13 Apr 2020 6:48 pmFeatured
தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை என்கின்ற காரணத்தால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கடந்த 11-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர்களும் தங்களது முடிவுகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒரிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு144ன் படியும், தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், மற்றும் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில் பேக்கரி இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி பேக்கரிகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும்
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.
அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு ரத்து அல்ல
ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் கூறியுள்ளார். மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்கள் இயங்காது
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிமன்றங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கிளை, கீழ் நீதிமன்றகளும் வரும் 30-ம் தேதி வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
உத்தரவின் காரணமாக சென்னை உயர்
நீதிமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த
வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகிறது.
இ-மெயில் மூலம்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மொபைல்
ஆப் மூலம் வீட்டிலிருந்தபடியே நீதிபதிகள்
விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வக்கீல்கள்
சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன்
நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்
தமிழகத்திலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை
ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை
அனைத்து நீதிமன்றங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.