21 Jun 2022 1:30 amFeatured
கடந்த மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் தமிழ் பாடத்தில் முதல் முறையாக நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் எடுத்து திருச்செந்தூரைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளி மாணவி சாதனைப்படைத்துள்ளார்.
செல்வகுமார்-ஹேமா தம்பதியரின் மகளான மாணவி துர்கா திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
இவரது தந்தை செல்வ குமார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக பணியாற்றிவருகிறார். மாணவியின் அண்ணன் ராகுல், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதுகுறித்து மாணவி துர்கா கூறுகையில், ''ஆங்கிலவழி கல்வியில் படித்தாலும் தாய்மொழி தமிழ் பாடத்தை ஆர்வமாக படித்தேன். தமிழ் ஆசிரியை செல்வி பாடங்களை நன்கு புரியும்படி எளிமையாக கற்று தந்ததுடன் அடிக்கடி தேர்வுகளை நடத்தினார். இதனால் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற முடிந்தது. எதிர்காலத்தில் வேளாண்மை துறையில் மேற்படிப்பு படித்து, சாதனைகள் புரிவதை லட்சியமாக கொண்டுள்ளேன்'' என்றார்
“பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது. ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைப்பதன் மூலம் போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார் செய்ய முடியும்.
மேலும், தனது பள்ளியில், ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்று ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதில்லை. தமிழ் பாடங்களை படிப்பதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். வேளாண் துறை சார்ந்த படிப்புகளை படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என பூரிப்புடனும், உற்சாகத்துடனும் கூறியுள்ளார்.
தமிழ் பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி துர்காவை பள்ளி மூத்த முதல்வர் செல்வ வைஷ்ணவி, முதல்வர் ஜீனத், தமிழ் ஆசிரியை செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர் அத்துடன் ஆசிரியர்கள், சக மாணவிகள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் மொழி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் முயன்றால் அதுவும் சாத்தியம் என்பதை மாணவி துர்கா நிரூபித்து காட்டியுள்ளார்.
சாதனை மாணவி துர்காவுக்கு தென்னரசு மின்னிதழ் தனது வாழ்த்துகளையும் பாரட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.