28 Dec 2021 9:57 pmFeatured
தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் பெருவதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பிற மாநிலத்தில் வாழ்ந்துவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ரேஷன் கார்டு, ஆதார்கார்டு மற்றும் ஓட்டுரிமை இருந்தும் அவர்கள் அவர்கள் வாழும் இடத்தில் சாதி சான்றிதழ் பெற முடியாத நிலையில் உள்ளனர் அத்துடன் தமிழகத்திலும் பெற பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்
இந்நிலையில் கரூர் இரா. பழனிச்சாமி மற்றும் அலிசேக் மீரான் இருவரும் இணைந்து மும்பை மாநகர் திமுக மற்றும் மும்பை புறநகர் திமுக சார்பாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சார்ந்த துறைகளுக்கும் ஆவண செய்யும்படி கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில்
பொருள்: மகாராஷ்டிர அரசு மூலம் தமிழர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவது – தொடர்பாக
Ref.: Government of India, Ministry of Social Justice and Empowerment, Department of Social Justice and Empowerment, (Scheduled Castes Development Division-Revision of Lists Cell), Shastri Bhawan, New Delhi, No.12017/2/2018-SCD (R.L.Cell), Dated the 22nd February, 2018.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம் பல. மராத்திய மாநில மும்பை மாநகர் & புறநகர் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து கீழ்க்காணும் கோரிக்கைகளை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதுடன், கருணை உள்ளம் கொண்டு மராத்திய மண்ணில் வாழும் தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு காண தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறோம்.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே லட்சக்கணக்கான பட்டியிலின மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத் தமிழர்கள் மராத்திய மண்ணில் நிரந்தரமாக வாழ்ந்தாலும், மாநகராட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வாக்குரிமை பெற்றவர்களாயிருந்தும் தமிழர்களின் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் கூட பெற முடியாத நிலையில் வாழ்கிறோம். தமிழகத்தில் இதற்கென வந்து சாதிச்சான்றிதழ் பெறும் முயற்சிகளிலும் பல்வேறு பிரச்சனைகளை, சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஆந்திரா, கர்நாடகம் சாதிப்பெயர்கள் மகாராஷ்டிர அரசு பட்டியலில் உள்ளதால் அம்மாநில மக்களும் அதே போல் மகாராஷ்டிர சாதிகளில் சில தமிழக பட்டியலில் உள்ளதால் அவர்கள் சாதிச் சான்றிதழ் பெற்று பயனடைகிறார்கள். ஆனால் தமிழக சாதிகள் மகாராஷ்டிர அரசு பட்டியலில் இல்லாததால் தமிழர்கள் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கிறோம், பாதிப்படைகிறோம்.
மராத்திய மண்ணில் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இந்திய ஒன்றியம் மற்றும் மகாராஷ்டிர, தமிழ் நாடு மாநில அரசுகளையும் பல ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம்.
இதில் இந்திய ஒன்றிய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் No.12017/2/2018-SCD (R.L.Cell) பிப்ரவரி 22, 2018 நாளிட்ட
(Government of India, Ministry of Social Justice and Empowerment, Department of Social Justice and Empowerment, (Scheduled Castes Development Division-Revision of Lists Cell), Shastri Bhawan, New Delhi, No.12017/2/2018-SCD (R.L.Cell), Dated the 22nd February, 2018 )
உத்தரவின்படி புலம்பெயர்ந்து நிரந்தரமாக வாழும் மாநிலத்தில் எந்த மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்தாரோ அம்மாநிலத்தில் சாதி சான்றிதழ் விண்ணப்பதாரரின் தந்தை பெற்ற சாதிச் சான்றிதழ் அடிப்படையில் சான்றிதழ் பெறுவார்களேயானால் குடியேறிய மாநிலத்தில் வழங்கும் சாதிச் சான்றிதழில் பட்டியிலின/பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட இன சாதி குறிப்பிடப்படும் என்பதோடு கீழ்காணும் வகைகளில் பயன்படும்.
1. தாயகம் சென்று சாதிச் சான்றிதழ் பெறுவதில் பல சிரமங்கள் குறையும்.
2. இந்திய ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் மற்றும் அரசுப் பணிகளில் சலுகைகள் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.
எனவே தயவுசெய்து
(1) மராத்திய மண்ணில் வாழும் தமிழர்கள் சாதிச் சான்றிதழ் கோரும் விண்ணப்ப படிவங்கள் மீது அதிக கவனம் செலுத்தி சான்றிதழ் வழங்க மகாராஷ்டிர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியும்;
(2) ஒருவேளை அந்த விண்ணப்பப் படிவத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி தமிழக அரசுக்கு அனுப்பும் பட்சத்தில் அதன் மீது மாவட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி ஆவன செய்யவும் பணிவன்புடன் வேண்டுகிறோம்.
தமிழர்களின் தன்னிகரற்ற முதல்வராகிய தாங்கள் தங்களது பொற்கால ஆட்சியின் போது எங்களது நீண்ட காலப் பிரச்சனைத் தீர்க்க வழி வகுப்பீர்களானால் மகாராஷ்டிராவில் வாழும் தமிழர்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டவர்களாவோம்.
என கூறப்பட்டுள்ளது.