07 Mar 2020 6:50 pmFeatured
மும்பை தி.மு.க. பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தி.மு.க. வின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க. அன்பழகனார் அவர்கள் தனது 85 ஆண்டுகால பொது வாழ்க்கையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடன் 75 ஆண்டு காலம் தோழமையுடன் இருந்தவர். 1977 முதல் பொதுச் செயலாளராக கழகத்தை வழி நடத்தியவர். 9 முறை சட்டப் பேரவை உறுப்பினாராக உரிமைக் குரல் எழுப்பியவர். 4 முறை கல்வி, சமூக மற்றும் நிதி அமைச்சராக தமிழர்களின் நல்வாழ்விற்காக உழைத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்கான சமூக சீர்திருத்தப் பணிகள் ஆற்றியதோடு கலைஞர் அவர்களுக்குப் பின் தி.மு.க.வின் தலைவராக தளபதி அவர்களை ஏற்று அரணாக இருந்து வழி நடத்தியவர். வாழ்க்கை முறை, இனமான வாழ்வுரிமைப் போர் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திராவிடச் சிந்தனை, சுய மரியாதைக்கான நூல்கள் எழுதி தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டியவர். அன்பும் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கும் கொண்ட பேராசிரியர் மறைவு கழகத்திற்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் பேரிழைப்பே. தி.மு.க. தலைவர் தளபதி கூறிப்பிட்டதை போல் இனமான இமயம் உடைந்தது, சங்கப் பலகை சரிந்தது என்றாலும் அவர் காட்டிய வழி நின்று செயல்படுவோம். பேராசிரியர் அவர்கள் மறைவிற்கு வீர வணக்கதோடு கூடிய அஞ்சலி செலுத்துவோம்.