14 Jul 2020 12:00 pmFeatured
உலகைப் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கததை அதிகப்படுத்தியது. குறிப்பாக இந்நோய் தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நூறு கோடி பணச் செலவில் மகாராஷ்டிர மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அதிகாரி திருமிகு. டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ் அவர்கள் பம்பரமாக சுழன்று நிவாரண உதவி வழங்கி வருகிறார்கள்
மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமமும், தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்களும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு முழு வீச்சில் துணை நின்றன.
கொரோனாவின் காரணமாக ஊரடங்கால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான அனைத்து விதமான மக்களுக்கும் பல்வேறு சேவைகளை கடந்த மூன்று மாதமாக செய்து வருகிறார் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள்
எம். ஐ. டி. சியின் முக்கிய பங்கு
மகாராஷ்டிரா மாநில அரசுக்கு முக்கிய பங்காக மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள் தொழிற்பேட்டை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்று 107 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பிலும் 11 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநில அரசுக்கு வருவாயை அதிகரிக்க எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இலவசமாக வினியோகித்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமம் சார்பில் இலவச உணவுப் பொட்டலங்கள் மட்டுமே வினியோகித்து வந்தார். மக்கள் படும் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உணவு தானியங்களை வினியோகிக்க முடிவு செய்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எம்.ஐ.டி.சியை சார்ந்துள்ள நிறுவனங்களின் அதிபர்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பொது முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பசிப்பிணியாற்றும் பணியை டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். செய்து வருகிறார்.
முதல் கட்ட உணவு தானிய பொருட்கள் விநியோகம்
உணவு பொருட்கள் வினியோகம் குறித்து பல்வேறு தொழிற்பேட்டை நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களும் உணவு தானியங்களை வினியோகிக்க முன் வந்தனர். முதற்கட்டமாக 15,000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 1.50 கோடி செலவில், 3 லட்சம் கிலோ உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மூலமாக மகாராஷ்டிராவின் ஹிங்கோலி, அக்கோலா, சத்தாரா, சோலாப்பூர், கோலாப்பூர், ரோகா, அலிபாக், புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சேர்த்தார். இந்த உயரிய பணியில் எம்.ஐ.டி.சியின் அரசு அதிகாரிகள், தொழிற்பேட்டை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் முழு மூச்சாக செயல்பட்டார்கள்.
கடந்த மூன்று மாதங்களாக மும்பையின் தாராவியின் பல்வேறு பகுதிகள், மாகிம், மாட்டுங்கா, ஜெரிமேரி, ஒர்லி, மார்க்கண்டேஷ்வர் நகர், ஆனந்த் நகர், ரே ரோடு, சிவ்ரி, அந்தேரி, கோரேகாவ், மலாடு, வில்லே பார்லே, கல்யாண், தானே, காந்திவலி, அம்பர்நாத், குண்டோலி, சீத்தாகேம்ப் நாலாசோப்பாரா, தலோஜா எம்.ஐ.டி.சி, துர்பே நாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் முதற்கட்ட உணவு தானியங்கள் வினியோகம் சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே புனே, மாலேகாவ், அவுரங்காபாத் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவியது. இதனால் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் உணவுக்காக கஷ்டப்பட்டு வருவது தெரிய வந்தது. உடனடியாக எம்.ஐ.டி.சியின் மூலமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவு பொட்டலம் மற்றும் உணவு தானிய பொருட்கள் வழங்கிட ஏற்பாடு செய்தார்.
