02 Oct 2019 7:48 pmFeatured
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்.ஆர்.எஸ்.சி. எனப்படும் இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. அதில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தவர் கேரளாவைச் சேர்ந்த சுரேஷ். 56 வயதான அவர் அமீர்பேட்டில் உள்ள அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
அவரது மனைவி இந்திரா, சென்னையில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஒரு மகன் அமெரிக்காவிலும், மகள் டில்லியிலும் வசித்து வருகின்றனர்.. இந்த நிலையில், சுரேஷ் நேற்று பணிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
உடன் பணிபுரியும் விஞ்ஞானிகள், சுரேஷூக்கு செல்போனில் அழைப்பு விடுத்த போதும் அவர் பதில் அளிக்காததால், மனைவி இந்திராவிடம் தகவலைக் கூறினர்.
இதை அடுத்து உறவினர்களுடன் அங்கு விரைந்த இந்திரா, வீட்டை திறக்க முயற்சித்த போது முடியாததால், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுரேஷ் சடலமாகக் கிடந்தார். இதைக் கண்ட சுரேஷின் மனைவியும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
தலையில் கனமான பொருளால் சுரேஷ் தாக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மர்மநபர்கள் வீடு புகுந்து சுரேஷைத் தாக்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த திங்களன்று, மாலை 5.30 மணியளவில் அவர் பிளாட்டுக்குத் திரும்பினார் என்று, அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், அவர் செவ்வாய்க்கிழமை வேலைக்கு வரவில்லை என்று, என்ஆர்எஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவருடன் பணியாற்றும் சக அதிகாரிகள் நேற்று செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது, அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக, அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, எஸ்.ஆர்.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முராலி கிருஷ்ணா கூறுகையில், “அவரது தலையின் பின்புறத்தில் மூன்று காயங்கள் இருந்தன. பழைய குடியிருப்பில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. பிளாட்டில் இருந்து விலைமதிப்புமிக்க பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை. தீவிரவிசாரணை நடக்கிறது’’ என்றார்.