Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஜெயலலிதா நினைத்திருந்தால் முன்பே விடுதலை செய்திருக்கலாம் – கோவி. லெனின் பேட்டி

13 Nov 2022 10:37 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures govi lenin

மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் நக்கீரனுக்கு அளித்த பேட்டி

கடந்த 30 வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்து வந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் அவர்களிடம் முன் வைத்த கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ராஜீவ்காந்தி வழக்கில் சிறையிலிருந்த அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட பிறகு நளினி, ரவிச்சந்திரன் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் அந்த அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது என்று கூறவே தற்போது அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஆறு பேருமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இவர்களின் விடுதலையைத் தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு அரசியல் சாசன உரிமைகள் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக இருந்துள்ளது. இந்த விடுதலை காலதாமதம் ஆனதற்கும் நிறைய அரசியல் இருக்கும். அதனை நாம் மறைக்க வேண்டிய தேவையில்லை. இவர்கள் விடுதலையைக் கோரி தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது எவ்வித காரணங்களும் இன்றி கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.

மேலும் இதில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்று சொல்லப்பட்டு காலதாமதம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் விடுதலையில் அதிக முன்னெடுப்புகளை அரசு செய்தது. இதன் காரணமாகப் பேரறிவாளன் போட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக அரசியல் சாசன பிரிவு 142 ஐ உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது. இந்த சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் மத்திய மாநில அரசுகள் எந்த முடிவையும் எடுக்காத பட்சத்தில் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்துக்கு இந்த சட்டப்பிரிவு உதவுகிறது. அதன்படி தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத ஆளுநர் தன்னுடைய அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டு வருகிறார். இந்த விடுதலையில் அமைதியாக இருந்த அவர், இந்த காலதாமதத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆளுநர் என்பவர் ஒரு அம்பு தான். அவரை பரிந்துரைத்தது ஒன்றிய அரசுதான். ஆளுநர்கள் காலங்காலமாக மத்திய அரசுக்கு சேவகம் செய்பவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இது காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மாதிரியும், பாஜக ஆட்சியில் மற்றொரு மாதிரியும் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில், மாநில பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், வயதான சீனியர்கள் என்ற அடிப்படையில் அவர்களை ஆளுநராக நியமிப்பதைக் காங்கிரஸ் கட்சி வழக்கமாக வைத்திருந்தது. பாஜகவை பொறுத்தவரையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அல்லது அவர்கள் பரிந்துரையின் படி ஆளுநர்கள் இதுவரை நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த அடிப்படியிலேயே தற்போது தமிழகத்திலும் ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதுவும் பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, புதுவை, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் செயல்பாட்டை நீங்கள் பார்த்தால் புரியும். திடீரென மக்கள் நலன் பேசுவார்கள், அரசியல் சட்டம் பேசுவார்கள், மனு வாங்குவார்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் செய்யாததை எல்லாம் பிறர் ஆளும் மாநிலங்களில் செய்வார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட ஆளுநர்கள் உயர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கான அதிகாரங்களும் அதிகம் இல்லை. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் அவர்கள் வேலை. அதைச் செய்யத் தவறினால் மாநிலங்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கும்.

ஏழு பேர் விடுதலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவை விமர்சனம் செய்துள்ளார். ஊர்ல கல்யாணம் என்றால் மார்பில் சந்தனம் தடவிக்கிறதுதான் திமுக வேலை என்று விமர்சனம் செய்துள்ளார். நாங்கள்தான் அவர்கள் விடுதலைக்காக முதலில் முயற்சி எடுத்தோம். ஆனால் திமுக அதற்கு உரிமை கொண்டாடுகிறது என்று கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதல்வர் எந்த இடத்திலேயும் அவர்கள் விடுதலைக்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று கூறவில்லை. காமாலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல் அவரின் பேச்சு இருக்கிறது. அதற்கு ஜெயக்குமாருக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைச் சொல்கிறேன். இவர்கள் சொல்வதைப் போல் ஜெயலலிதா எப்போது இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் போட்டார்கள். கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, இவர்களின் விடுதலையை அப்ராபிரியட்(appropriate) அரசு மேற்கொள்ளலாம் என்று தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறினார்.

இந்தத் தீர்ப்பு வந்த உடனேயே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டார்கள். அதாவது 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்தார். இத்தனை ஆண்டு இடைவெளியில் என்ன காரணத்திற்காக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் தற்போது அனுப்பப்பட்டதை போல 161வது சட்டப்பிரிவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. நாங்கள் அவர்களை விடுதலை செய்கிறோம், மூன்று நாட்களுக்குள் உங்கள் முடிவைக் கூறுங்கள் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்புகிறார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு உங்களுக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை. இந்த வழக்கு சிபிஐ விசாரித்த வழக்கு, எனவே எங்களுக்குத்தான் இந்த வழக்கில் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் இந்த வழக்கிலேயே வரக்கூடாது என்பது மாதிரி தன்னுடைய பதிலைத் தெரிவித்தது. ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் அப்போதே செய்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. கலைஞர் கூட அப்போதே அதைக் கூறினார். ஏனென்றால் 1970களில் தோழர் தியாகு போன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 161வது பரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்திருந்தார் கலைஞர். அதனால்தான், ஏன் 161ஐ பயன்படுத்தாமல் கடிதம் அனுப்புகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இன்றைக்கு மீண்டும் திமுக ஆட்சியில் அதைச் செய்து முடித்திருக்கிறார்கள்.

நன்றி : நக்கீரன்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096526
Users Today : 11
Total Users : 96526
Views Today : 15
Total views : 416657
Who's Online : 0
Your IP Address : 18.191.103.144

Archives (முந்தைய செய்திகள்)