30 Sep 2020 12:38 amFeatured
வே.சதானந்தன் எழுதும்
குறுந்தொடர் கதை
அத்தியாயம் - 2
நினைவலைகள் - குளோபல் பொறியியல் கல்லூரி
கார்த்திக்-சுரேஷ் இருவரும் இணைபிரியா நண்பர்கள் இரவில் படுத்துறங்கும் நேரம் போக மீதி நேரம் இருவருக்குமான நேரமே. இருவருமே ஆணழகர்கள். பல பெண்களின் கடைக்கண் பார்வைக்கு இலக்கானவர்கள்.
கார்த்திக் சற்றே அமைதி ரகம். கோபம் கொண்டானென்றால் சுனாமியாய் எழுவான். ஆனால் அனைவரிடமும் நல்ல நட்புடன் பழகும் ரகம் எனவே நண்பர்கள் அதிகம்.
சுரேஷ் காதல் மன்னன் என்றே சொல்லலாம். ஏற்கனவே இரண்டாம் ஆண்டு படிக்கும் ராகவியை தன் காதல் வலையில் சிக்க வைத்திருந்தாலும். தேடுதல் வேட்டை இன்னமும் தணியாதவன்.
இருவரும் பொறியியல் நான்காம் ஆண்டு அடியெடுத்து வைத்த நேரம். புதிதாகச் சேர்ந்தவர்களில் பலர் இடம் புதிது, சூழ்நிலை புதிது என்பதை அவர்களின் நடை உடை பாவனைகளே காட்டிக்கொடுத்தது.
ஆனால் அவள் என்னவோ புது தினுசாக தெரிந்தாள், ஆம் மூன்றாம் ஆண்டு மாணவிகளுடன் வந்துகொண்டிருந்தாள். ஆனால் புதிது என்பது மட்டும் தெரிந்தது. கார்த்திக்கின் ஊரைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவியான சுகந்தி மட்டும் அவர்களை விட்டு விலகி கார்த்திக்கிடம் வந்தாள்.
”கார்த்திக் என்னை நீ போகும்போது அப்பா ஆபீஸில் இறக்கி விட்டுடுவியா?” என்றாள். ”ஏன் உன் ஸ்கூட்டி என்ன ஆச்சு?” என்றவனுக்கு ”அதை விடு…அதுக்கு கயலான் கடைக்கு போற நேரமாச்சுன்னு போட்டாச்சு. அப்பா அடுத்த மாசம் லோன்போட்டு வண்டி வாங்கி தாரேண்ணு சொல்லியிருக்கிறார்” என்றவளிடம்.
சரி நான் புறப்படவேண்டியதுதான் வா இறக்கி விட்டுவிட்டு போகிறேன். என்றவன் பின்னாடி அமர்ந்து தோழிகளுக்குக் கையை அசைத்துக் காட்ட கார்த்திக்கின் வண்டி வேகமெடுத்தது. மற்ற தோழிகளுக்கு அவர்களைப் பற்றித் தெரியும். ஆனால் புதிதாகச் சேர்ந்திருக்கும் ரேவதிக்கோ முகம் என்னவோ ஒரு மாதிரியாக ஆனது.
பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த கார்த்திக் சுகந்தியிடம் ”உன்கூட புதுசா ஒரு பொண்ணு வந்தாளே அது யார்?” என்று கேட்க
சுகந்தி நக்கலாக “புதுப்பொண்ணு பற்றி ஸ்பெஷலா கேக்கிறீயே… பழைய பொண்ணுங்களெல்லாம் யார் யார்ன்னு உனக்கு தெரிஞ்சு போச்சாக்கும்?” என்று சிரிக்க
அந்த கேள்வியை அவனே அவனுக்குள் கேட்டுக்கொண்டான். அந்த புதிய வரவை மட்டும் நான் ஏன் அறிய ஆசைப்படுகிறேன்?” விடை அவனை அந்த கேள்விக்கு வெட்கப்பட வைத்தது. சமாளித்துக் கொண்டு ”அம்மாடி தப்பா கேட்டுட்டேன் இத்தோட விட்டுடு” என்றான்.
“இல்ல… நீ டிஃபனை மறந்து வச்சுட்டு வந்துட்டா ’ஆத்தா’ ஏங்கிட்ட கொடுத்து அனுப்புமே. அப்போ உன்னை தேடி எங்கெல்லாம் அலைவேன் கிடைக்கமாட்டே. கடைசியா…. எப்போவும் பெண்கள் கண்ணில் பட்டுகிட்டே இருக்கும் உன் பிரண்டு சுரேஷ் கிட்ட கொடுத்துவிடுவேன். ஆனால் இப்போதெல்லாம் நீ அடிக்கடி என் கண்ணுல படுற. அதுதான் கேட்டேன்.” என்ற சுகந்தியின் துல்லியமான கணிப்பை எண்ணி வியந்துதான் போனான்.
சுகந்தி இறங்கவேண்டிய அவளது தந்தையின் அலுவலகம் வர, இறங்கிக் கொண்டு. ”சரிப்பா ரொம்ப பீல் பண்ணாத… அந்த பொண்ணு நம்ம போஸ்ட் மாஸ்ட்டரோட பொண்ணு. பேர் ரேவதி. சென்னையில் அவுக அம்மாகூட தங்கி படிச்சிருக்கா. நாலு மாசம் முன்னால் அவுங்க அம்மா இறந்து போனார்களாம். ஒரே பொண்ணு அதனால அவுங்க அப்பா இங்கே சீட் வாங்கி சேர்த்துட்டார். நல்லப்பொண்ணு. ஆண்களை கண்டாலே ஒதுங்கிப்போவா…. இதுதான் அவள் சரித்திரம். போதுமா?” என்று சொல்லி சிரித்தாள். விரும்பியும் அவனும் விருப்பின்றி கேட்பவன் போல நடித்து. “சரி சரி நான் ஏதோ சும்மா கேட்டேன் அதுக்கு அவ குல வரலாறே சொல்லிட்ட” என்றபடி நகர்ந்தான்.
நகரும்.........