08 Jul 2020 11:45 pmFeatured
வே.சதானந்தன் எழுதும்
மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 4
மாவீரன் பொல்லான்
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் "மாவீரன் பொல்லான்”.
கி.பி.1765-1805 கால கட்டத்தில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கொங்கு சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை. அவருடன் இணைந்து போரிட்டவர் மாவீரன் பொல்லான் ஆவார்.
(28-12-1765) பிறந்த இவர் தடி வரிசை - சிலம்பாட்டம் - தப்பாட்டம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதுடன், மான்- ஆடு - மாடுகளை வேட்டையாடுதல் தோலை உறிப்பதி லும் தோல் பொருட்கள் செய்வதிலும் வல்லவன் பொல்லான் என்கிறது வரலாறு.
கி.பி.1790-ல் தீரன் சின்னமலை மாவீரன் பொல்லானின் வீரம் மற்றும் திறமைகளை கண்டு தன்னுடன் இணைத்து கொள்கிறார். அதன் பிறகு தீரன் சின்னமலை கொங்கு சீமையிலுள்ள இளைஞர்களை சாதி வேறுபாடு இன்றி ஒருங்கிணைத்து ஆங்கிலேயரை எதிர்த்து போராட முடிவு செய்தார்.
தீரன் சின்னமலைக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக சுபேதர் வேலப்பன்–கருப்ப சேர்வை-பொல்லான் ஆகியோர் இருந்துள்ளார்கள்.
கி.பி.1795 -ல் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை அறிந்து இருவரும் இணைந்து வெள்ளையர்களை எதிர்த்து போராடுவோம் என அழைப்பு விடுக்கிறார் அதன் பேரில் தீரன் சின்னமலை தனது சகோதரர்கள் பெரியதம்பி- கிலேதர், மற்றும் நண்பர்களான பொல்லான், வேலப்பன், கருப்ப சேர்வை கொங்கு சீமையிலுள்ள இளைஞர்களையும் அழைத்து கொண்டு மைசூர் சீரங்கப் பட்டணத்திற்கு செல்கிறார். அங்கு போர் பயிற்சிகள் - போர் தந்திரங்கள் மற்றும் துப்பாக்கி சுடுதல்- கத்தி சண்டை - வாள் சண்டை - ஈட்டி எரிதல் – களரி என அனைத்து பயிற்சிகளையும் நன்கு கற்று கொள்கின்றனர்.
4-5-1799-ல் ஆங்கிலேயரின் திடீர் தாக்குதலில் திப்பு சுல்தான் மரணம் அடைந்தார் அரண்மனையும் தரைமட்டம் ஆகியது. அப்போது ஆங்கிலேயர்கள் பிணைய கைதியாக பொல்லான் - வேலப்பன் ஆகியோரை பிடித்துச் செல்கின்றனர். எஞ்சிய வீரர் களுடன் தீரன் சின்னமலையும் தனது படைகளுடன் கொங்கு சீமைக்கு புறப்பட்டார்.
சங்ககிரி கள்ளி கோட்டையில் ஆங்கிலேயரின் பிணைய கைதியாக இருந்த பொல்லான் - வேலப்பன் இருவரும் ஆங்கிலேயருக்கு சேவகம் செய்வது போன்று அவர்களின் நம்பிக்கையை பெற்றனர்.
ஆங்கிலேயரின் ராணுவ ரகசியங்கள் போர் தொடுக்கும் தந்திரங்களை கண்டுபிடித்து இந்த விபரங்களை தீரன் சின்னமலைக்கு தெரிவிக்க இருவரும் திட்டம் தீட்டினர். அதன்படி வேலப்பன் சங்கேத வார்த்தைகளை தோலில் எழுதி கொடுக்க இந்த தோலை செருப்பு வடிவில் மாற்றினார் பொல்லான்.
அதனை கால்களில் அணிந்து கொண்டு தனந் தனியாக மாறுவேடத்தில் சங்ககிரி முதல் அறச்சலூர் வரை 60 கி.மீ. தூரம் நடந்து வந்து அறச்சலூர் அருகில் உள்ள ஒலவலசு என்கிற இடத்தில் அரச மரத்தின் அடியில் இரவு தங்குகிறார் பொல்லான் இதனை அறிந்து அன்று இரவு தீரன் சின்னமலை அங்கு வந்து பொல்லானை கட்டி பிடித்து பாராட்டுகிறார். இருவரும் ஒரே குவளையில் கஞ்சி குடித்துவிட்டு அன்றிரவு இருவரும் ஒன்றாக உறங்கினர்.
பொல்லான் ஆங்கிலேயர்களின் இரகசியம் அடங்கிய ஒலையை கொடுத்ததால் இந்த ஊர் பெயர் ஓலவலசு என ஆனது)
மாவீரன் பொல்லான் நாட்டிற்காக தனது உயிரை துச்சமாக நினைத்துக் கொண்டு வந்து முன்கூட்டியே கொடுத்த செய்திதான் கீழ் கண்ட போர்களில் தீரன் சின்னமலை வெற்றி பெற்ற உதவியது.
