02 Aug 2019 9:51 amFeatured
திராவிடர் கழக தலைவர். கி.வீரமணி அவர்கள் அறிக்கை
நன்றி : VIDUDHALAI.IN
கேரள மாநிலம் கொச்சியில் நடை பெற்ற பிராமணர்கள் மாநாட்டில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதியும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். சட்ட விரோதமாக இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், பிராமண ஜாதி வெறியைத் தூண்டியும் உரையாற்றிய நீதிபதி மீது உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பி, குற்றத்தாக்கீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
"இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கொடுக்கப்படுகிறது, இதன்மூலம் பதவிகள் வழங்கப்படுகின்றன. இது எனக்கு உடன்பாடில்லை. இது எனது சொந்தக் கருத்து ஆகும். ஆனால், நான் எனது கருத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறேன்.
உயர்ஜாதியினருக்கான பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம், ஒரு ஏழை சமையற்கார பிராமணரின் மகனுக்கு எவ்வளவு திறமையாக கல்வி மதிப் பெண்கள் இருந்தும் அவனுக்கு எந்த ஒரு பணியும் கிடைக்காது, அதே நேரத்தில் பல உயர்பதவிகளில் இருக்கும்.இட ஒதுக்கீட் டிற்குள் வரும் பிரிவினரின் மகனுக்கு எளிதாக அரசுப்பணி உயர்கல்வி கிடைத்து விடுகிறது, எடுத்துக்காட்டாக நல்ல வருவாய் கொண்ட ஒரு மரவியாபாரி தனது மகனை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் காரணத்தால் உயர்கல்வி மற்றும் வேலை எளிதாக கிடைத்துவிடுகிறது. பிராமணர்கள் என்றுமே அடாவடித் தனத்தில் இறங்காதவர்கள். அவர்கள் கருணை மனம் கொண்டவர்கள். வன் முறையை வெறுப்பவர்கள். அவர்கள் கருணை உள்ளம் கொண்டு மக்களோடு மக்களாக பழகுபவர்கள். அவர்களுடைய சமூக அர்ப்பணிப்புப் பாரட்டப்படவேண்டிய ஒன்று, இங்கு தமிழ் பிராமணர்கள் தலைமையில் நாம் ஒன்று கூடி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும் இந்த சந்திப்பு வரலாற்று திருப்பு முனையாக இருக்கும். நாம் சென்ற பிறவியிலும் பிராமணர்கள் தான், இப்பிறப்பிலும் பிராமணர்கள் தான், காரணம் நமது நல்ல பண்பும், கருணை மற்றும் கடவுளுக்கு அர்ப்பணித்து வாழும் வாழ்க்கையும் ஆகும், யார் பிராமணர்கள் என்று என்னிடம் கேட்டால் அவர் எடுக்கும் அனைத்துப் பிறவியுமே பிராமணராகத்தான் பிறப்பார்கள் அவர்கள் தான் பிராமணர்கள். அவர்களுக்கு என்று சிறப்பான குணம், தூய உள்ளம், கபடமற்ற சிந்தனை, சைவ உணவை உட்கொள்ளுதல், கர்நாடக இசையை விரும்பிக் கேட்பவர்கள் இவர்கள் தான் பிராமணர்கள், இந்த நல்ல குணம் அனைத்து பிராமணர்களிடமும் உள்ளது.
நமது அடையாளம் நமது வசிப்பிடம் நமது வசிப்பிடங்கள் அக்ரகாரங்கள்' தற்போது பறிபோய்க்கொண்டு இருக் கின்றன. அக்ரகாரம் நமக்கான வசிப்பிடம், ஆனால், அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு வருகின்றன. கீழ் ஜாதியினர் உள்ளே நுழைந்து அதை பாழ்படுத்திவருகின்றனர். (இங்கே) கேரளாவில் எண்ணற்ற அக்கிரகாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதன் மூலம் பிராமணர்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு உள்ள அக்ரகாரங்கள் பில்டர்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. அவர்கள் அதை அடுக்குமாடிகள் கட்டி பலருக்கு விற் பனைக்கு விட்டு லாபம் பார்க்க முடியாது, அக்ரகாரம் என்பது பிராமணர்களுக்கானது மட்டுமே.''
இவ்வளவையும் பேசி இருப்பவர் பிராமணர்களின் சங்கத் தலைவரோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியினரோ அல்லர். மாறாக கடந்த 19.7.2019 வெள்ளியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின்' உலக மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.சிதம்பரேஷ் அவர்கள் ஆற்றிய உரையின் சாரம்தான் இது.
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு அவர்களின் கருத்து
இந்த வார ஜூனியர் விகடன்' இதழில் (31.7.2019, பக்கம் 12-14) சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு அவர்கள் "சாதியரசர்களா....? நீதியர சர்களா?'' எனும் தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.
நீதிபதிகள் சாதி மாநாடுகளுக்குச் செல்ல முற்படுவது முறையாகாது. இதனால், நீதிமன்றங்கள் சாதிக்கேற்ப நீதியளிக்கும் மன்றங்களாக மாறக்கூடிய ஆபத்துள்ளது.''
