30 Apr 2020 9:59 amFeatured
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர். அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் வேலையின்றியும் உணவின்றியும் அவர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வந்த அவர்களை, அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கால் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர்.
அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவர்களை உரிய அறிவுறுத்தல்களுடன் சொந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்கள் மற்றும் அவர்களது சொந்த மாநிலங்கள் என இரு மாநில அரசுகளும் பரஸ்பர ஒப்புதலுடனேயே சாலை மார்க்கமாக அழைத்துச் செல்ல வேண்டும்.
அவர்களை உரிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். வைரஸ் அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும். குழுக்களாக செல்வதற்கு பேருந்துகளை பயன்படுத்தலாம். பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். அதேபோல், இருக்கையில் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை கவனிக்க அந்தந்த மாநில அரசுகள் உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
இடம் பெற்ற நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, உள்துறை செய்தித் தொடர்பாளர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மே 4ம் தேதியிலிருந்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் கணிசமான தளர்வுகள் அளிக்கப்படும். மேலும், விவரம் சில நாட்களில் தெரிவிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.