31 Dec 2019 7:45 pmFeatured
இலெமுரியா அறக்கட்டளை சார்பில் தமிழ் பண்பாடு கலைவிழா மற்றும் தமிழ்ச் சேவை விருதுகள், மாணவர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் சிறப்பாக நடைபெற்றது.
மும்பையில் சிறப்பாக தமிழ்ப் பணியாற்றியுள்ள சமுக சேவகர்கள், பள்ளி மாணவர்கள் பலருக்கும் விருதுகள் மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. இயல் இசை நாடகங்களும் தமிழர் பண்பாட்டை நினைவு கூறும் வகையில் நடைபெற்றது.
மும்பை முல்லுண்டு காளிதாசு கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் மகாராஷ்டிர மாநில மேனாள் காவல் துறைத் தலைவர் த. சிவானந்தன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் பெற்றோர்களிடையே உரையாற்றினார். மகாராஷ்ர மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை செயல் தலைவர் டாகடர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். தலைமை வகித்தார்.
சரியாக 10 மணிக்கு நீலம் கலைக்குழுவின் பறையிசையுடன் விழா தொடங்கியது. தமிழ் வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் பாரதி தாசனின் கவிதை வரிகளுக்கு மாணவியர் மிக நேர்த்தியாக நடனம் ஆடினர்.
விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள், விருதாளர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்களை அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் வரவேற்றார்.
விழாவில் சென்னை மெட்டக்ஸ் மேலாண்மை இயக்குனர் வீ.க. செல்வகுமார், மங்கத்ராம் பி லிமிடெட் நிருவாக இயக்குனர் இராமச் சந்திரன், அபூர்வா கெமிக்கல்ஸ் கண்ணன் இரமகிருஷ்ணன், ஆணீஸ் நிருவாக இயக்குனர் டென்சிங், தைரோகேர் பொது மேலாளர் சந்திரசேகர், ஆதினா குளோபல் சிவக்குமார் இராமச்சந்திரன், திராவிடர் மறு மலர்ச்சி நடுவம் ஸ்டீபன் ரவிகுமார், சிட்டி டைரி உரிமையாளர் கண்ணன், தருண்பாரத் இயக்க நிறுவனர் இராசேந்திர சுவாமி, அ. இரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச்சேவை விருதுகள்:
விழாவில் தமிழுக்குத் தொண்டாற்றும் பெருமக்கள் பலருக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
ரூ 10,000 பொற்கிழியுடன் உள்ளடக்கிய பெரும்புலவர் தொல்காப்பியர் விருது அன்மையில் மறைந்த பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனர் வி.தேவதாசனுக்கு அறிவிக்கப்பட்டது. அவ்விருதினை அவரது மகன் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து ரூ 5000 பொற்கிழியுடன் அமைந்த விருதுகள் அறிவிக்கப் பட்டன. பேரறிஞர் அண்ணா விருது சிறந்த எழுத்தாளர் கவிஞர் புதிய மாதவி, சிறந்த பேச்சாளர் முகம்மதலி ஜின்னா, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் விருது சிறந்த நாடகக் கலைஞர் நெல்லைப் பைந்தமிழ், அன்னை தெரசா விருது செவிலியர் வாலண்டினா பெர்ணாண்டோ, ப. ஜீவானந்தம் விருது ஞான அய்யாப் பிள்ளை, இளங்கோவடிகள் காப்பிய விருது தமிழறிஞர் பெ. ஜெகதீசன் ஆகியோருக்கும் வழங்கப் பட்டன.
மாணவர் விருதுகள்:
மும்பையில் பயிலும் மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப் பட்டன. அய்யன் திருவள்ளுவர் விருது லிபர்டி கார்டன் உயர்நிலைப் பள்ளி மாணவி குளோரியா ஜோசப், தந்தை பெரியார் விருது கோசால ஆங்கிலப் பள்ளி மாணவி அனீஸ் பாத்திமா, பெருந்தலைவர் காமராசர் விருது பிரைட் உயர்நிலைப் பள்ளி மாணவி ப.மகேசுவரி, புரட்சியாளர் அம்பேத்கர் விருது ஐடியல் மேல்நிலைப் பள்ளி மாணவி ரோசி நசீர் அகமது, அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் விருது மாடல் ஆங்கிலப் பள்ளி மாணவர் அரவிந்த அய்யம் பெருமாள் ஆகியோருக்கும் வழங்கிஅறிவிக்கப் பட்டது. விருதுகள், சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு ரூ 5000 த்துடன் ஒவ்வொரு மாணவர்க்கும் அறக்கட்டளைத் தலைவர் குமணராசன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் 12 பேருக்கு அவ்வையார் விருதும் ரூ 2500/- பணமுடிப்புடன் வழங்கப் பட்டது.
விருதுகள் வழங்கப் பட்டவுடன் மாணவர்களை வாழ்த்தி விழாத் தலைவர் அன்பழகன், முதன்மை விருந்தினர் த சிவானந்தம் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக திரைப்பட இயக்குனர், நடிகர் எழுத்தாளர் தமிழ்த் தேனருவி ஜோ. மல்லூரி சிறப்புரையாற்றினர். இவரது உரை பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நூல்கள் வெளியீடு:-
தொடர்ந்து நெல்லைப் பைந்தமிழ் எழுதிய “ பண்பாட்டைச் சிதைக்கும் இந்தியா” அண்ணா கதிர்வேல் எழுதிய “ அப்பா” என்ற இரு நூல்களும் வெளியிடப் பட்டன.
படம் : தென்னரசு இணையத்தில் வெளிவந்த நெல்லை பைந்தமிழின் தொடர், ”பண்பாட்டைச் சிதைக்கும் ’இந்தி’யா” என்ற நூல் வடிவில்
நாடகங்கள்:
விழாவின் முத்தாய்ப்பாக டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத்தினர் பலர் நடித்த “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற சமுக நாடகம் மும்பை மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமாக நடை பெற்றது. நாடக முடிவில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் பலர் கண்கலங்கி அழுதனர். அந்த அளவுக்கு உணர்ச்சிப் பூர்வமான நாடகமாக அமைந்தது. நாடகத்தை நெல்லைப் பைந்தமிழ் இயக்கத்தில் நந்த கோபால் ஒருங்கிணைத்தார். இறுதியில் திருவிளையாடல் என்ற நாடகமும் நடை பெற்றது.
குறித்த நேரத்தில் தொடங்கப் பட்ட இவ்விழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் பெ. கணேசன் நன்றி கூறினார்.