Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழர்கள் நன்றி உணர்வுள்ளவர்கள், தமிழை ஆட்சி மொழியாக அறிவித்து பெருமைப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

01 Oct 2019 5:40 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

"உலகின் பழமையான மொழிஎன்று தாங்கள் ஏற்றுப் போற்றியிருக்கும் மூத்த மொழியான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்"" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, "உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது"" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான,கணியன் பூங்குன்றனார் எழுதிய
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் சொற்களால் உலகவாழ் தமிழர்க்கு மகிழ்ச்சி பெருமிதம்!

பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள்,தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ்கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல்பட்டது நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு.

பிறமொழி பேசும் மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை!

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி - சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக்கூட தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு; மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று மாற்றுவது, சமஸ்கிருத வார்த்தைகளை எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம்- வங்கி உள்ளிட்ட துறைகளில் இந்தியை மட்டும் முன்னிலைப்படுத்தி, மற்ற மொழிபேசுவோரின் வேலைவாய்ப்பைப் பறிப்பது,இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற குரலை அடிக்கடிஒலிக்கச் செய்வது.

இப்படி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்த நிலையில்; அதில் ஏற்பட் டுள்ள மகிழ்ச்சி தரத் தக்க பெரியமாற்றமாக, "தமிழ்தான் உலகின் பழமையான மொழி” என்ற வரலாற்று உண்மையை இந்தியப் பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றி யிருப்பது அமைந்திருக்கிறது.

அதுவும், கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசின் நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல், மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளை பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட நிலையில்; தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு கள் மூலம், சங்ககாலத்தமிழர்கள், அப்போதே உருவாக்கிய நகர நாகரீகத்தின் சிறப்புகள் வெளியாகியுள்ள சூழலில், தமிழின் பெருமை குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது, உலகத்தார் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் மொழிக்கு அங்கீகாரம் மோடி அரசுக்கு பொறுப்பு!

தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய - இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்த முயற்சியின் முதல்கட்டமாக,அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழி யான தமிழை, இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், அது பிறந்த இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகள் பலவற்றில், ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள உண்மையை, பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர
விரும்புகிறேன்.

நன்றி உணர்வுக்கும் பெயர் பெற்றவர்கள்!

தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் அவர்கள், "இட்லி, தோசை, வடை, சாம்பார் ஆகியவை சுவையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள், விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்டகாலமாகவே பெயர் பெற்றவர்கள்.எனவே பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் அவருக்கு என்றென்றும் நன்றி பாராட்டுவார்கள்.

பேரறிஞர் அண்ணாகலைஞர் நினைவை போற்றும் செயலாகும்!

மேலும், தமிழ் மொழியை மத்தியில் ஆட்சிமொழி ஆக்குவது, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவைப் போற்றும் அரிய செயலாகவும் அமையும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற திருக்குறளை அறிந்துள்ள தமிழர்கள், பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி மீது காட்டும் இந்த ஆக்கப்பூர்வமான அக்கறையை, விரைவில் நடைமுறைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வருவார்
என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096584
Users Today : 15
Total Users : 96584
Views Today : 50
Total views : 416777
Who's Online : 2
Your IP Address : 3.145.91.111

Archives (முந்தைய செய்திகள்)