31 Jul 2021 7:48 pmFeatured
வே.சதானந்தன் எழுதும்
குறுந்தொடர் கதை
அத்தியாயம்-6
கார்த்திக் “ஹலோ” சொல்வதையே காதலின் வெளிப்பாடாய் நினைத்து மகிழ்ந்துகொண்டிருக்கும் ரேவதி. அன்று சுகந்தி இல்லாமல் கல்லூரி விட்டு அவள் மட்டுமே தனித்துப் போகவேண்டிய கட்டாயம். கார்த்திக்கும் வழக்கம்போல் ஹலோவுக்கு பதில் ஹலோ சொல்லிவிட்டு நகர “தனியாக போகிறாயே நான் ட்ராப் செய்யட்டுமா...” என்று சொல்லிவிடமாட்டானா ? அப்படிச் சொன்னால் சரியென்று அவனுடன் பைக்கில் சென்றுவிடலாமே! தவித்தது ரேவதி மனது.
ஆனால் கார்த்திக் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட வாடிய முகத்துடன் நடந்தாள்
அருகாமையில் ”ரேவதி” என்றழைத்த குரலைக்கேட்டுத் திரும்பினாள் கார்த்திக்கின் உயிர் நண்பன் சுரேஷ்தான் ரேவதி என்று அழைத்தபடியே வந்துகொண்டிருந்தான்.
சுரேஷ் ரேவதியின் ஊரைச்சார்ந்தவன் என்றாலும் அவ்வளவு பரிச்சயம் இல்லை. இருப்பினும் கார்த்திக்கின் நண்பன் என்பதால் கார்த்திக்கின் ஏதாவது செய்தியைச் சுமந்து வந்திருப்பானோ!? என உள்ளூர மகிழ்ந்து பரிச்சயம் இல்லாவிட்டாலும் புன்னகைத்தாள்.
”ரேவதி உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும்” என்றபடி அருகில் வந்தவனிடம் ”சொல்லுங்கண்ணா” என்றாள் சற்று ஆவலுடன் கூடிய ஆர்வத்துடன்.
”இந்த வருஷம்தான் புதுசா சேர்ந்திருக்க காலேஜ்ல செட்டில் ஆகிட்டண்ணு நினைக்கிறேன். எதுவும் பிரச்சனைன்னா தயங்காம சொல்லு” என்றவனிடம் ”சரிண்ணா.. ஆனால் இதுவரை அப்படி ஒன்னும் பிரச்சனை இல்லை“ என்றாள் ரேவதி.
”ஒகே.. நல்லது” என்றவன் ”ரேவதி எனக்கு உன்னிடம் முக்கியமான விசயம் பேசவேண்டும் சுற்றி வளைச்சு பேச விரும்பல.. நான் சொல்ற விசயத்தை புரிஞ்சு நடத்துக்கோ… நானும் கார்த்திக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் நல்ல நண்பர்கள்.. ஆனால் அந்த நட்பு. முறிவதற்கு நீ காரணமாகிவிடாதே.. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு நல்லாவே புரியும்..” என்றவனிடம் “அண்ணே இதுவரை அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை…” என்று ரேவதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சுரேஷ் அவளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தான்.
ச்..சே.. என்ன ஒரு கேவலமான நட்பு இது.. இத்தனை வருட நட்பை விட இவனுக்கு ”அது” தான் முக்கியமா? என்று சலித்தபடியே நடந்தாள் பேருந்து நிலையத்தை நோக்கி.
அவளுள் ஆற்றாமை ஊற்றெடுத்தது… இவன் யார்? இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? எனது காதலை அரும்பிலேயே கொய்யத் துடிக்கும் இவனுக்கு அந்த உரிமையைத் தந்தது யார்?
எனது தாயோ அல்லது எனது தந்தையோ என்னை எதற்கும் கட்டுப்படுத்தியதில்லை இவன் யார்? உள்ளுக்குள்ளேயே குமுறினாள். ரேவதி.
இவன் எனக்கு அறிவுரை கூறுகிறானா ? அல்லது என்னை எச்சரிக்கிறானா ?. எதுவாயினும் கார்த்திக் மீதான ஈர்ப்பை அசைக்க முடியாத காதலாக மாற்றிய பெருமை சுரேஷையே சாரும்.
இன்று இது பற்றி அப்பாவிடம் பேசிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் வீட்டிற்குத் திரும்பினாள்.
அடுப்படியில் இருந்து வெளியே வந்த ரேவதியின் அப்பா
”என்னம்மா முகமெல்லாம் வாடியிருக்கு காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா ?” என்று வாஞ்சையோடு கேட்டார்.
