08 Dec 2021 9:57 pmFeatured
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவியும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் விமானியும், ராணுவ கேப்டனுமான வருண் 80% தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டெல்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் ராணுவ அதிகாரிகள் வந்து பயிற்சி அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது , பிற்பகல் 12:40 மணியளவில் கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. காலை முதலே அந்த பகுதியில் பனிமூட்டமான சூழல் நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
விமானப்படையின் டிவிட்டர் பக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணுவ பயிற்சிக் கல்லூரி மாணவர்களுடன் உரையாற்றுவதற்காக தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த விமானப்படை கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் கூறியுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்(63) மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் நாளை டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் விரைந்தார்
இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்பட்டு சென்றார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப., முதலமைச்சரின் செயலாளர் உதயசந்திரன் இ.ஆ.ப., உள்ளிட்டோரும் விமானத்தில் சென்றுள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பற்றிய குறிப்பு :
கடக்வஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, 1978- ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் 11- வது கூர்க்கா ரைஃபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார். வடகிழக்கு எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், பாகிஸ்தான், சீன எல்லைகளில் பணியாற்றினார். காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் பணியாற்றி, அங்கு படைகளுக்கு தலைமைத் தாங்கினார்.
டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி பொறுப்பை வகித்துள்ளார். ராணுவச் செயலர் பிரிவில் துணை ராணுவச் செயலாளர், கர்னல் அந்தஸ்தில் பணியாற்றியுள்ளார்.
2016- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி அன்று நாட்டின் 26- ஆவது ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார். பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் ஃபோர்ட்லீவொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பங்கெடுத்தவர். பிபின் ராவத் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி அன்று பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.