இரண்டாம் கட்ட உணவு தானிய பொருட்கள் வினியோகம்
மும்பையில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே ஆகப்பெரிய குடிசை பகுதி தாராவி, மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் பகுதிகளில் முதல் இடத்தில் இருந்தது. இதனால் மக்கள் உயிர் அச்சத்துடனேயே தங்கள் வாழ்நாளை கடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உணவின்றி குடிசைக்குள் முடங்கிப் போயினர். தாராவி வாழ் மக்களின் பெருந்துயரத்தைக் கண்ணுற்ற முனைவர் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள் அம்மக்களின் பசிப்பிணி போக்க இரண்டாம் கட்டமாக உணவுப் பொருட்களை வழங்குவதென்றும் முடிவு செய்தார். இதனையடுத்து, இரண்டாம் கட்ட உணவு வினியோக சேவை மே 25-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் ஐயா அவர்களும், மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். மற்றும் எம்.ஐ.டி.சியின் சக அதிகாரிகளும், கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
முதலில் தாராவியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக 2,00,000 கிலோ உணவு தானியங்களை எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக அனுப்பி வைத்தார். இந்த உதவியினால் சுமார் 10,000 குடும்பங்கள் பயன் பெற்றார்கள். இதில் பெரும்பான்மையான தமிழ் குடும்பங்கள் பயன் அடைந்தார்கள். தாராவி தவிர மற்ற பகுதிகள் ஜெரிமேரி, அந்தேரி சாக்கி நாக்கா, ஆரே காலனி, ஒர்லி, மீரா ரோடு, கல்யாண், அம்பர்நாத் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தமிழர்களுக்கும் உணவு தானிய பொருட்களை வழங்கினார்
அவுரங்காபாத் கொரோனா சிகிச்சை மையம்
அவுரங்காபாத் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டைக்குள் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த மையத்தில் 250 படுக்கைகள் உள்ளது. இதற்கான பணிகள் 21 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பணியை மகாராஷ்டிரா தொழில் வள்ர்ச்சி கழகம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
ஜுன் மாத தொடக்கத்தில் சிறப்பு மருத்துவமனை மையம், மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் பொன். அன்பழகன் ஐ. ஏ.எஸ். அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்டு, மகாராஷ்டிரா மாநில முதல்வர் மாண்புமிகு உத்தவ் தாக்கரே அவர்களால் திறக்கப்பட்டது
வைரோலோஜி (கிருமி) ஆராய்ச்சி மையம்
மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். அனுமதிக்குப் பின் கிருமி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக தொழில் நுட்ப இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படவேண்டும். அதற்கான தொகை ரூ. 1.60 கோடி ஆகும். வைரோலோஜி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக பி.எம்.ஐ.சி. ஆடியோசிட்டி அல்லது இண்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் லிமிடெட் நிறுவனம் சி.எஸ்.ஆர். நிதி மூலம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கிருமி ஆராய்ச்சி மையம் கட்டப்பட உள்ளது
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு சிறப்பான சேவைகள்
கண்ணுக்குப் புலப்படும் மக்கள்… ஆனால், நம் கருத்துக்குப் புலப்படாத மக்கள்…’ இந்திய தேசத்துக்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது கொரோனாதான். பிழைக்க வந்த இடத்தில் அகதிகளாக இம்மக்கள், அதுவும் சொந்த நாட்டிலேயே அல்லல்பட்டது கொரோனா நோயைவிட கொடுமை. ‘‘இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள்தான். ஒரு மனிதன் நோயால் இறந்தால் மரணம். பட்டினியால் இறந்தால் அதை கொலை என்றுதான் சொல்ல வேண்டும்…’’ ‘இந்தியாவிற்குள் சுமார் 13 கோடிப் பேர் வேலைக்காக பல்வேறு மாநிலங்களுக்கும் மாநிலங்களுக்கு உள்ளேயும் இடம் பெயர்கின்றனர். இடம்பெயர்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்களைச் சொந்த இடத்திலிருந்து எது வெளியே தள்ளுகிறது..? அடுத்து , அப்படி தள்ளப்பட்டவர்களை எந்த இடம் ஈர்க்கிறது..? ஈர்க்கும் மாநிலங்களாக முதலிடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது,.
பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியுள்ள தமிழர்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாது நிலை ஏற்பட்டது. சாங்கிலியில் மார்க்கெட்டிங் வேலைக்கு சென்றிருந்த தமிழர்கள் 480 பேர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இளைஞர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பல தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். அந்த இளைஞர்கள் அவதிப்படுவது குறித்து மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞர்களுக்கு சிறப்பான உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கிட அந்த பகுதியில் உள்ள எம்.ஐ.டி.சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக மருத்துவ குழுவும் வந்து அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ சோதனையும் செய்தது. கையில் காசில்லாத நிலையில் உடலாலும், மனதாலும் பாதிக்கபட்டிருந்த அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையும் எம்.ஐ.டி.சி அதிகாரிகள் வழங்கிடவும் ஏற்பாடு செய்தார். கொரோனா பரவல் குறித்து, மாவட்ட நிர்வாகத்துடனும், இளைஞர்களுடனும், சமூக ஆர்வலர்களுடனும் பேசி நிலவரங்களை கேட்டறிந்தார். பேருந்து மூலம் சொந்த ஊருக்கு செல்ல முடியும் என அறிந்தார். அவ்வாறு பேருந்தில் பயணிக்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்றும் அறிந்து, பேருந்துகளுக்கான போக்குவரத்து செலவை எம்.ஐ.டி.சியை சார்ந்த தொழில் நிறுவனங்களிடம் பேசி ஏற்பாடு செய்தார். அதன்படி போக்குவரத்து செலவுக்கான ரூ. 18 லட்சத்தை எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மகிழ்ச்சியுடன் முன்வந்து ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. அந்த பணத்தை போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தினார்.
