12 Jul 2019 11:55 pmஆரோக்கியம்
இயற்கை மருத்துவம்
நன்றி - குங்குமம் டாக்டர்
தேவைப்படும் பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - 1/4 கப்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - சிறிதளவு
உப்பு - உப்பு
தக்காளி - 1
தேங்காய்ப்பால் - 1/4 கப் (விரும்பினால்)
செய்முறை :
காடயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் சீரகம், பூண்டு, மிளகு ஆகியவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன், வெங்காயம், தக்காளி, கீரையைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர், 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடாமல் 10 முதல் 15 நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் ஆற வைத்து குடிக்க சுவையாக இருக்கும். அதன் முழுமையான மருத்துவ குணங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
‘‘நமது உடல்நலத்துக்குத் தேவையான மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரையில் ஒரு முக்கியமான சிறப்பம்சம் உண்டு. இவர்தான் சாப்பிட வேண்டும், இவர் சாப்பிடக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. அனைத்து தரப்பினரும் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வீட்டிலேயே எளிதாகவும் வளர்க்கலாம். இதற்காக பரந்த நிலப்பரப்போ, அதிக அளவு தண்ணீரோ, உரமோ தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று தொட்டிகளே இதை வளர்ப்பதற்குப் போதுமானது.
இவ்வாறு எளிய சூழலில், எளிதாக வளரும் தன்மை கொண்ட மணத்தக்காளி கீரையை வாரம் இரண்டு முறை அனைவரும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தங்களுடைய விருப்பப்படி பொரியல், கீரை குழம்பு, மசியல், சூப் என விதவிதமாக சமைத்து உண்ணலாம். சாம்பாருடனோ, மற்ற காய்கறிகளுடனோ சேர்த்தும் உண்ணலாம்.
செடி வகையைச் சார்ந்த மணத்தக்காளிக் கீரையில் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை ஏராளமாக உள்ளன. இவை தவிர Niacin, Riboflavin போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனுடைய இலை மற்றும் பழங்களில் வைட்டமின்-சி அதிகம் காணப்படுகிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவுப்பொருளாக திகழ்கிற இக்கீரை, வாய்ப்புண், வயிற்றுப்புண் உட்பட பலவிதமான வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்த வல்லது.
உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. எனவே, அதிக அளவு உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். கட்டி, முகப்பரு, சரும எரிச்சல், சொரியாசிஸ் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களும் இதை சாப்பிடலாம். இச்செடியின் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் ஆஸ்துமாவைக் குணப்படுத்தலாம்.
ரத்தசோகை(Anemia) மற்றும் பலவீனமான இதயம் உள்ளவர்கள் இதனுடைய காய்கள், இலைகளைத் தூள் செய்து 100 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, காலை மற்றும் இரவு நேரங்களில் (தூங்கப் போகும் முன்) சாறாக அருந்தி வர இப்பிரச்னைகள் சரி செய்யப்படும். தொண்டை கரகரப்பு, சளித்தொல்லை இருக்காது.
எனவே பாடகர்கள், மேடைப்பேச்சாளர்கள் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். வாய்ப்புண்ணால் (Mouth Ulcer) அவதிப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் 5 இலைகள் தினமும் மென்று சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். உடல் வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நீரிழிவு உள்பட கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இக்கீரை மிகவும் ஏற்ற உணவாகும்.
கருவுறுதல் தொடங்கி, பிரசவம் வரை இக்கீரை பெண்களுக்குப் பல வகையிலும் உதவுகிறது. சிசுவுக்கும் பயன்படுகிறது. நம்முடைய உணவுமுறையில் தினமும் ஒரு கீரை இடம் பெறுவது நல்லது. அந்த வகையில் வாரத்தில் இரண்டு தடவை கண்டிப்பாக சாப்பிடும் அளவுக்கு இக்கீரை முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில், 100 கிராம் மணத்தக்காளி கீரையில் நீர்ச்சத்து - 82.1 கிராம், கால்சியம் - 410 மில்லி கிராம், புரதம் - 5.9 கிராம், இரும்புச்சத்து - 20.5 கிராம், பாஸ்பரஸ் - 70 மில்லி கிராம், வைட்டமின் சி - 11 மில்லி கிராம், ரிபோஃப்ளேவின் - 59 மில்லி கிராம், நையாசின் - 0.9 கிராம், கலோரி - 68 என பலவிதமான சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.
எளிதாக கிடைக்கிற ஒரு பொருளின் அருமை புரியாது என்பார்கள். அந்த வகையில் மணத்தக்காளியின் அருமையும் பலருக்குப் தெரிவதில்லை. எனவே, இதன் பயன்களைப் புரிந்துகொண்ட பின்னராவது எல்லோரும் மணத்தக்காளிக் கீரையைப் பயன்படுத்த வேண்டும்’’ என்கிறார்.
- விஜயகுமார்