30 Jan 2024 5:57 pmFeatured
கவிஞர் இரா. சண்முகம், பரணம்பேடு.
அகிம்சை நாயகனின்
அமரத்துவ நாளில்
தொலைந்த மனிதம்
தேடும் ஒரு சராசரி
இந்தியனின் சீரிய
அங்கலாய்ப்புகள்.
அகிம்சையின் நாயகனே சற்றேனும் அறிவாயா.
தண்டி யாத்திரைக்கு
தடியூன்றிச் சென்றவனே
இந்தியத் திருநாட்டின்
ஈடில்லா தலைமகனே
சுதந்திரத் தென்றலை
சுவாசிக்கச் செய்துவிட்டு
காலத்தின் தேரேறி
கனவாகி மறைந்துவிட்டாய்
சுதந்திரத் தென்றல் இன்று
வாடைக் காற்றாகிவிட
தேய்ந்த எந்திரமாய்
சராசரி இந்தியனும்
வறுமைப் பாயினிலே
வாடிக் கிடப்பதனை
அகிம்சையின் நாயகனே
சற்றேனும் அறிவாயா.
வெள்ளையனே வெளியேறு என்று
வெற்றி முழக்கம் செய்தாய்
விடியும் காலம் வந்ததென்று
விண்ணுலகு சென்றுவிட்டாய்
இன்று அண்டை நாடுகளும்
அண்டிய நாடுகளும்
எல்லையை ஆக்கிரமித்து
எகத்தாளம் போடுவதை
செல்லரித்த காகிதமாய்
பாரதம் சுருங்குவதை
சத்யாகிரகச் செம்மலே
சற்றேனும் அறிவாயா.
எங்கும் ஊழல்
எதிலும் ஊழல்
ஊழல் ஊற்றின்
ஊழித் தாண்டவம்
ஆண்டவன் முதலாய்
ஆண்டி வரையும்
தங்கம் முதலாய்
தவிடே ஆயினும்
ஏதோவகையில்
எதிலும் ஊழல்
ஏழையின் கனவோ
நிராசையின் விளிம்பில்
உழைக்கும் வர்க்கமோ
விரக்தியின் வெறுப்பில்
தந்தையே மகாத்மா
சற்றேனும் அறிவாயா.
ஆணுக்கொரு நீதி
பெண்ணுக்கொரு நீதி
என்றிருந்த நிலை போக்கி
இருவருக்கும் சம நீதி
சமத்துவமாய் வேண்டும் என்றாய்
இன்றோ பெண்மையை புண்ணாக்கி
பெண்ணடிமை தளையிட்டு
ஆணவம் கொக்கரிக்க
அண்ணலே காந்தி
சற்றேனும் அறிவாயா.
நல்லதொரு சமுதாயம் படைப்போம்
வல் வினைகள் எதிர் வரினும் தகர்ப்போம்.
தாயகம் செழித்திடவே உழைப்போம்
தரணி போற்ற தலை நிமிர்ந்து வாழ்வோம்
எம்மை வழிநடத்த தலைமகனே வருவாய்
புரட்சியுடன் புதுத் தலைமை ஏற்பாய்
மீண்டும் ஓர் தலைமுறை தழைத்திட
மகாத்மாவே முகிழ்த்தெழுந்து வருவாய்.