இதனையடுத்து, சாங்கிலியில் உள்ள மைதானத்திற்கு 480 பேரையும் வரவழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்யப்பட்டன. அதன்பின்பு அவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றியும், சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றியும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இளைஞர்கள் 480 பேரையும், 18 பேருந்துகளில் சேலம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு
தேவையான உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்த மாவட்ட எம்.ஐ.டி.சியை சார்ந்த தொழிற்பேட்டை நிறுவனங்களும், அதிகாரிகளும் செய்து கொடுத்தனர். அவர்கள் அனைவரும் மே 9-ஆம் தேதி சேலம் சென்றடைந்தனர். அந்த பேருந்துகளில் பயணித்த 480 பேருக்கும் கொரோனா தொற்றோ அல்லது அறிகுறியோ ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி
புனேயில் சிறப்பான ஏற்பாடு
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதன் காரணமாக பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தவித்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மே மாதம் 18-ஆம் தேதி புனேயிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டு புறப்பட்டுச் சென்றது. இந்த இரயிலில் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட், புனே, நாசிக், ரத்னகிரி, சோலாப்பூர், கோலாப்பூர், நாண்டெட் ஆகிய 7 மாவட்டங்களில் தவித்து வந்த 1400க்கும் அதிகமானோரை பேருந்துகள் மூலமாக புனேவுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் பழங்கள், பிஸ்கட், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு புனேயிலிருந்து திருநெல்வேலிக்கு ம்.ஐ.டி.சி அதிகாரிகள் மூலமாக அனுப்பி வைத்தார். இதற்காக சுமார் 35 லட்சம் ரூபாய் செலவானது. அந்த முழு தொகையையும் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்களின் முழு சம்மதத்துடன் செலுத்தினார்.
சோலாப்பூர் இரயில் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு பசிப்பிணியாற்றி மகிழ்ச்சியோடு அனுப்பி வைப்பு
மே 28-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட இரயிலில் 1400க்கும் அதிகமானோர் பயணித்தனர். அவர்களுக்கும் சோலாப்பூர் இரயில் நிலையத்தில் தேவையான உணவு பொட்டலங்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை எம்.ஐ.டி.சி அதிகாரிகள் வழங்கிட ஏற்பாடு செய்தார்
மூன்றாவது கட்ட உணவு தானிய பொருட்கள் வினியோகம்
மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குழுமம் ,வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாநகராட்சிப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவவும் ஒரு கோரிக்கை வைத்தது . மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மேலும் அவர்களால் ஊரடங்கில் வேலை செய்ய இயலாமல் வாழ்வாதாரத்தை இழந்தும் காணப்படுகின்றனர். மும்பைமாநகராட்சித் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குழுமத்தின் தலைவர் திருமதி. அனிதா டேவிட் ,செயலாளர் திரு. முத்தையா ,பொருளாளர் திரு பாலன் ஆகியோர் அடங்கிய குழு மும்பையிலுள்ள பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்து மும்பை பகுதியிலுள்ள சுமார் 65 பள்ளிகளைத் தேர்வு செய்து. பைகுல்லா மாஜ்காவ் பகுதியிலுள்ள நவாப்டேங்க் மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி, நவாப் டேங்க் மராத்திப் பள்ளி, நவாப் டேங்க் உருதுப்பள்ளி,வாடிபந்தர் மாநராட்சிப் பள்ளி மற்றும் மாஜ்காவ் மாநகராட்சி உருதுப் பள்ளியும் மாட்டுங்கா பகுதியிலுள்ள கே.சி மாதுங்கா தமிழ்ப் பள்ளி, மராத்திப்பள்ளி, சயான் ஜோக்லேக்கர் வாடி தமிழ்ப் பள்ளி, சர்தார்நகர் தமிழ்ப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சீத்தா கேம்பிலுள்ள ஷஹாஜி நகர் பள்ளி கட்டிடத்திலுள்ள இரு தமிழ்ப பளிகள், இந்தி,உருது மற்றும் செகண்டரி பள்ளியும் தேர்வு செய்யப்பட்டது.
மாகிம் பகுதியில் அமைந்துள்ள ஆர்.எஸ் நகர் பள்ளி கட்டிடத்திலுள்ள தமிழ்,இந்தி மராத்தி பள்ளிகளுடன் சந்த் கக்கையா மார்க் மராத்தி பள்ளியும் தேர்வானது. ஜெரிமெரி பகுதிலுள்ள தமிழ் மற்றும் இந்தி பள்ளிகளுக்கும் உதவியளிக்கப்பட்டது. வில்லபார்லே மேற்கில் அமைந்துள்ள மணிலால் சுந்தர்ஜீ தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளி மற்றும் மனவளம் குன்றியோர் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டது. முலுண்டிலுள்ள சேவாராம் லால்வானி மாநராட்சிப் பள்ளி கட்டிடத்திலுள்ள தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பள்ளிகள். திலக்நகர் மாநகராட்சிக் கட்டிடத்திலுள்ள தமிழ்,மராத்தி, உருது, கன்னடம் , எம்.பி.எஸ் ஆங்கிலப்பள்ளி , சுபாஷ் நகர் கன்னடப்ள்ளிகள், கோவண்டி தேவ்னார் காலனி மாநகராட்சிக் கட்டிட வளாகத்திலுள்ள இரு மராத்தி பள்ளிகள், தமிழ் , கன்னடம் மற்றும் குஜராத்திப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது.