1999 ஆம் வருடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதி வாழ்க்கையில் கூறப்பட்ட விழுமியங்கள்பற்றி ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் 16 ஆவது உறுதிமொழி, ஒரு நீதிபதி தான் எப்போதும் பொதுமக்கள் பார்வையில் இருக்கிறேன் என்ற உணர்வுடன் செயல்படவேண்டும். தன்னுடைய நடவடிக்கை எக்காரணத் தாலும் தான் வகித்துவரும் பதவிக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த விழுமியங்களை அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மனுதர்மத்துக்கு இடமில்லை
எந்த சாதி மாநாடாக இருப்பினும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்போர் மட்டுமல்ல, எந்த ஒரு நீதிபதியுமே கலந்துகொள்ளக் கூடாது; இந்த நாட்டை நடத்திச் செல்வது அரசமைப்புச் சட்டம் மட்டுமே. அதில் மனுதர்மத்துக்கு இடமில்லை என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்..''
குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவரும் படீதார் என்கிற நீதிபதி தன் தீர்ப்பு ஒன்றில், "பொருத்தமற்ற இட ஒதுக்கீடுதான் இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது. அதை ரத்து செய்யவேண்டும்'' என்று முத்து உதிர்த்திருந்தார். அவர்மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்ட அவரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும்' என்று கண்டனத் தீர்மானம் ஒன்றை அவைத் தலைவரிடம் சமர்ப்பித் தனர். அதைப் பார்த்தவுடன் ஆட்சேபனைக்குரிய தன் கருத்துகளைத் தீர்ப்பிலிருந்து படீதார் நீக்கினார்'' என்று சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு அவர்கள் அழுத்தமாகத் தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
மேனாள் நீதிபதியே ஆதாரப்பூர்வ மாகவும், சட்ட ரீதியாகவும் கருத்துகளை எழுதியுள்ளார்.
இதில் மிக முக்கியமாகக் கவனிக்கத் தக்கது, பிராமணர்கள் நீதிபதிகளாக இருந்தாலும், அந்தப் பிராமண உணர்வோடு, ஜாதி வெறியுடன்தான் இருக்கிறார்கள் என்பதாகும். வேறு பிரச்சினைகளில் மாறுபாடான கருத்துக் கொண்டவர்களாகக் கூட இருப்பார்கள். சமுகநீதி என்று வந்துவிட்டால் சுருதி பேதம் இல்லாமல் ஒரே குரலில் வாசிப்பார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
ஒரு பிராமண மாநாட்டில் பச்சையாக தாம் ஒரு பிராமணர் என்றும், இரு பிறப்பாளர்'' (துவிஜர்) என்றும், அக்கிரகாரம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் எந்தப் பிறவியிலும் பிராமணர்கள், பிராமணர்களே என்றும், வெறியின் உச்சத்தில் துள்ளிக் குதித்துப் பேசியதோடு அல்லாமல், அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமாக இட ஒதுக்கீட்டைப்பற்றியும் எதிர்த்துப் பேசியுள்ளாரே - இதன்மீது மத்திய அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? என்பது நியாயமாக நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான ஒன்றாகும். அக்ரகாரத்தில் கீழ்ஜாதியினர் நுழைந்துவிட்டனர் என்று கீழ்ஜாதி என்ற சொல்லையும் பயன் படுத்தியுள்ளார் ஒரு நீதிபதி என்பது எவ்வளவு கீழிறக்கம்!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து அவையில் பிரச்சினை எழுப்பிட வேண்டும். குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையும் சந்தித்து இது முறையல்ல என்பதை வற்புறுத்தவேண்டும். குற்றத் தின்மீதான நடவடிக்கைகளை (Impeachment) எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தவேண்டும்.
இது ஏதோ ஒரு கட்சி பிரச்சினையோ, ஜாதி, மதப் பிரச்சினையோ அல்ல, அல்லவே அல்ல - நீதிப் பிரச்சினை!
அரசமைப்புச் சட்டத்தைச் சார்ந்த ஒரு பிரச்சினை. இதில் சட்டம் தன் கடமையைச் செய்யாவிட்டால், வேலியே பயிரை மேய தாராளமாக அனுமதித்துவிட்டால், எவரும், எப்படியும் எந்த எல்லைக்கும் செல்லலாம் - சட்டத்தை மீறலாம், ஜாதி வெறியைத் தூண்டலாம் என்ற நிலை ஏற்படுமேயானால், அத்துமீறல்களும், சட்ட மீறல்களும், குழப் பங்களும் (Anarchy) சர்வ சாதாரணமாக அரங்கேற தங்கு தடையின்றிக் கதவை அகல திறந்துவிட்டதாக ஆகிவிடும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அனிதா சுமந்த்தும் அம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். ஒரு நீதிபதி ஜாதி சங்கத்தில் - மாநாட்டில் கலந்துகொள்ள சட்டத்தில் இடம் உண்டா? என்பது முக்கிய கேள்வியாகும். இதையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
30.7.2019