24 May 2021 7:25 pmFeatured
வே.சதானந்தன் எழுதும்
குறுந்தொடர் கதை
அத்தியாயம் - 3
ரேவதி…. மிஸ் ரேவதி…
நினைவலை கலைந்து ஏறிட்டுப் பார்த்தவள் முன் வரவேற்பறை பெண் கேலிப்புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள் ”என்ன மேடம் ஏதாவது கனவா?” என்ற ரிசப்சனிஸ்ட்க்கு இல்லை இல்லை என்று பதில் கூறியவாறே எழுந்தாள் ரேவதி.
மிஸ் ரேவதி நீங்கள் போய் மேனேஜரை பாருங்கள் என்றபடி மேனேஜர் அறையை நோக்கிச் சுட்டி காட்டிவிட்டு தனது இருக்கைக்குச் சென்றாள் ரிசப்சனிஸ்ட்.
மேனேஜர் அறைக்கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த ரேவதிக்கு எதிரில் உள்ள இருக்கையைக் காட்டிய மேனேஜர் அவளிடம் பணி நியமன ஆணையை நீட்டி இதைச் சரிபார்த்துக் கொள்ளவும் விருப்பமென்றால் நீங்கள் கையெழுத்திடலாம். என்றார்.
படித்து பார்த்தவள் ”ரேவதி” ”ப்ராஜக்ட் அன்ட் மார்க்கெட்டிங் மேனேஜர்” என்று இருந்ததைப் பார்த்து சற்று தயக்கத்துடன் கூடிய மகிழ்வில் வாயடைத்துப்போனாள்.
சார்….. என்றவளை இடைமறித்த மேலாளர் ஓகே என்றால் கையெழுத்திட்டுவிட்டு இன்றேகூட பொறுப்பேற்றுக்கொள்ளலாம் அல்லது உங்களுக்கு வசதியான நாளில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். யோசித்து பதில் கூறுங்கள் என்றபடியே அவள் என்ன கேட்கப்போகிறாள் என்று கூட எதிர்பார்க்காமல் தனது வேலையில் மூழ்கலானான்.
ஒகே சார் நான் இன்றே பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்றவளைப் பார்த்து நட்பு புன்னகை பூத்தபடி ”வாழ்த்துகள் இதில் கையெழுத்திட்டுவிட்டு ரிசப்சன் போங்கள் அவர் உங்கள் துறைக்கு வழிகாட்டுவார். அங்கே உங்கள் துறை ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்” என்றவருக்கு நன்றி கூறி வெளியே வந்தாள்.
”எஸ் மேடம் வாழ்த்துகள்” என்றபடியே எழுந்த ரிசப்சனிஸ்ட் ”வாருங்கள்” என்றபடியே அழைத்துச்சென்று அவளது அறைக்கதவைத் திறந்து வழிவிட அங்கே விசாலமான அந்த அறையில் 20 ஊழியர்கள் எழுந்துநின்று மென்மையாகக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
கரவொலி அடங்கிய பின் ரிசப்சனிஸ்ட் ”சுரேஷ் சார்… மேடத்திற்கு அவர்கள் பணிகுறித்து விபரங்களை விளக்கவும் மற்றும் பணியில் அவர்களுக்கு நீங்கள் உதவிடவேண்டும் என்பதும்; இன்று மாலை 5 மணிக்கு எம்.டி அனைவரையும் மீட்டிங் ஹாலில் சந்திக்கிறார் எனவே அனைவரும் அங்கே குழும வேண்டும் என்பதும் எம்.டியின் உத்தரவு.” என்றபடி ரேவதியைப் பார்த்து “ஆல்த பெஸ்ட் மேடம்” என்று கூறிவிட்டு நகர்ந்தாள் ரிசப்சனிஸ்ட்.
புதிய பொறுப்பு புரிந்துகொள்வதில் நேரம் போனது தெரியவில்லை.
5 மணிக்கு அனைவரும் மீட்டிங் ஹால் புறப்பட்டனர். ரேவதிக்கோ வேலை கிடைத்த மகிழ்வு, இப்பொழுது மீட்டிங்ஹாலில் சந்திக்கப்போகும் மகிழ்வு இதையும் தாண்டி ஏனோ மனதில் ஒரு நெருடல். கார்த்திக்கே அழைத்துப் பணி நியமன கடிதத்தைத் தரவில்லையே. ஒரு வேளை நானும் மற்றவர்களைப்போல இந்த நிறுவனத்தின் ஒரு பணியாள் என்பதை உணர்த்தும் வித்தையோ என மனம் கனத்து விட்டுவிடுவோமா என்ற எண்ணம் வந்தாலும் அவளுக்கு வேலையின் அவசியமும் அவனது அண்மையும் வேண்டும் என மனது கூறியது.
கார்த்திக் மீட்டிங் ஹாலுக்குள் வர அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க. அமரச்சொல்லி சைகை காட்டிவிட்டு கார்த்திக் தனது இருக்கையில் அமர்ந்தான். கம்பீரம் எங்கிருந்து வந்ததோ எனப் பார்த்தாள்.
அவனா இது? அன்று…….. அன்றைய நிகழ்வு என்ன ஒரு பயங்கரம்.நினைக்க நினைக்க வருந்தியது மனம், கிழிந்த நாராய்…. அவளுக்கு அழுகை பீரிட்டு வந்தது, கண்கள் நீரால் நிரம்பியது. முகத்தைத் துடைப்பதுபோல கண்ணீரைத் துடைத்து சமாளித்தாள்.
கார்த்திக் பேசிக்கொண்டிருந்தான் கவனத்தை அவன் பேச்சில் திருப்ப நல்ல நேரம் இப்பொழுதுதான் முக்கிய கட்டத்திற்கு வந்தான்.
நான் தலைமை அலுவலகத்தில் இருக்காமல் இங்கே ஏன் இருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
மிஸ் ரேவதி புதிதாக இங்கே பொறுப்பேற்றுள்ளார். திறமையும் அனுபவமும் எதையும் தொலைநோக்கு பார்வையோடு சிறந்த முடிவை எடுக்கும் திறமை அவருக்கு உண்டு என்று நான் நம்புகிறேன் அவருக்கு உங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து நமது நிறுவனம் மேலும் வளர பாடுபடுவீர்கள் என நம்புகிறேன்.
நாளை முதல் நான் தலைமை அலுவலகத்திலிருந்து உங்களுடன் தொடர்பில் இருப்பேன்.
ரேவதிக்கு இடி இறங்கியது போன்ற ஒரு உணர்வு… தொலைநோக்கு பார்வை, முடிவெடுக்கும் திறமை என எதையோ சொல்லி இதயத்தை ரணமாக்கிவிட்டதொரு உணர்வு. இனி இந்த அலுவலகத்திற்கு நித்தமும் வரமாட்டான்…. இனியும் அதே ஏகாந்தம்……… விடிவு……….
தொடரும்.......