்டால் போதும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கொரோனா பரவல் அதிகரித்ததால் அமராவதி நகரில் மகாராஷ்டிர அரசு ஒரு வாரம் ஊரடங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.