08 Mar 2023 11:14 pmFeatured
சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, அக்.19ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது.
தமிழ்நாடு அரசு விளக்கம்
பின்னர் ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடா்பான உரிய விளக்கங்களும் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வந்தார். இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது.
கிடப்பில் போட்ட ஆளுநர்
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கடந்த நான்கு மாதங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அதில் மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த பல்வேறு தரப்பினர் தற்கொலை செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம்
தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 142 நாட்கள் கழித்து தற்போது அந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுவரை நடந்தது என்ன ?
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலையிழந்து தவித்தனர். ஊரடங்கால் வருவாய் இழந்த மக்கள் தொலைக்காட்சிகள், செல்போன்களில் மூழ்கி நேரத்தை செலவழித்தபோது ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை பார்த்தும் பெரும் கூலி பெற்றுக்கொண்டு நடித்த நடிகர்களின் விளம்பரங்களை பார்த்தும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பி அதை விளையாட தொடங்கினார்கள்.
சிறிய தொகையை விளையாட தொடங்கியவுடன் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மூலம் பரிசாக பணம் கிடைக்கப்பெற்றதால் கூடுதல் நம்பிக்கை பெற்ற மக்கள் அதிகம் தொகையை கொடுத்து ஆன்லைன் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்கள் தோற்றதாக அறிவித்து பெரிய தொகையை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தன
தாங்கள் ஆசைகாட்டி மோசடி செய்யப்படுவது அறியாமலும் பல கோடிகள் ஊதியம் பெற்றுக்கொண்டு ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர்கள், விளையாட்டு வீரர்களை நம்பியும் அதனை பதிவிறக்கம் செய்த மக்கள் பெரும் தொகையை பறிகொடுக்கத் தொடங்கினர். வட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிய பலர் பணத்தை இழந்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடினர்.
அதிமுக அரசு
அரசு காவல்துறையை சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்ப தலைவிகள் என பல்வேறு தரப்பட்டவர்கள் இதில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அப்போதைய அதிமுக அரசு தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியதால் சில மாதங்கள் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது.
உயர்நீதிமன்றம்
இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இதனால் மீண்டும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.
திமுக அரசு அவசர சட்டம்
அதை விளையாடி தற்கொலை செய்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. இந்த சூழலில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை விதிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு. அதன் தொடர்ச்சியாக கடந்த 2022 அக்டோபர் மாதம் அவசர சட்டத்தை சட்டசபையில் தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.
ஆளுநரின் காலதாமதத்தால் காலாவதியான சட்டம்
ஆனால், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் 6 வாரம் கழித்து கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் ஆளுநர் ரவியை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
47 பேர் பலி
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு பிறகு பல்வேறு தரப்பை சேர்ந்த 15 பேர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 7 நாட்களில் 2 பேர் இதனால் தற்கொலை செய்து உள்ளார்கள். இதுவரை மொத்தம் 47 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்
இன்றுடன் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்துவிட்டன. இதற்கு ஒப்புதல் வழங்காத காரணத்தால் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது. இந்த நிலையில் இன்று அவசர சட்டத்தில் திருத்தங்கள் செய்து அனுப்பி வைக்குமாறு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.