23 Sep 2019 8:53 pmFeatured
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி, சென்னை - அண்ணா அறிவாலயம் சென்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி- காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்றார்.
குமரி அனந்தன்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில், நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார்.
ஏற்கனவே ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குமரி அனந்தன் அத்துடன் நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஏற்கனவே நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போது கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக உள்ள வசந்தகுமார் இவரது சகோதரர் என்பதும் முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தற்போது தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் இவரது மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்று உறுதி-பேட்டி
குமரி அனந்தன் விருப்பமனு வாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
நாங்குநேரி தொகுதி மிக முக்கியமான தொகுதி. நான் தனி அமைப்பு நடத்தியபோது ஜான்வின்சென்ட் என்பவரை நிறுத்தி வெற்றி பெறச்செய்தேன். என் தம்பி வசந்தகுமார் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்.
எனக்கும் இந்த தொகுதிக்கும், இதயத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளது. நான் ஒருமுறை எம்.பி.யாகவும், 4 முறை எம்.எல்.ஏ. ஆகவும் இருந்த அனுபவ பிழிவை மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் கூட்டணி போட்டியிட எனக்கு வாய்ப்பு தந்தால் போட்டியிட தயார். வெற்றியும் உறுதி. கடினமாக உழைப்பேன். என்றார்
மனோஜ் பாண்டியன்
எம்.பி ஆக முடியாவிட்டாலும் எம்.எல்.ஏ ஆகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பியும், அதிமுகவின் வழக்கறிஞர் அணிச் செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார்.
நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிவிட்டதால் இடைத்தேர்தலில் அதிமுக எளிதில் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் எப்படியாவது வேட்பாளராகிவிட வேண்டும் என்பது மனோஜ் பாண்டியன் காய்நகர்த்தி வருவதாக தெரிகிறது
கவர்ச்சி நடிகை பபிதா
இது போல் அதிமுக நட்சத்திரபேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாக தெரிகிறது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.வினர் பலர் களத்தில் இறங்க ஆர்வமாக உள்ளனர். விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி பொன். கவுதம சிகாமணி விருப்ப மனு அளித்து உள்ளார்