07 Apr 2020 7:06 pmFeatured
மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 2
வீரத்தளபதி ஒண்டிவீரன்
-வே.சதானந்தன்
இந்திய
விடுதலைக்கான போராட்டம் எப்போது, எங்கே, துவங்கியது
என்று வரலாறு கூறுவது சிப்பாய் கலகத்தைத்தான்.
வெள்ளையர்கள் வியாபாரிகளாகத்தான் நம்நாட்டிற்குள் நுழைந்தார்கள் பின்னர் நம் வளங்களை திருடும் கொள்ளையர்களாக மாறி இறுதியில் நம்மில் இருந்தவர்களையே விலைக்கு வாங்கி நம்மையே அடிமையாக்கினார்கள்.
வந்தேறிகள் நாட்டை ஆள்பவர்களாக மாறி, வரி வசூலித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்த்தார்கள் தமிழ் சிற்றரசர்களில் சிலர். அந்த எதிர்ப்புதான் போர்களாயின. அந்தப் போர்கள்தான் இந்திய விடுதலைப் போருக்கான ஆரம்ப விதைகள் எனலாம் அது வீரம் விளைந்த தமிழ்மண்ணில்தான் என்று அடித்துச் சொல்லலாம்.
மாவீரர்களின், மாமன்னர்களின் வரலாறுகள் விலாவரியாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் அவர்களின் நல்வீரம் தோய்ந்த முத்துக்களாம் வீர தளபதிகளின் வரலாறுகள் நாட்டுப்புறப் பாடல்களாக, செவிவழிக் கதைகளாக அந்த அந்தப் பகுதிகளிலேயே புதையுண்டு கிடக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை.
இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆனால் வெள்ளையனுக்கு வரியாக ஒரு சிறு நெல்மணியைக் கூட கட்டமாட்டேன் என்று மறுத்ததால் நெற்கட்டான் செவ்வயல் பாளையம் ஆனது. செவ்வயல் மருவி இன்று செவல் ஆகி நிற்கிறது.
இந்திய விடுதலை வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு அது. ஆம் 1755ம் ஆண்டு. அது உலக அரங்கில் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் வீரத்தைப் பதிவு செய்த ஆண்டு.
பூலித்தேவனின்
நெற்கட்டான் செவல் நாளை
என்னவாகும்?
நாளைய விடியல் எப்படி இருக்கும்? விடிந்தால்….?
போர்
மேகம்!! நினைத்துப்பார்க்கவே நடுங்கியது!
இரண்டு முறை பூலித்தேவனை எதிர்த்து தோற்றோடிய வெள்ளைக் காரர்கள்தான் இம்முறை
பூலித்தேவனின் கோட்டையை தகர்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டியபடி
முகாமிட்டிருந்தார்கள்.
துப்பாக்கிகள். பீரங்கிகள் வெடிமருந்து குவியல்கள். என பல்லாயிரம் பேர்கொண்ட பெரும்படையுடன் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான், மாவீரன் பூலித்தேவனின் நெற்கட்டான் செவலைத் தாக்கப் பதுங்கியிருக்கிறான்.
தீப்பிழம்புகளைக் கக்கும் பீரங்கிகளின் எல்லாம் நெற்கட்டான் செவலை நோக்கி நிறுத்தப்பட்டுவிட்டன., வரி கொடுக்க ஒப்புக் கொண்டால் சமாதானமாகப் போவோம். இல்லாவிட்டால் போர்தான். நெற்கட்டான்செவல் அழிவது உறுதி என்று சவால் விட்டான், ஹெரான்.
ஆனால் பூலித்தேவனோ, "ஒரு நெல்மணியைக் கூட வரியாக செலுத்த முடியாது. முடிந்ததைப் பார்'' என்று எதிர் சவால்விட்டான்.
ஹெரானின் சவாலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு ஏற்ற வீரனைத் தேடினார் பூலித்தேவன். தளபதி ஒண்டிவீரன், ""நான் ஒருவன் போதும், எதிரிகளின் படையை அழிக்க'' என்று முன்வந்தான்.
கொரில்லாப் போர் முறையில் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர் என்பதை அறிந்தவர் பூலித்தேவன் ஆகவே சம்மதித்தார்.
பூலித்தேவன் சம்மதிக்க, புறப்பட்டான் ஒண்டிவீரன் ஒண்டியாக, எதிரிகள் முகாமிற்கு.நெற்கட்டான் செவலுக்கு அருகில் உள்ள "தென்மலை' முகாமில்தான் எதிரிப்படை முகாமிட்டிருந்தது.
