02 Apr 2020 10:15 pmFeatured
மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் - 1
வெண்ணிக்காலாடி என்ற பெரிய காலாடி
-வே.சதானந்தன்
பொறுப்புத் துறப்பு
இந்தத் தொடர் செவிவழிச் செய்தி மற்றும் பல்வேறு சமூக வலைத்தளங்களின் தேடலை அடிப்படையாகக் கொண்டது.
வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானது அல்ல.
பிரபலமாகாத, மறந்துபோன, அல்லது மறைக்கப்படவர்களைப் பற்றி யும்,.இவர்களும் வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்திருந்தார்கள் என்பதை எடுத்துரைக்கும் ஒரு முயற்சியே!
மறவர் என்ற பதம் இங்கே வீரர்/வீராங்கணை என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளதேயன்றி சமூகத்தை சாதியை குறிப்பது நோக்கமல்ல
-வே.சதானந்தன்
கான்சாகிப் என்கின்ற மருதநாயகம் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் படைக்கு தலைமை தாங்கி சிற்றரசர்களான மண்ணின் மைந்தர்கள் பலரையும் தோற்கடித்து வெள்ளையருக்கு அடிபணிய செய்து கப்பம் கட்டவைத்தவனாவான், கான்சாகீப் படையெடுத்து வரும் செய்தி கேட்டாலே பாளையக்காரர்கள் பதறி ஓடி ஒழிந்த காலகட்டம். வெல்லவே முடியாதவன் என்ற முத்திரையை பதித்துகொண்டிருந்தான்.
பல பாளையக்காரர்கள் அடிப்பணிந்து கப்பம் கட்டிவந்த நிலையில் நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பூலித்தேவன் கம்பெனியர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து வந்தால் பலமுறை கம்பெனியார் படை தாக்குதல் நடத்துவதும் பூலித்தேவன் படைகளால் விரட்டியடிக்கப்படுவதுமாக போர் ஒரு முடிவுக்கு வராமல் இருந்தது
இப்படியான சூழ்நிலையில் கான்சாகிப் கம்பெனிப் படைக்குத் தலைமை தாங்கி, வெள்ளையருக்குக் கப்பம் கட்ட மறுத்த மாவீரன் பூலித்தேவன்மேல் படையெடுத்து வந்தான். இரவோடு இரவாக பூலித்தேவனின் நெற்கட்டான்செவல் கோட்டையை முற்றுகையிட்டான். ஆயிரக்கணக்கான படைவீரர்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் என்று பெரும் படையை நெற்கட்டான் செவலுக்கு அருகிலுள்ள காட்டில் பதுங்கியிருக்க வைத்தான்.
நெற்கட்டும் செவலைச் சுற்றியுள்ள பாளையக்காரர்களை தந்திரமாக பேசி, விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தான் கான்சாகிப். நடுவக்குறிச்சிப் பாளையக்காரரை விலை கொடுத்து அடிமையாக்கிவிட்டான். பின்னர் அவர்கள் மூலமாக பூலித்தேவனுக்கு தொந்தரவு தரத் தொடங்கினான். ஆனாலும் மாவீரன் பூலித்தேவனை அசைக்கமுடியவில்லை. வெள்ளையருக்குக் கப்பம் கட்டவும் மறுத்து வந்தான்.
கான்சாகிப் பூலித்தேவன் படையில் உள்ள வீரர்களையே விலை பேசி வெள்ளையர்களின் வெகுமதிக்கும் பரிசுப் பொருள்களுக்கும் வீரர்கள் அடிமையாகி விடுவார்கள் என்று கான்சாகிப் நினைத்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக இருந்தது பூலித்தேவனின் படைவீரர்களின் செயல்.
பூலித்தேவனின் இராணுவத்தில் இருந்த வீரர்கள் நாட்டுக்காக தங்கள் செங்குருதியைச் சிந்தத் தயாராக இருந்தனர். விடுதலை வேங்கைகளை விலை கொடுத்து வாங்கமுடியாமல் கோபமுற்றார்கள் வெள்ளையர்கள்.
அதே நேரம் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரிய காலாடிக்கு, கம்பெனியரின் ஆள் பிடிக்கும் செயல் கோபத்தை ஊட்டியது. இதை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தான். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.
