21 Aug 2020 3:56 pmFeatured
கவிஞர் இரஜகை நிலவனின்
தொடர்கதை
அத்தியாயம் - 03
“என்ன நரேன்… என்ன.. செய்வதாக உத்தேசம்..?” கொஞ்சம் பயத்தோடு கேட்டான் வசந்த்.
“என்ன விசயம்..இவ்வளவு பயப்படுகிறாய்?.. “ அசாதாரணமாக கேட்டான் நரேன்.
அவன் சாதாரணமாக சொல்லிக்கொண்டிருப்பதை பார்த்து, நரேனைத் திரும்பிப்பார்த்த.. வசந்த்.., “நீ உறுப்படரவன் மாதிரி தெரியல..” என்று கொஞ்சம் பல்லைக்கடித்தான் வசந்த்..
“ நரேன், என்ன தான் பண்ணிகிட்டிருக்கே..” திரும்பவும் கேட்டான் வசந்த் .
தூரத்தில் மின்சாரம் செல்கின்ற. நீள கம்பியில் அமர்ந்திருந்த அந்த புறா ஆடி ஆடி அமர்ந்திருந்தவாறு தன் அலகால் உடலில் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்ததை, அதன் கழுத்துப்பகுதியில் சூரியக்கதிகள் பட்டு மின்னிக்கொண்டிருப்பதைக் கண்டு அந்த அழகில் லயித்து ஆழ்ந்து போயிருந்தான் நரேன்.
“எதிரே காவல் துறை வண்டி நின்று கொண்டிருக்கிறது… நீ … நீ .. இப்படி புறாவைப் பார்த்துக்கொண்டு…” தலையிலடித்தான் வசந்த்.
“ அடப் போடா… அந்தப் புறாவைப் பாருடா.. எவ்வளவு அழகாக கழுத்தை வளைத்து அதற்கு …. அந்த கழுத்துப்பகுதியை பார்டா.. என்ன அழகா சூரிய வெளிச்சத்தில.. பிரகாசிக்குது… இரசிக்கத் தெரியணும்டா… “ என்றான் நரேன்.
”ஆமாமாம்.. இரசிக்கத்தெரியணும் தான்… இன்னும் கொஞ்ச நேரத்திலே இந்த போலீஸ் காரங்க.. நம்மகிட்ட வரப்போறாங்க… “ என்று திரும்பவும் நெற்றியில் அடித்துக் கொண்டான்.
”ஏண்டா இப்படி உயிரை வாங்குற… நாம் அரசாங்க வேலையில இருக்கிறவங்க.. போலீஸ் வந்து கேட்டா …. கேட்டதுக்கு பதில் சொல்லி விட்டுப் போறோம்..”
என்று முடிப்பதற்குள் காவல் துறை வண்டியிலிருந்து இறங்கிய காவலர் ஒருவர் வந்து“எங்கே போறீங்க?” என்று கேட்டார்.
”சார்.. நாங்க இங்க கொஞ்சம் பச்சிலை மருந்து தேடி வந்திருக்கிறோம். நாங்க அரசாங்க ஊழியர்கள்” பையிலிருந்து அடையாள அட்டையை எடுத்து நீட்டினான் நரேன்.
“ஓ… அப்படியா! நீங்கள் அடுத்த கேட் வழியா உள்ளே போங்கள். “ என்று கையை காட்டினார்.
“ சார். இங்க என்ன பிரச்சினை?” என்று கேட்டான் வசந்த்.
“ யாரோ சினிமா காரங்க வந்து மானை வேட்டையாடியிருக்காங்க.. மான் செத்து கெடக்குது.. வேட்டையாடுனவங்களைக் காணோம்… நீங்க யாரையாவது பார்த்தீங்கண்ணா தகவல் குடுங்க.. காவல்துறை உங்கள் நண்பன்” என்றார் அதிகாரி.
“சரி சார்… கண்ணன் காரைத் திருப்பு.. “ என்றான் வசந்த்.
