29 May 2022 1:04 pmFeatured
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழுவுருவ சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (28/05/2022) திறந்து வைத்தார். அதற்கான நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ள நிலையில் முதல்வர் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கலைஞரின் 16 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி, ஏ.வ.வேலு அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக தொண்டர்களும் திமுக கொடியுடன் குவிந்திருந்தனர்.
சிலை திறப்புக்கு பின்னர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், வெங்கையா நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
ரூபாய் 1.70 கோடி மதிப்பில் 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, கலைஞரின் வெண்கலச் சிலை
12 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலைக்கு கீழே
* வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்
* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
* இந்தி திணிப்பை எதிர்ப்போம்
* மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
சிலைத் திறப்பு விழாவின் நிகழச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசுகையில் வணக்கம் என்று
தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்
இந்தியாவில் பெருமைமிகு முதல்வர்களில் ஒருவர் கருணாநிதி. என்னுடைய இளம் வயதில் கருணாநிதியின் உரைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.
இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் கலைஞர். அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர் கலைஞர். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர்; நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர்.”
ஒடுக்கப்பட்ட மக்கள் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்
கருணாநிதி. கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய அரசியல் பயணத்தில் மிக நீண்ட காலம் கருணாநிதியுடன் பயணித்திருக்கிறேன்.
என்னுடைய மனதிற்கு நெருக்கமான இடம்
சென்னை என்னுடைய மனதிற்கு நெருக்கமான இடமாகும்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
என்ற குறள் கருணாநிதிக்கு பொருந்தும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாகக் கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கருணாநிதி.
“நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்கள் பணியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அத்தனை கட்சிகளும் மக்களுக்காகதான் பணியாற்றுகின்றனர். அதனால், சிந்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் பணியாற்றும் விதம் வேறாக இருந்தாலும், யாரும் யாருக்கும் எதிரி அல்ல என்பதை தற்போதைய அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.” என்றும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
வெவ்வேறு சித்தாந்தங்களில் கட்சிகள் கட்டமைக்கப்பட்டாலும் அவரவர் பாணியில் அவர்கள் மக்களுக்காகதான் பணியாற்றுகிறார்கள் என்பதை மறக்க கூடாது. அதனால் யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
தாய்மொழி தாய்மொழி, தாய்நாடு ஆகியவைவே மிகவும் முக்கியமானது. எந்த மொழியையும் திணிக்க கூடாது, எந்த மொழியையும் எதிர்க்க கூடாது என்பது எனது கொள்கை. தாய்மொழி மீது அனைவருக்கும் பற்றுதலும், அன்பும் இருக்க வேண்டும். தாய்மொழியின் வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது பார்வைக்கு சமமானது என்று சுட்டிக்காட்டிய வெங்கையா நாயுடு,
“பார்வை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ, அதுபோன்ற நிலையே தாய் மொழியை இழந்தால் ஏற்படும்.
மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது. தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். ஆனால், எந்த மொழியையும் திணிக்க கூடாது.” என்று வலியுறுத்தினார்.
அரசியல் வேறுபாடுகளை கடந்து மத்திய - மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். சாதி, மதம், பாலினம், பிராந்திய வேற்றுமைகள் இருக்க கூடாது. மாநிலங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். மாநிலங்களின் வளர்ச்சியின்றி நாடு முன்னேற்றம் அடையாது. இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
உங்களுடைய வீடுகளில் தாய்மொழியிலேயே பேசுங்கள். மம்மி.. டாடி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். அம்மா… அப்பா என்று இதயத்தில் இருந்து பெற்றோர்களை அழையுங்கள். பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றாலும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். தமிழ், தமிழ் காலச்சாரத்தை பெரிய அளவில் ஊக்குவித்தவர் கருணாநிதி.
வேஷ்டி சட்டை அணிய நான் மிகவும் விரும்புகிறேன்
நான் ஆடை அணிவது பற்றி பலரும் பேசுகின்றனர்.. வேஷ்டி சட்டை அணிய நான் மிகவும் விரும்புகிறேன்.
உலக நாடுகள் பலவற்றிக்குப் போனாலும் நான் இந்த உடையை உடுத்துகிறேன். பல நாட்டு மக்களும் என்னுடைய உடையை பாராட்டுகின்றனர். தமிழக மக்கள் தங்களின் கலை, கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. எனது மொழிக்கு நான் ஆதரவானவன். விவசாயிகள் நலனுக்காக உழவர் சந்தையை நிறுவியவர் கருணாநிதி. கருணாநிதியின் முழு உருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி.
என்னை அழைத்தமைக்கு நன்றி என்னுடைய பல நண்பர்களை இந்த விழாவில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி இதுதான் கலாச்சாரம் இதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா.
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என்று கூறி சிறப்பு உரையை முடித்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் போராடி வரும் நிலையில் வெங்கையா நாயுடு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.