காரிருள் சூழ காத்திருந்த ஒண்டி வீரன் கும்மிருட்டில் தீவட்டியுடன் பாதுகாவலுக்கு நின்றிருந்த வீரர்களின் கண்ணில் மண்ணைத் தூவியபடி முகாமிற்குள் புகுந்துவிட்டான் குதிரை வாரை செப்பனிடுபவர் வேடத்தில்.
அப்படியிருந்தும் ஓரிருவர் பார்த்துவிட. "யார்?' என்று கேட்கிறார்கள். ""நான் குதிரை வாரை செப்பனிட வந்தவன்'' என்று பொய் சொல்கிறான். நம்பிவிடுகிறார்கள்.
நடு இரவை தாண்டிய பொழுது ஒண்டிவீரன் மெல்ல சத்தம் எழாமல், பீரங்கிகளின் அருகில் செல்கிறான். நெற்கட்டான்செவலை நோக்கி இருந்த பீரங்கிகளின் வாய்களை, தங்கியிருந்த முகாமை நோக்கித் திருப்பி விடுகிறான். அங்கிருந்த பட்டத்துக் குதிரை ஒன்றை அவிழ்த்துக் கொண்டு வெளியேற முனைகையில் குதிரை கலவரப்பட்டு மிரண்டு போகிறது
அந்தோ!
சத்தம் கேட்டு சில வீரர்கள்
ஓடி வருகிறார்கள். அதற்குள் ஒண்டிவீரன் அருகில் இருந்த குதிரையின்
காடிக்குள் படுத்து, தன் மேல் புற்களைத்
தூவி யாரும் அறியாதபடி ஒளிந்து
கொண்டான்.
குதிரையைப் பிடித்த எதிரி வீரர்கள்,
குதிரையைக் கட்டிப்போட இடம் தேடுகிறார்கள்.
ஒரு வீரன் பெரிய ஈட்டி போன்ற ஆயுதத்தை காடியில் அறைகிறான். அது புற்களை மூடிக்கொண்டு பதுங்கி இருந்த ஒண்டிவீரனின் இடது கை வழியாக தரைக்குள் இறங்குகிறது. ஈட்டி இறங்க இறங்க வலி அதிகரிக்கிறது. ஆனால் ஒண்டி வீரன் கத்தவில்லை கதறவில்லை . வலியைத் தாங்கிக் கொள்கிறான். அந்த ஈட்டி முளையில் குதிரையைக் கட்டிவிட்டு வீரர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்.
அந்த முளையிலிருந்து கையை எடுக்க முடியாத நிலை. வலி கூடிக்கொண்டே போகிறது. விடிய இன்னும் சிறிதுநேரம்தான் இருக்கிறது. வேறு வழியே இல்லை. அங்கு களவாடிய வாளால் தன் இடக்கையைத் தானே வெட்டித் துண்டாக்குகிறான்.
துண்டிக்கப்பட்ட கையிலிருந்து சொட்டும் இரத்தத்தோடு அந்த குதிரையையும் சத்தம் எழாமல் கிளப்பி, அதன் மேல் எறியபடி அபாய முரசையும் ஓங்கி உதைக்கிறான். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கை ஒலியாக அதை நினைத்து, பீரங்கி வீரர்கள், பீரங்கியை இயக்குகிறார்கள். குண்டுமழை பொழிகிறது.
அது
தங்கள் படை முகாம் மேலேயே
தாக்கி அழித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு
அவர்கள் பதறுகிறார்கள். முகாம் முற்றிலும் அளிக்கப்படுகிறது.
அதற்குள் எதிரியின் குதிரையிலேயே மின்னல் வேகத்தில் நெற்கட்டான்செவலுக்குப்
பறக்கிறான் ஒண்டிவீரன்.
எதிரிகளை முற்றிலும் அழித்துவிட்ட சந்தோஷத்தில் பூலித்தேவனிடம் வருகிறான்.
எதிரியின்
குதிரையையும் பட்டாக்கத்தியையும் ஒப்படைக்கிறான். கூடவே வெற்றிச் செய்தியையும்
அறிவிக்கிறான்.