அரிசி, கோதுமை மாவு, எண்ணெய், பருப்பு, மசாலா, காய்கறிகள், சீனி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை மகாராஷ்டிர மாநில தொழில் வளர்ச்சிக் கழக தலைமைச் செயல் அதிகாரி டாக்டர். பொன்.அன்பழகன் அவர்கள் ஜுலை 7 ஆம் தேதி மாஜ்காவ் நவாப் டேங்க் மாநகராட்சிப் பள்ளி கட்டிடத்தில் துவக்கி வைத்தார்கள். இந்த உதவியினால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, உருது மற்றும் இதர மீடியங்களில் பயிலும் 6000 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 60,00000 மதிப்பில் 1,30,000 கிலோ உணவு தானிய பொருட்களை எம்.ஐ.டி.சி யின் மூலமாக டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி மாணவர்களின் குடும்பத்திற்கு சென்றடைய செய்தார். துவக்க விழாவில் ஈ வார்டு கல்வியதிகாரி, அண்ணாகிரானா திரு சிவகுமார் இராமச்சந்திரன், ஆசிரியர் குழுமத்தலைவர் திருமதி அனிதா டேவிட், பொருளாளர் திரு. பாலன் ,நவாப்டேங்க் தமிழ் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமதி .மலர்விழி அசோக்குமார், மராத்தி, குஜராத்தி, உருது தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய ஆசிரியர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் திரு முத்தையாவும் கலந்து கொண்டனர். நிவாரண உதவி நிகழ்வு ஏற்பாட்டை பள்ளி ஆசிரியர்கள் அருள் செல்வி,அந்தோணியம்மாள், ஜெயசீலி, சுதா எஸ்தர் ,சாந்தி ஜெயச்சந்திர குமார், ஜெயப்பரகாஸ் சாவர்கர் மற்றும் கமல் பவாரி ஆகியோர் செய்தனர்.
தாராவிக்கு மேலும் ரூபாய் 50,00000 லட்சம் மதிப்பில் 5,000 குடும்பங்களுக்கு 10,0000 லட்சம் கிலோ உணவு தானிய பொருட்களை தாராவியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மூலம் வழங்கினார்.
இதர பணிகள்
டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள் உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் அரசுக்கு எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டை நிறுவனங்களின் மூலம் மகாராஷ்டிரா முழுவதுமாக 3,03,891 பிபிஇ கிட்ஸ், 22 லட்சம் முகக்கவசங்கள், 238 வெண்டிலேட்டர்கள், ட்ராக்ஸ் மற்றும் சோதனை கருவிகள் 557238, சோப் மற்றும் சானிடைஸர்ஸ் 30,28,1604, உணவு பொட்டலங்கள் 13,151,175, படுக்கைகள் 6,089, கையுறைகள் 3,65,492, மஹாராஷ்டிரா முழுவதும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய பொதிகள் (Ration Kits) 1,341,705 போன்ற பணிகளையும் எல்லா மக்களும் பயனடையுமாறு செய்துள்ளார்.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
என்ற திருக்குறளுக்கேற்ப வாழ்ந்து வரும் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள் இந்தக் கொரோனா பொதுமுடக்க காலத்தில், இதுவரை ரூ.260 கோடி மதிப்புள்ள கொரோனா நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க உதவியிருக்கிறார். இவரைப் போல் ஒவ்வொரு அதிகாரிகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டால், நாட்டில் எந்த பேரிடர் ஏற்பட்டாலும் நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. நம் தேசம் வெகு விரைவில் வல்லரசாகிடும் என்பதில் சந்தேகமில்லை.
கொரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் படும் இன்னல்களைக் களைய, மனித குலத்திற்கு எதிராக நிற்கும் இந்த கொரோனா என்ற பயங்கரத்தை விரட்ட யுத்த களத்தில் போராடி வரும் முனைவர் டாக்டர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர்கள் நம் தமிழர் என்பதில் கூடுதல் பெருமை. அவரின் தன்னிகரில்லா பொதுச்சேவைக்கு அளவில்லா பாராட்டுக்கள்!