01 Jun 2021 7:46 pmFeatured
வே.சதானந்தன் எழுதும்
குறுந்தொடர் கதை
அத்தியாயம் - 4
மாலை தனது அறையில் அமர்ந்திருந்த ரேவதி "மே ஐ கமின்" என்றபடி கதவைத் தட்டி உள்ளே வந்த ரிசப்சன் பெண்ணைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள்.
ரேவதி புன்னகைத்தாலும் ரிசப்சன் பெண் அந்த ”மோனாலிசா புன்னகையில்” இழையோடும் ஒரு சோகத்தைப் புரிந்துகொண்டாள் போலும். ”மேடம் இந்த வேலை உங்களுக்குப் பிடித்திருக்குதானே ?” என்று கேட்டுவிட்டாள்.
ஆனால் ரேவதிக்கோ அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை எனவே சமாளிப்பு சிரிப்பு சிரித்தபடியே அப்படியெல்லாம் ”ஒன்றுமில்லை… முதல்நாள் அல்லவா கொஞ்சம் ”நெர்வஸ்” ஆக இருக்கிறது” என்றவள் ”சரி சரி இதைக் கேட்க நீ வரவில்லை என்று நினைக்கிறேன்…. சொல் சொல்ல வந்த விசயத்தை” என்றாள் மீண்டும் சிரித்தபடி.
ரிசப்சன் பெண்ணும் சிரித்துவிட்டு “ஆமாம் மேடம்… மாலை ஆறு மணி ஆகிவிட்டது. உங்களுக்கு வேலை நேரம் தெரிய வாய்ப்பில்லை அல்லவா அதைத்தான் சொல்ல வந்தேன்.” என்றவள். “உங்களுக்காக வாகனம் காத்திருக்கிறது வாருங்கள்” என்றவளை ஆர்வம் நிறைந்த ஆச்சரியக் குறியுடன் ரேவதி ஏறிட்டுப் பார்த்தாள்.
அலுவலக போர்டிக்கோவில் வாகனம் நின்றது ரிசப்சனிஸ்ட் ரேவதியை பின் இருக்கையில் ஏறும்படி பணித்துவிட்டு தானும் அதில் ஏறிக்கொண்டாள். ஓட்டுநர் யாருக்கோ காத்துக் கொண்டிருப்பது போல் தோணியது. திடீரென்று பரபரப்பான ஓட்டுநர் கதவைத்திறந்து வாகனத்துக்கு முன்வழியாக சுற்றிச் சென்று முன் இருக்கைக் கதவைத் திறக்கவும் கார்த்திக் வரவும் சரியாக இருந்தது.
ரேவதி முகத்தில் ”ஆயிரம் வால்ட் பல்ப் வெளிச்சம்”. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.
ஓட்டுநர் தனது இருக்கைக்கு வந்து காரை ஸ்டார்ட் செய்தான். இவன் எதற்கு நம்முடன்? ரேவதிக்குச் சற்று புரியவில்லை எனினும் அமைதியாக இருந்தாள். அவளைப்போலவே வாகனத்துக்குள்ளும் அமைதி அந்த அமைதியைக் கலைத்தான் கார்த்திக். ”மிஸ் ரேவதி இந்த வாகனம் உங்களுக்காக ஒதுக்கப்பட்டது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் சுவாதியையும் (ரிசப்சனிஸ்ட்) நீங்கள் வழியில் பிக்கப் அண்ட ட்ராப் செய்யலாம். உங்கள் விருப்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான் உதவி கேட்கும் தொனியில்.
உடனே சுவாதி என்ற ரிசப்சனிஸ்ட் மேல் ஒரு சந்தேகம் ஒரு எரிச்சல் வந்தது ரேவதிக்கு. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல். ”நோ ப்ராப்ளம் சார் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..” என்றவள் ”எனக்கும் வாகனம் ஒதுக்கியமைக்கு நன்றி” என்றவளுக்குப் பதில் கூடச் சொல்லாமல் அமைதி காத்ததுடன் அதை உதாசீனப்படுத்துகிறானோ? என்றுகூடத் தோணியது அவளுக்கு.