கி.பி.1801 பள்ளிபாளையம் காவிரி கரை போர்... கி.பி.1802 ஓடாநிலை தடி வரிசை போர்... கி.பி.1804 அறச்சாலையூர் நத்தமேடு போர் ஆகும். இவைகளில் முக்கியமானது ஓடாநிலை போர். கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேய படைகள் ஓடாநிலைக்கு வருவதை அறிந்த பொல்லான் தனது தடி வரிசை வீரர்களுடன் சென்று தடி வரிசை தாக்குதல் நடத்தினார் இதனை சற்று எதிர்பார்க்காத ஆங்கிலேய படை வீரர்கள் தடி வரிசை தெரியாததால் புறமுதுகிட்டு ஓடினார்கள்.
அதற்கு பிறகு வந்த தீரன் சின்னமலை குதிரையில் துரத்தி சென்று கர்னல் மேக்ஸ்வெல் தலையை வெட்டி வீசினார். அந்த தலையை எடுத்து கரும்புள்ளி- செம்புள்ளி குத்தி கொங்கு சீமை முழுவதும் உர்வலமாக எடுத்து செல்லப் பட்டது.
தொடர்ந்து மூன்று முறையும் தோல்வி கண்ட ஆங்கிலேயர்கள் ரகசிய திட்டம் தீட்டி தீரன் சின்னமலையையும் அவரது தளபதிகளையும் கொன்று குவிக்க முடிவு செய்து கி.பி.1805 ஆடி முதலாம் தேதி அன்று அதிகாலையில் அறச்சலூர் அருகிலுள்ள ஓடாநிலை கோட்டையை ஆங்கிலேய படை தளபதி "மெகபூப்" தலைமையில் முற்றுகையிட்டு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இச்செய்தியையும் முன்கூட்டியே பொல்லான் மூலம் தெரிந்து கொண்ட தீரன் சின்னமலை தனது சகோதரர்கள் பெரியதம்பி- கிலேதர் மற்றும் கருப்பசேர்வையுடன் ஓடாநிலையை விட்டு வெளியேறி ரகசிய வழியில் பழனிக்கு அருகில் கருமலைக்கு சென்று விட்டார்.
சூரிய உதயத்திற்கு பிறகு வெகு நேரம் ஆகியும் ஆள் நாடமாட்டம் இல்லை என உறுதி செய்த பின்னர் ஓடாநிலை கோட்டைக்கு உள்ளே சென்று பார்த்த போது யாரும் இல்லை... தீரன் சின்னமலையின் அறையின் உள்ளே செருப்புகள் அதிகம் இருந்ததை பார்த்து வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டிய செருப்புகள் உள்ளே எப்படி? ஏன் வந்தது? என ஆங்கிலேயருக்கு சந்தேகம் வலுக்க, அந்த செருப்புகளை ஆய்வு செய்த போது ஆச்சர்யமாகிப் போனார்கள்... அது செருப்புகள் அல்ல செருப்பு வடிவில் இருந்த அதனை பிரித்து படித்தபோது சங்கேத வார்தைகளில் பிரிட்டிஸ் ராணுவ ரகசியங்கள் போர் தந்திரங்கள் ஆங்கிலேயரின் திட்டங்கள் அனைத்தும் அதில் இருந்தன. எப்படி தீரன் சின்னமலைக்கு கிடைத்தது என்பதற்கு விடைகிடைத்தது மேலும் விசாரித்து போது அது பிணையக் கைதியான சுபேதர் வேலப்பன் கையெழுத்து எனவும் இதை கொண்டு வந்து சேர்த்தது பொல்லான் என்று கண்டுபிடித்தனர்.....
ஆங்கிலேயப் படை தளபதி மெகபூப் மிகுந்த கோபத்துடன் பொல்லானை சுட்டுத் தள்ள வேண்டுமென தேடினான்.... இவனுடைய சாவு மிகவும் கொடூரமாக இருக்க வேண்டுமென உத்திரவிட்டார்.
சுபேதர் வேலப்பனின் சொந்த ஊர் நல்ல மங்கை பாளையம் ஆகும்.... பொல்லாளின் தாய்மாமன் " தில்லான் " ஊரும் நல்ல மங்காபாளையம் தான் அதனால் பொல்லான் நண்பன் வேலப்பன் வருகைக்காக நல்ல மங்கா பாளையத்தில் மாமன் வீட்டில் பதுங்கியிருந்தார். வேலப்பனும் வந்தார்.
ஆனால் ஆடி மாதம் முதல் நாள் அன்று மாலையில் பொல்லான் - வேலப்பன் இருவரையும் பிடித்து நல்ல மங்காபாளையத்திலுள்ள நத்தகாட்டில் தலைகீழாக கட்டி தோலை உரித்து சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனை கண்டு பயந்து தானாக வந்து தீரன் சின்னமலை சரண் அடைவார் என நினைத்தான் ஆங்கிலேய தளபதி மெகபூப்.... இதனை அறிந்த தீரன் சின்னமலை மிகுந்த மனக்கவலை அடைந்தார். ஆனாலும் சரணடைய வில்லை. ஆனால் "நல்லான்" என்கிற சமையல்காரனுக்கு ஆங்கிலேயர்கள் பொன் - பொருள் ஆசை காட்டியதால் "நல்லான்" தீரன் சின்னமலை இருப்பிடத்தை காட்டி கொடுக்க. ஆங்கிலேயரிடம் அகப்பட்ட தீரன் சின்னமலையும் அவரது சகோதர்கள் - கருப்ப சேர்வை ஆகியோர் ஆடி 18 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்... என்கிறது வரலாறு.