02 Oct 2019 9:10 pmFeatured
பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
காமராச அன்னைநீ! கல்விக்கொரு தந்தைநீ !!
கற்றோர் வியந்திடும் கருணை மழையென
கவிஞன் தேடிடும் கருத்துச் செறிவே
கல்லா தோர்க்கு கல்விக் கிடங்கே
கிடங்கின் ஆழம் கண்டவர் கோடி
கிடைக்கா தேங்கும் கருணையை நாடி
கற்றிட ஏங்கும் கல்லார் தனையே
காண்போர் மதிக்கும் கருணை அளித்தாய்
அளித்தவை அன்பும் அறனும் தவிர
அடங்கா பசியை ஆற்றிட உதவி!
அறிவுப் பசியை அடைந்திடச் செய்யும்
அன்னையர் குணத்தில் அகரம் நீயே
நீயே அறியாதொன்றை நன்றாயாமே படிக்க
நெஞ்சில் சுடர்தனை நிறுத்திய பண்பால்
நினைவினில் மறையா நிலைதனை பெற்ற
நீடித்த புகழின் நெறிசார் மேதை
மேதைகள் கல்வி மேல்நா டென்றால்
மேட்டுக் குடியின் மேனியை தவிர!
முயல்வோர் எவரும் மேம்படப் பயக்கும்
மேதைத் தனத்தை முந்திச் சென்றாய்!!
சென்ற இடமெல்லாம் சிறப்பைக் கண்டாய்
சேர்த்து தமிழையும் சிரத்தில் வைத்தாய்
செல்லாக் காசெனச் செய்தோர் சதியை
சொல்லார் இல்லா செய்தியாய் ஆனாய்
போனவை வடக்கோ பொழுத்துசார் தெற்கோ
பேனா முனிகளை பேச வைத்தாய்
பேசிய வாய்களை பேசாது செய்தாய்
பெற்றோர் பெயர்தனை புவிதனில் விதைத்தாய்
விதைத்தவை யாவும் விளைச்ச லுக்கில்லை
விதியென நின்றால் வேலையும் இல்லை!
வெற்றிப் பாதையின் விடியல் சொன்னாய்
விழாது காக்கும் விழுதாய் நின்றாய்
நின்ற மனத்தின் நினைவாய் போனாய்
நீண்ட புகழின் நிறமாய் ஆனாய்
நேர்மை யற்ற நெஞ்சு டையோரை
நீதியின் பாதை நின்றிடச் செய்தாய் !
செய்தவை யாவும் சிறந்தெனச் சொல்லும்
செம்மைத் தனத்தின் சிகரம் தானோ
செங்கோல் ஏந்தும் சிறந்தோன் எவரென
சென்னை நோக்கி சிவந்தோர் வந்தார்
வந்தோர் குழப்பம் வண்டியில் வரவே
வளமாய் கற்றோர் வரிசையில் நிற்க!
வகுப்பினை யறியா வேந்தன் உந்தன்
வாய்ச்சொல் நடந்த விந்தையை கண்டேன்
கண்டோர் பெரிதோர் கல்லா திருக்க
கருத்தாய் மனத்தில் கருணை கொண்டு
கனத்த இதயக் கவிஞனைப் போலே
கல்லார் விழிகளில் கல்வியைத் தந்தாய்
தந்தவை யாவும் தமிழன் சிறக்க
தாமோ வலிந்து தரமாய் முனைந்து
தத்தம் மக்களின் தரத்தை உயர்த்த
தவிக்கும் அயலான் தாயெனப் புகழ்ந்தார்!
புகழ்ச்சிப் பாடல் புனைவதை தவிர்த்து
புவியின் வயிற்றுப் பசியைப் போக்கி
புசித்தவர் உளத்தில் புன்னகை பூத்திட
புகழுரை யாவும் பயந்தே யோடும்
ஓடிய கால்கள் ஓய்ந்திட்ட வேளை
உத்தமத் தலைவனின் உன்னத உடலோ
ஓரின மெனவே ஒன்றிடு தமிழென
உலகோர் போற்றும் உணர்வாய் மறைந்தாய்
மறைந்தாய் என்பதை மானுடம் மறந்து
மனிதம் தழைக்க மாசற் றோனாய்!
மன்னவன் உந்தன் மனதினைப் போலே
மண்ணில் எமையும் மாற்றிடு மனமே !!