வேகமாக போய்க்கொண்டிருந்த வாகனம் சற்று வேகம் குறைந்து இடது புறமாகத் திரும்பி ஒரு சாலையில் வேகமெடுத்தது. வழியை பார்த்துக்கொண்டு வந்த ரேவதிக்குச் சாலையோரத்தைப் பார்த்துப் புரிந்தது இண்டெர்னேஷ்னல் ஏர்போர்ட் செல்லும் வழி என்று.
காலை எதிர்பாராத சந்திப்பு முதல் இதுவரை நடந்தவற்றை அசைபோட்டபடியே ரேவதியின் பயணம் தொடர்ந்தது.
ஏர்போர்ட்டின் ”புறப்பாடு” வாசலுக்கு நேரே வாகனம் சென்று நின்றதும் கார்த்திக் ”சுவாதி.. நாளை மாலை 5 மணிக்கு எனக்குத் தொலைப்பேசி செய்து… இணைப்பை மிஸ்.ரேவதிக்குக் கொடுக்கவும். மறக்கவேண்டாம்” என்றபடியே இறங்கி ஏர்போர்ட் வாசலை நோக்கி நடக்கலானான்.
வாகனம் நகர ரேவதிக்கோ மூளைக்குள் பெரும் வண்டிச்சக்கரமே சுழல ஆரம்பித்தது. கார்த்திக்கே தன்னை அழைத்துப் பேசலாம் அல்லது என்னை அழைக்கச் சொல்லியிருக்கலாம். அதைவிட்டு ஏன் ரிசப்சனிஸ்ட்டிடம் சொல்லி இணைப்பைக் கொடுக்கச் சொல்லுகிறான். இடையில் இந்த சுவாதி ஏன் ? என்று எரிச்சல் வந்தது சுவாதி மேல். மனதில் கேள்வி உறுத்த ஸ்வாதியிடம் கேட்டேவிட்டாள்.
யோசனையில் இருந்த ஸ்வாதியோ ரேவதியின் கேள்வியில் கலைந்து “ஆமாம் மேடம் எனக்கும் புரியவில்லை.. சார் பெரும்பாலும் முக்கியமாகப் பயண நேரத்தில் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பெர்ஸ்னல் நம்பருக்கு என்னை அழைக்கச் சொல்லுவார்… ஆனால் யாருக்கும் இணைப்பு கொடுக்கச் சொல்லமாட்டார். உங்களுக்கு எப்படி இணைப்பு கொடுக்கச் சொன்னார் என்று புரியவில்லை.
அதுவும் அவரது பெர்ஸ்னல் நம்பரிலிருந்து பேசுவதானால் ரிசப்சனிஸ்ட் என்பதால் என்னிடமும் தலைமை மேடத்திடமும்தான் பேசுவார்.” என்றாள் குழம்பியபடியே சுவாதி.
”தலைமை மேடம்? யார் அது? என்றாள் ஆவலுடன் ரேவதி
“சுகந்தி மேடம்தான் தலைமை மேடம்” என்றாள் சுவாதி….
”சுகந்தி மே…டம்? சுகந்தி ஆறுமுகம் ?” என்று கேட்ட ரேவதியைப் பார்த்து ஆச்சரியத்துடன் சொன்னாள் சுவாதி
”ஆமாம் மேடம் சுகந்தி ஆறுமுகம்தான்”
உங்களுக்குத் தெரியுமா ?
பலத்த இடியுடன் மின்னலும் பலத்த காற்றும் மழையும் சேர்ந்தே பெய்தது ரேவதிக்குள்.
தொடரும்........
ஒரு வடிவேல் காமெடி உண்டு.”மருதமலை மாமணியே”
பாடும் போது ரொம்ப தம் கட்டி பாடாதீங்க.”இதயம் வெடிச்சு நாக்கு தள்ளி” என்று சைகை காட்டுவார்.காதல் கதையில் இப்படி வாராவாரம் சஸ்பென்ஸ் வைத்தால் படிக்கிறவன் நிலைக்கும் அது பொருந்தும்.அருமையான தொடர். வாழ்த்துகள்…வெங்கட்,டோம்பிவலி