08 Nov 2020 10:58 amFeatured
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. நாட்டில் 46 வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் ஆளும் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப்(74) மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன்(77) ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் வாக்கு பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி 4 நாளாக வாக்கு எண்ணிக்கை நடந்தும் யாரும் பெரும்பான்மை பலத்தை எட்டவில்லை. நேற்றைய நிலவரப்படி 538 எலக்டோரல் வாக்குகளில் ஜோ பைடன் 264 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
வெற்றியை தீர்மானிக்கக் கூடிய 4 முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா (20 எலக்ட்ரோல் வாக்கு), ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா ஆகியவற்றில் தொடர்ந்து பைடன் முன்னிலை வகித்து வந்தார். வடகரோலினாவில் மட்டும் டிரம்ப் முன்னிலையை தக்க வைத்துள்ளார். இம்மாகாணங்களில் தபால் ஓட்டுகள் அதிகளவில் போடப்பட்டுள்ளதால், அவற்றை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் 99 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டு விட்டன.
இந்நிலையில் பென்சில்வேனியாவின் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு மாகாணத்தில் வென்றால் கூட ஆட்சி அமைக்க தேவையான 270 வாக்குகள் பெரும்பான்மையை பைடன் எட்டி விடுவார் என்ற நிலையிருந்தது. மேலும், 4 மாகாணங்களையும் பைடன் கைப்பற்றும் பட்சத்தில் 300க்கும் அதிகமான எலக்டோரல் வாக்குகளை பெறுவார். கிட்டத்தட்ட பைடனின் வெற்றி உறுதியாகி விட்டதால், நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர்.இதைத் தொடர்ந்து பைடனும் புதிய அதிபராக பதவியேற்க தயாராகி வருகிறார்.
தனது சொந்த ஊரான தலாவார், வில்மிங்டனில் பைடனும், துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிசும் கூட்டாக நாட்டு மக்களிடம் உரையாற்றினர். அப்போது பைடன் கூறுகையில், ‘‘எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது. இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருந்தாலும், மக்கள் பணியாற்றுவதில் தாமதிக்க விரும்பவில்லை. ஏற்கனவே கூறியபடி எங்களின் முதல் வேலை கொரோனாவை கட்டுப்படுத்துவதே. இதற்காக கமலா ஹாரிசும் நானும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். பொது சுகாதாரத்தோடு நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்பதற்கான ஆயத்த பணிகளை இப்போதிலிருந்தே தொடங்குகிறோம்’’ என அறிவித்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பென்சில்வேனியா மாகாணத்தின் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 20 எலக்ட்ரோல் ஓட்டுக்களை பெற்ற நிலையில் மொத்தம் 273 எலக்ட்ரோல் வாக்குகளை தாண்டியதால் ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றார்.
இதனால் உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்கிறார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்தவர். தலவரில் நீண்ட காலமாக செனட்டராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகிறார். கடந்த 1990ம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் ஆளும் கட்சி இரண்டாவது முறையாக ஆளும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகும் வாய்ப்பை டிரம்ப் இழந்துள்ளார். வெற்றி பெற்ற பைடனுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துகள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தேர்தலில் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் தங்களது துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.