” காவல்துறை உங்கள் நண்பனாம். கெடச்சா கிழிச்சிருவாங்க..” என்றான் கண்ணன்.
”ஏய்… அவனவன் பிரச்சினை அவனவனுக்கு.. காரை கவனமாக ஓட்டு” என்றான் வசந்த்.
அடுத்த நுழை வாயிலுக்கு வந்த போது.. “ காட்டிலாகா அதிகாரி உட்கார்ந்திருக்கிறார்” என்றான் கண்ணன்.
“இருக்கட்டுமே..” என்று சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கிய நரேன், காட்டிலாகா அதிகாரி அருகில் வந்து தாங்கள் வந்த காரியத்தை விளக்கிய போது “தாராளமாய் போங்கள்… கொஞ்சம் கொடிய மிருகங்கள் இருக்கும். கவனமாகப் போங்கள்” என்றார்.
நரேன் திரும்ப வந்து காரில் ஏறிக்கொள்ள, கண்ணன் “எப்படி சார் போகணும்?” என்று கேட்டான்.
வசந்த் திரும்பிப்பார்த்து விட்டு” கண்ணன்… கொஞ்சம் வலது பக்கம் போய் காரை நிறுத்து…” என்றான்.
“என்ன?” எனக் கண்களால் கேட்டான் நரேன்.
”அனேகமாக.. நாம் தேடி வந்த செடி இதோ இங்கே தான் இருக்கிறது போல…” என்றான் வசந்த்.
காரை நிறுத்தியதும், வசந்தின் பின்னால் இறங்கிய நரேன்” என்ன விளையாட்டு இது..” என்றான்.
அவனைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் “ கண்ணன் கூட இருந்ததானால் தான் கேக்கல… நான் படம் போட்டு இந்த கேட்டிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்துல போய் அங்கே ஒர் பழைய சித்தர் கல்லறை கிட்டே…” என்ற நரேனைப் பேச விடாமல் தடுத்து அழைப்பு வந்ததும் போனை எடுத்து,”கவிதா சொல்லு” என்றான் வசந்த் .
எதிர்முனையில் “ ஏய்.. என்னடா.. இன்னும் நீங்க.. காட்டுக்குள்ளேயே போகல்ல போலருக்கு..” என்றாள் கவிதா .
“இது என்ன.. எடுத்தோம் கவிழ்த்தோம்ணு செய்யற விசயமா?. அம்மா மெதுவாகத்தான் மூவ் பண்ண முடியும்”
“சரி.. சரி.. எங்க இருக்கிறீங்க..”
”காட்டுக்குள்ளே போறதுக்குத்தான் கிளம்பினோம்.. அதுக்குள்ள ஆயிரம் பிரச்சினைகள்… என்ன செய்தி… என்ன அவசரம்? அதச்சொல்லு மொதல்ல..”
“போனை கொஞ்சம் நரேன் கிட்ட குடு…” என்றாள் எதிர்முனை கவிதா..
“இந்தா.. காதலிக்கிறது என்னை … ஆனா உங்கிட்ட தான் பேசணுமாம்” என்றவாறு அலை பேசியை நரேனிடம் கொடுத்தான் வசந்த்.
அலை பேசியை வாங்கிய நரேன்,” சொல்லு. கவிதா. என்ன செய்தி?” என்றான்.
”நெய்லி கிட்டே பேசிக்கிட்டிருந்தேன்.. அது தான்.. நீங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகையிலிருந்து ஒம்பது கிலோ மீட்டர் தூரத்திலே தான் நாம தேடிக்கிட்டிருக்கிற அந்த செடியிருக்குதாம்
நீங்க.. அந்த சித்தர் கல்லறை கிட்டே தானே போய்க்கிட்டிருக்கீங்க..”சாந்தமாக கேட்டாள்
“இங்க நாங்க.. அவசரமாக இருந்துகிட்டிருக்கோம்… நீ வேற… நான் எல்லாம் நெய்லிகிட்டே பேசியாச்சு.. சாயங்காலம் நாங்க திரும்பி வந்த பிறகு கான்பரன்ஸ் கால்லே பேசலாம்.” எரிந்து விழுந்தான் நரேன்.
