19 Feb 2021 9:03 amFeatured
அமராவதி யவத்மல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில், மகாராஷ்டிராவின் அமராவதி, யவத்மால், அகோலா போன்ற இடங்கள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. மராத்வாடா பிராந்தியத்தின் நந்தேட், லாதூர், பீட் மற்றும் ஹிங்கோலி போன்ற பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
மகாராஷ்டிராவின் அமராவதியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 20 இரவு 8 மணி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷைலேஷ் நாவல் இன்று அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 21 ஞாயிற்றுக்கிழமை அன்று அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து சந்தைகள், அலுவலகங்கள், கடைகள் மூடப்படும். “அதிகரித்து வரும் பாதிப்புகள் காரணமாக, அமராவதி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அமராவதி மாவட்ட ஆட்சியர் ஷைலேஷ் நாவல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசு 36 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களிடம் அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அமராவதியின் மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
யவத்மால் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 28 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். உணவகங்கள், செயல்பாட்டு அரங்குகள் மற்றும் திருமண விழாக்கள் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கூட்டம் அனுமதிக்கப்படாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்திலும், தலைநகர் மும்பையிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுதல், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹல் தெரிவித்துள்ளார்
மும்பையில் ரயில்களில் மாஸ்க் போடாமல் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 300 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் குறைந்தது 25,000 பேர் மீது நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபங்கள், கிளப்புகள், உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து கொரோனா நோயாளிகளுக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்.