31 Aug 2020 1:09 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக ஸூம் செயலி வழியாக 29-08-2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழிசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசனார் எழுதிய தமிழிசைப் பாடல்களுக்கு நடனம் மூலமாக உயிரோட்டம் தரும் சிறப்புமிகு நிகழ்வினை மன்றத்தின் புரவலரும், எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் (இந்தியா)தலைமை செயல் அதிகாரியுமான சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வே.சதானந்தன் வரவேற்புரையாற்ற மன்றத் துணைத்தலைவர் கவிமாமணி இரஜகை நிலவன் தொடக்கவுரை ஆற்றினார். இறுதியில் மன்ற துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நன்றியுரை ஆற்றினார்.
பண்ணிசைமணி டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி அவர்களுடன் ஸ்வராலயா சங்கீதக் கலாலயம் - (மலேசியாவின்) சிறந்த நடனக் கலைஞர் குழுவினரான கலைமதி இரமேஷ், திவ்யாஷ்ரி இரமேஷ், சுதேஷனா சுதாகர் ஆகியோரும் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வினை இன்னிசைவாணி கனிமொழி கோவிந்தசாமி ஒருங்கிணைத்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய மன்றப் புரவலர்களான திரு. அலிசேக் மீரான், திரு.மெய்யப்பன் மற்றும் ஆலோசகர்களான பாவலர் முகவைத் திருநாதன் திரு.கருவூர் பழனிச்சாமி, மன்றப் பொருளாளர் திரு.அ.இரவிச்சந்திரன், மும்பை இலக்கியக் கூடம் அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் ஆகியோர் தமது கருத்துகளைப் பதிவு செய்தனர்.பல்வேறு தமிழ்ச்சங்க நிர்வாகிகளான திரு.இராமதாஸ், திரு.கோ.சீனிவாசகம், திருமதி.சுந்தரி வெங்கட், திரு.கலைவரதன் - பாண்டிச்சேரி ஆகியோரும் நிகழ்வின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.
மேலும் அனைத்து அங்கத்தினர்களும் உலகெங்குமிருந்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கடல் கடந்து சென்றாலும் மொழியின் பெருமைக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள மலேசிய சகோதரிகளின் நடன நிகழ்வில் அனைத்துத் தமிழுணர்வாளர்களும் பங்கு கொண்டு இன்புற்றமைக்கு மன்ற நிர்வாகிகளின் சார்பாக மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.