Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலானது

17 Dec 2021 3:12 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu-Pictures-tamil.jpg

தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகப் பாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, 1914 ஆம் ஆண்டு முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள்.  மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனைத் தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணாவுக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தார்கள். தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970ஆம் ஆண்டு, மார்ச் 11ஆம் தேதியன்று  நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசும்போது, ''இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். 'நீராருங் கடலுடுத்த' எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார்.

அதன்படியே 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான  மனோன்மணீயம்  நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ்த் தெய்வ வணக்கம்’’  எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயைப் போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 23 நவம்பர் 1970ஆம் ஆண்டு அன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு  தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அவ்வரசாணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலையை ஒட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் அன்னைத் தமிழ் மொழியைப் போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்த வேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1. மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.  

தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும்,

நீராரும்  கடலுடுத்த  நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
5. பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும்.
6. ​அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.

இனி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்

அண்மையில் வழக்கு ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய விதி இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டபோது காஞ்சி மட இளைய பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரம், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செய்ததையும் சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியினர், விஜயேந்திரின் இந்தச் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ராமேஸ்வரம் காஞ்சி மட மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த 11ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்க பாடல்; அது தேசிய கீத பாடல் அல்ல. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இல்லை. தமிழ் மீதுகொண்ட அதீதப்பற்று மற்றும் மரியாதை காரணமாகவே எழுந்து நிற்கிறோம்” என தெரிவித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டியது கட்டாயம். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 55 விநாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றன் நடையில் (திசுரம்)  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். கல்வி நிறுவனம், அரசு நிறுவனத்தில் நிகழ்ச்சி துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை இசைவட்டு கொண்டு இசைக்கப்படாமல் வாய்ப்பாட்டாக பாட வேண்டும்’ என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096552
Users Today : 13
Total Users : 96552
Views Today : 21
Total views : 416695
Who's Online : 0
Your IP Address : 3.148.108.144

Archives (முந்தைய செய்திகள்)