20 Apr 2020 7:28 pmFeatured
பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் தினத்தந்தி நாளிதழில் இன்று வெளியான கேலிச்சித்திரத்திற்கு வாசகர்களும், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தினத்தந்தியின் இந்தச் மும்பை மற்றும் மும்பை புறநகர் திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் கண்டனம்.
கோடானகோடி தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நவீன தமிழகத்தின் சிற்பி ஆவார்.
தமிழினத்திற்காக தன்னையே ஒப்புகொடுத்த மாபெரும் தலைவர்
பேரறிஞர் அண்ணா அவர்கள்.
தமிழினத்தின் சமூக விடுதலைக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை சமரசமின்றி போராடியவர். கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை தனது தொண்டர்களுக்கு மட்டுமல்லாது; மனிதயினத்திற்கே கற்றுக் கொடுத்த மாண்பாளர். மாற்றுக் கருத்துடையாரையும் மதிக்க கற்றுத்தந்த பெருந்தகையாளர்.
அத்தகைய பெருமைக்குரிய பேரிறிஞர் அண்ணா அவர்களை இழிவுபடுத்தும் விதமாக கேலிச் சித்திரத்தை வரைந்த மதி என்பவரையும், பிரசுரித்த தினத்தந்தி நிர்வாகத்தையும் மும்பை புறநகர் மாநில திமுகவின் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, மதி மற்றும் தினத்தந்தி நிர்வாகமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என மும்பை புறநகர் திமுக சார்பில் வலியுறுத்துகிறோம்.
என அலிசேக் மீரான் தெரிவித்துள்ளார்.
மும்பை நகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச்சாமி கண்டனம்.
தினத்தந்தியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முகத்தில் கொரோனா படத்துடன் வெளியான கார்ட்டூன் மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கதாகும்.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதனை ஆதரித்து ஊதுகுழலாக செயல்பட்டு தனது பொருளாதாரத்தை வளர்த்து கொண்டு பணம் ஒன்றையே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் தினத்தந்தி யாரையோ திருப்திபடுத்த; கட்சி வேறுபாடின்றி தமிழர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களை தேவையின்றி கார்ட்டூன் மூலம் அவமதித்ததை வன்மையாக கணடிக்கிறோம். இது போன்ற அற்பத்தனமான செயலை தினத்தந்தி தவிர்க்க வேண்டும். உடனடியாக மன்னிப்பும் கேட்க வேண்டும்.
என கருவூர் இரா.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் கண்டனம்
அன்புத் தலைவனுக்கு அறியாமை கொடுத்த அவமானம்
இன்றைய தினத்தந்தி நாளிதழில் பேரறிஞர் அண்ணா அவர்களை மையப்படுத்தி இடப்பட்ட கேலிப்படத்தில் சமீபத்திய நோய்த் தொற்றான உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற 'கொரோனா' அறிகுறியாக பேரறிஞரின் தலையை மறைத்து கொரோனா எச்சரிக்கையிடும் பொம்மையாகக் காட்டியிருக்கும் படத்தைக் கண்டு அறிஞர் அண்ணாவின் மேல் பற்றுக் கொண்ட இயக்கம் மற்றும் இலக்கியம் சார்ந்த அனைத்து மக்களும் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.
பாரம்பரியமிக்க ஒரு பத்திரிகையின் நிறுவனத் தலைவரான ஆதித்தனார் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான தலைவருக்கு நேர்ந்த அவமானம் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய புரிதல் இல்லாமையைக் காட்டுவதோடு பத்திரிகை துறையில் இதுபோன்ற அறியாமை பெருகினால் இன்றைய இளைஞர்களுக்கு நேற்றைய தலைவர்களின் மொழிப்பற்றையும் இனப் பற்றையும் முறையாகப் புரியவோ அறியவோ செய்வதை விடுத்து மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு பிணக்குகள் உருவாகுவற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதை பத்திரிக்கை துறைத் தோழமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மறைந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்தாலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய இன்றைய மிகப் பெரிய அரசியல் இயக்கங்களின் உயிர்நாடியாக உயிரோட்டத்துடன் இருக்கின்ற ஒரு தலைவனை;
அன்னைத்தமிழின் அரும்பணிகளுக்கு தம்மையே ஒப்படைத்த ஒரு தலைவனை;
எளிய வாழ்க்கைச் சூழலிலிருந்து அரசியல் களத்திற்கு வந்து தமது அரிய பணிகளால் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அனைத்துத் தமிழர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவனை;
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் சிந்தனைகளை தமது எண்ண ஓட்டங்களுக்குள் கலந்து அழகு தமிழில் அடுக்கு மொழியில் மணிக்கணக்கில் ஆற்றப்பட்ட தமது உரைகளின் மூலம் தமிழுணர்வும் சமுதாய உணர்வும் உள்ளங்களுக்குள் நுழையக் காரணமான ஒரு தலைவனை;
நாட்டின் கடைக் கோடித் தமிழனும் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்ற தீராத வேட்கை கொண்டிருந்த ஒரு தலைவனை;
திறன்மிக்க தமிழனின் ஆற்றலில் தமிழ்மொழியின் சிறப்பு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து திரைத்துறை மற்றும் அரசியல் துறைகளின் வாயிலாக பல சமூகப் புரட்சிகளை ஏற்படுத்தி அவர் வகுத்துத்தந்த வழிகளில் உயிருக்கு உயிராகக் கருதப்பட்ட அவரது தம்பியாகிய தலைவர் கலைஞர் அவர்களது திட்டங்களும் அமைந்திருந்தன என்பதை மறுக்க இயலா சூழலுக்கு வித்திட்ட ஒரு தலைவனை;
பெண் விடுதலை; விதவை மறுவாழ்வு; பெண்ணடிமைத் தனத்திற்கான தீர்வு; போன்ற பல்வேறு சமுதாய விழிப்புணர்வு சார்ந்த திரைப்படங்களுக்கும் புதினங்களுக்கும் வித்திட்ட இலக்கிய ஆளுமை நிறைந்த ஒரு தலைவனை;
அன்றைய தமிழகத்து இளைஞர்களின் நடுவில் அரசியலின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி எப்படி அரசியல் களத்தில் நடந்து கொள்வது என்பன போன்ற அரசியல் அறிவை ஊட்டிச் சென்ற ஒரு தலைவனை;
ஆண் பெண் அடையாளத்திற்காக
ஏதோ கழிவறையில் காட்டப்படம் ஒளிப்படத்தைப் போல செய்தி வெளியிட்டிருக்கும் பத்திரிகையே! உங்களது இந்த செயலை மும்பை மாநில புறநகர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.