அப்போதுதான் ஒண்டி வீரனின் கை
துண்டிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு துணுக்குற்று ”எப்படி
உன் கை துண்டிக்கப்பட்டது?” என பூலித்தேவன் கேட்க "இந்தக் கை துண்டானால்
என்ன, நம் தாய் மண்ணை
விட்டு எதிரிகளை விரட்டிவிட்டோமே, அதுவே போதும். இந்தக்
கைக்கு பதிலாக தங்கக் கை
செய்து தரமாட்டீரா என்ன?'' என்றாராம் ஒண்டிவீரன்.
போர்க்களத்தில் ஒண்டி வீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன் பாராட்டி ஒண்டிவீரனுக்கு தங்கத்தில் கை செய்து மாட்டினாராம்.
ஒண்டியாகச் சென்று சவாலை வென்று வந்ததால் ஒண்டிவீரன் எனப் பெயர் பெற்றார். பின்னர், ஒண்டிவீரன் தலைமையில் படைகள் புறப்பட்டுச் சென்று ஹெரான் படையைத் தோற்கடித்தது. பின்னர், 1756 மற்றும் 1757-ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரு போர்க் களத்தை ஒண்டிவீரன் சந்தித்தார்.
அப்போதைய திருநெல்வேலிச் சீமையில் சுதந்திர உணர்வுக்குக் களங்கம் விளைவிப்பதுபோல் எட்டயபுரம் பாளையம் உட்பட திருநெல்வேலிச் சீமையின் தெற்குப் பாளையங்கள் காணப்பட்டன. அப்பாளையங்கள் மீது போர் தொடுத்து ஒண்டிவீரனும் பூலித்தேவனும் வெற்றி கண்டனர். அங்கு கிடைத்த பெரும் பொருட்களைச் சூறையாடி நெற்கட்டான் செவ்வயயலுக்குக் கொண்டுவந்தனர். இத்தகைய படையெடுப்புகள் மூலம் தமிழ்ப் பாளையங்களின் ஆதரவை வெள்ளையருக்கு எதிராகத் திரட்டினார் ஒண்டிவீரன்.
இதனை அறிந்து யூசுப்கான்(கான்சாகிப்) என்ற மருதநாயகம் பெரும்படையுடன் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த போது, ஒண்டிவீரனும் பூலித்தேவனும் பெரும்படையுடன் தமது எல்லைக்கு விரைந்தனர். மருதநாயகம் நெல்லைச் சீமைக்கு வராமல் கங்கைகொண்டானில் தங்கினார். அங்கு சென்ற இவர்களது படைகள் கடுமையாக மோதின. அந்த இடமே இரணகளமானது. முடிவில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றித் திரும்பிச் சென்றனர். மருதநாயகம் எஞ்சிய படையுடன் நெல்லைக்குச் சென்றார். ஒண்டிவீரன் தமது படைகளைப் பலப்படுத்தினார்.
ஆழ்வார்குறிச்சி அழகப்பன் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஒண்டிவீரன் தமது படையுடன் சென்று அழகப்பனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து வந்தார். இதையறிந்து மருதநாயகம் ஒண்டிவீரனைத் தாக்க ஆழ்வார்குறிச்சி வந்தபோது ஒண்டிவீரன் தளபதி வெண்ணிக்காலாடி மூலம் தப்பித்துச் செவ்வயல் வந்தார்.
1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் நாள் மருதநாயகம் பெரும்படையுடன் சென்று ஊத்துமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைக் கைப்பற்றினார். அவைகளை அதே ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் பெரும்படையுடன் சென்று மீட்டெடுத்தார் ஒண்டிவீரன். கோபம் கொண்ட மருதநாயகம் தொண்டைமான் படையுடன் சேர்ந்து வாசுதேவநல்லுரைத் தாக்கினான். இருபது நாள் நடைபெற்ற போரில் சுமார் 3000 படைவீரர்களுடன் ஒண்டிவீரனும் பூலித்தேவனும் இரு படைகளாகச் சென்று போரிட்டு வென்றனர். ஒருமுறையாவது வெற்றிபெற எண்ணி 1760-இல் நெற்கட்டான் செவ்வயல் மீது நேரடியாக மருதநாயகம் போர் தொடுத்தான். அதிலும் தோல்வியையே தழுவினான்.
பூலித்தேவனின் தலைமறைவுக்குப்பின் மீண்டும் ஒண்டிவீரன் பூலித்தேவனின் பிள்ளைகளைக் காத்து வந்தார். களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்துர், புதுக்கோட்டை ஆகிய போர்களில் வெற்றிகண்டார். இறுதியாக நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் போர்க்களத்தில் மரணமடைந்தார்.