11 Apr 2020 10:43 amFeatured
மும்பை பாந்திரா கரீம்நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர் முதியவர் பிரேம் சந்திரா (வயது68). ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பிரேம் சந்திராவின் மகன் மோகன் மும்பை மற்றும் ராஜஸ்தானில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தும் ஊரடங்கு காரணமாக அவர்களால் வரமுடியவில்லை.
இதையடுத்து பிரேம் சந்திரா உடலுக்கு அவரது பக்கத்து வீடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் உடலை தோளில் சுமந்து சென்று இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்து தகனம் செய்தனர்.
இதுகுறித்து பிரேம் சந்திராவின் மகன் மோகன் கூறுகையில் ‘‘நாலாச்சோப்ராவில் வசிக்கும் எனது 2 அண்ணன்களை தொடர்பு கொள்ள கூட முடியவில்லை. ராஜஸ்தானில் உள்ள எனது சித்தப்பாக்களுக்கு தகவல் கொடுத்தேன். அவர்களால் வரமுடியவில்லை. இந்தநிலையில் பக்கத்து வீடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் எனது தந்தையின் இறுதிசடங்குக்கு உதவி செய்ய முன்வந்தனர். இறப்பு சான்றிதழ் வாங்கவும், தகனம் செய்யும் இடத்திற்கு உடலை தூக்கி வந்தும் அவர்கள் உதவினார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உதவி செய்தற்காக அவர்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன்’’ என்றார்.
மதங்களை தாண்டி மனிதநேயத்தை வெளிப்படுத்தும் தருணம் இதுவே.