““சரி.. சரி..” என்று தொடர்பைத் துண்டித்தாள் கவிதா.
”இவ்வளவு சிரமப்பட்டு பிளான் பண்ணி வந்தா.. இங்க… என்ன தாண்டா பண்றீங்க..” சலித்துக்கொண்ட நரேன் ,” ஏன் வசந்த் காரை நிறுத்த சொன்ன..?” எரிச்சலும் கோபமும் கொண்டவனாக கேட்டான்
“ அந்தச் செடியிலே ஏறக்குறைய… நாலு பூ… நாலும் நாலு நிறத்திலே இருக்கும். அப்படித்தானே…” வசந்த் கேட்டான்.
“ஆமா… நாலு பூவும் நாலு விதமா இருக்கும்.. அதாவது ஒரு பூ முல்லைப்பூ மாதிரி இருந்தா இன்னொரு பூ செம்பருத்தி பூ மாதிரி இருக்கும். முல்லைப்பூ வெள்ளையா இருக்கும். செம்பருத்தி பூ மஞ்சள் நிற்த்திலே இருக்கும்.இன்னொரு பூ சூரிய காந்தி பூ மாதிரியும் அது சாம்பல் நிறத்திலேயும் இருக்கும். இன்னொரு பூ தாமரைப்பூ மாதிரியும் அது இளம் நீல நிறத்திலே இருக்கும்.ஆனா எல்லாப்பூவும் ஒரே செடியிலே தான் பூக்கும்.” விவரித்தான் நரேன்.
”அதே மாதிரி ஒரு செடியிலே விதவிதமா பூப்பூத்திருக்கிறத பார்த்ததனால தான் காரை நிறுத்தி இறங்கச் சொன்னேன்” என்றான் வசந்த்.
“அதெப்படிடா இருக்க முடியும்.. நாம ரெண்டு பேரும் தானே வாசித்துப்பார்த்தோம். அந்தக்கல்லு போட்டிருக்கிற இடத்திலேயிருந்து ஏழு மைல் கல் தொலைவிலே சித்தர் கல்லறையிருக்கு.. அந்த கல்லறை பக்கத்திலே”… என்ற நரேனை இடைமறித்து…”நான் பார்த்தேங்கிறனில்லையா… அதைப் பார்த்து விட்டுப்போய் விடலாமே?” என்றான் வசந்த்.
”சரி.. எங்கே பார்த்தாய்?” என்று கேட்டான் நரேன்.
”நம்ம அந்த கேட்டை விட்டு உள்ள வந்தவுடனே இடது பக்கம் பார்த்தேன் நீ விவரித்த மாதிரி கொஞ்சம் நெறைய பூ ஒரு செடியிலே இருந்த மாதிரி பார்த்தேன்” என்றான் வசந்த்.
“டேய்… ஏற்கனவே நேரம் வீணாகிக்கிட்டிருக்கு”
”ஆமா .. இவரு புறாவை இரசிக்கும்போது மட்டும் நேரம் வீணாகலை…” கடுகடுத்தான் வசந்த்.
“சரி .. வா..” என்று இருவரும் காருக்கு வந்தனர்.
“எங்க சார் .. போகணும்?” என்றான் கண்ணன்
”திரும்ப நம்ம வந்த வழியா போப்பா..” என்றான் வசந்த்.
வசந்த் சொன்ன இடத்திற்கு வந்த அவர்கள் இருவரும் வசந்த் சொன்ன இடத்தை நோக்கி நடந்தனர்.
“எங்கடா பாத்தே…” என்று கேட்டான் நரேன்.
“இதோ அந்தப்பக்கம் அந்த செடியைப் பார்” என்றான் வசந்த்.
நரேன் திரும்பிப் பார்த்த போது அங்கே ஒரு நாகப்பாம்பு படம் எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தது….