”இல்லப்பா ஒன்னுமில்லை” என்று கூறிவிட்டு தனது அறையை நோக்கிச்சென்றாள். என்றும் கல்லூரி சென்று திரும்பும் மகளின் முகப்பொலிவு இன்று மிஸ்ஸிங் என்பதைப் புரிந்துகொண்ட தந்தை மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
இரவு சாப்பாடு முடிந்தும் மகளின் முகம் சகஜ நிலைக்கு வராததை உணர்ந்த தந்தை மகளின் அறைக்குச் சென்று மகளிடம் பேச்சுக்கொடுக்க. பொறுக்க முடியாத ரேவதி சுரேஷ் பேசியதையும் தனது எண்ணத்தையும் ஈர்ப்பையும் கொட்டித்தீர்த்தாள்..
பொறுமையாகக் கேட்ட தந்தையோ “நான் அந்த காலத்து எஸ்எஸ்எல்சி உன்னை என்னைவிட அதிகமாகப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு நல்லது கெட்டதை பகுத்துப்பார்க்கும் அறிவை ஊட்டியிருக்கிறேன். சரியான முடிவை நீ எடுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, எனவே உனது எந்த முடிவையும் நான் எதிர்க்கமாட்டேன். ஆனால் ஒன்றை நீ புரிந்துகொள்ளவேண்டும். இந்த சமூகம் தொந்தரவு கொடுக்கும் உன்னை வாழவிடாது…. இந்த ஒரு சுரேஷ் மட்டுமல்ல பல சுரேஷ்கள் முளைப்பார்கள்.” என்றார் தந்தை
தந்தையின் வார்த்தைகள் ரேவதிக்கு ஆறுதலையும் மகிழ்வையும் தந்தாலும் அவரது எச்சரிக்கை யோசிக்கவைத்தது.
கோபம் குறைந்து குழப்பத்தில் அமர்ந்திருந்த மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தபடியே ”இன்னமும் ஒரு வருச படிப்பு இருக்கிறது.. அதை நல்லபடியா படிச்சு முடி.. தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,கணவன்,பிள்ளைகள் இவர்களைவிட படிப்புதான் உன்னுடன் கடைசிவரை வரும்.. உன்னைக் காப்பாற்றும் சக்தி அதுக்கு மட்டுமே உண்டு… உன் தகுதியை வளர்த்துக் கொண்டால் காலமும் மாறலாம் எதிர்ப்பும் பணியலாம்” என்று ஆறுதலும் அறிவுரையும் வழங்கினார்.
மறுநாள் காலை எழுந்த மகள் உற்சாகமாக இருப்பதையும் ஏதோ முடிவெடுத்துவிட்டாள் என்பதையும் அறிந்துகொண்டார் தந்தை. நல்லது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது என்பது தெரியும் ஆனாலும் மகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கமாட்டாள் என்பதால் அவளுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாலும். தந்தையாய் மனதினுள் ஒரு கவலை இருக்கவே செய்தது.
ரேவதி கல்லூரிக்கு உற்சாகமாகப் புறப்பட்டாள் சுகந்தி நின்ற இடத்தை நோக்கி நடந்தாள். இருவரும் புன்முறுவலைப் பரிமாறிக்கொண்டனர். “என்ன ரேவதி ஏதோ வித்தியாசம் தெரிகிறது என்ன விசயம்?”’ என்றாள் சுகந்தி ரேவதி முகத்தை படித்தபடியே…..
”ஒன்..னு..மில்லை..” என்றபடியே கையில் இருந்த மடித்த காகிதத்தை சுகந்தி கையில் கொடுத்துவிட்டு ”நான் உன்னை அப்புறம் பார்க்கிறேன்…” என்று சொல்லிவிட்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தபடியே ரேவதி நடக்கலானாள்.
”என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு…” என்றபடியே காகிதத்தைத் திறந்து பார்த்தாள் அழகான வாழ்த்து மடல் போன்ற காகிதத்தில்….
கடினம்
என நினைப்பது
காலக்காற்றில்
கரைந்தும் போகலாம்
தடைகள் யாரிட்டாலும்
கனவையும் காதலையும்
தடுத்துவிடமுடியாது
தூண்டினால்தான்
தீபம் ஒளிரும்
தாண்டினால்தான்
தடை நீங்கும்
வாழ்வை
வேண்டிநிற்கிறேன்.!
உன் இதயத்தில்
இளைப்பாறவாவது
இடம் கொடுப்பாயா!
என்னுள்
நீ இருப்பதை
கொட்டிவிட்டேன்
உன்னுள் நானிருந்தால்
சொல்லியனுப்பு!
காதல் வந்தால் சொல்லியனுப்பு!!
-ரேவதி
தொடரும்......
GOOD STORY INTERESTING.