கடந்த இரண்டு மாதமாக போர் தொடுத்தும் பூலித்தேவனை வெல்ல முடியாமல் போன கான்சாகிப், இம்முறை இரவோடு இரவாக காடுகளில் பதுங்கியிருந்து, திடீர் தாக்குதல் நடத்த உத்தேசித்திருப்பதை அறிந்து மன்னரிடம் விடைபெற்றுக் கொண்டு புயலாய்க் கிளம்பினான் பெரிய காலாடி.
மறைந்திருந்த எதிரிகள் மேல் கொரில்லாத் தாக்குதல் நடத்தினான். பெரிய காலாடியின் இந்தத் திடீர் தாக்குதலை எதிரிகள் எதிர்பார்க்கவில்லை. அவனது வேகத்தையும் வீரத்தையும் கண்டு வெள்ளையர் படை அஞ்சியது. வெடிமருந்துக் கிடங்கை அழித்தான். பீரங்கிகளை செயலிழக்கச் செய்தான். துப்பாக்கி வீரர்கள், பெரிய காலாடியின் படை வீரர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் கான்சாகிப்பின் படைவீரர்கள். தடுமாறினர் பின்வாங்கினார்கள்
பெரிய காலாடி இருக்கும்வரை பூலித்தேவன் படையை எதிர்த்து நிற்கக்கூட முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். அதனால் மீண்டும் ஒரு சூழ்ச்சி அரங்கேறியது. கம்பெனிப் படையைச் சேர்ந்த சில வீரர்கள் மறைந்திருந்து, பெரியகாலாடியை வெட்டினார்கள். அதில் ஒருவன் வெட்டியது பெரியகாலாடியின் வயிற்றில், வெட்டுப்பட்ட வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்தது. செத்தான் பெரியகாலாடி என்றே எதிர்கள் நினைத்தனர். ஆனால், கொஞ்சம்கூட தாமதிக்காமல், தான் கட்டியிருந்த தலைப்பாகையை கழற்றி, சாய்ந்த குடல்களை வயிற்றுக்குள் தள்ளி, வயிற்றைச் சுற்றி கட்டினான். வெட்டிய வலி, கொட்டும் ரத்தம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை பெரியகாலாடி.
ஆவேசம் கொண்டு மீண்டும் வாளைச் சுழற்றினான். எதிரிகளின் தலைகளை சீவி எறிந்தான். இம்முறை அவனது மூர்க்கத்தனத்தைக் கண்டு கான்சாகிப்பின் கம்பெனிப் படை வீரர்கள் புறமுதுகிட்டு ஓடினர். வெற்றிவாகை சூடினான் பெரிய காலாடி.
எவராலும் வெல்லமுடியாது என்று ஆணவம் கொண்டிருந்த கான்சாகிப்பை முதன்முதலாக தோற்றோட வைத்தான் பெரிய காலாடி. கம்பெனியார் முகாமை முற்றிலும் அழித்து நாசம் செய்தான். அந்த வெற்றிச் செய்தியை மன்னர் பூலித்தேவனிடம் கூற, குதிரையேறி விரைந்து வந்தான்.
வெற்றிச் செய்தியை மாவீரன் பூலித்தேவனிடம் வந்து கூறிக்கொண்டிருந்தபோது அவன் வயிற்றில் இருந்து செங்குருதி வழிந்து வந்ததை கண்டு துணுக்குற்றான் மன்னன். அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டான்.
தன் நாட்டின் வெற்றிக்காக தனது கடைசி சொட்டு இரத்தத்தையும், அந்த மண்ணில் சிந்தி மண்ணை செந்நிறமாக்கி வீரமரணம் அடைந்தான் பெரிய காலாடி. காலடியின் வீரத்தைப் பாராட்டி, வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தினான் மன்னன் பூலித்தேவன்.காலடி போரிட்டு வென்ற இடத்தை "காலடிமேடு' என்று பெயரிட்டு, சரித்திரத்தில் இடம்பெறச் செய்தான்.
”பூலித்தேவன் சிந்துவில்" காலாடி வீரன் பற்றி
கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில் வல்லவனப்பா
தாயகம் காத்தே தரணி புகழடைந்தானப்பா
தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ …