26 Dec 2022 9:43 pmFeatured
மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆலோசகருமான எஸ். இராமதாஸ் அவர்களின் ‘My Life – My Journey’ (எனது வாழ்க்கை எனது பயணங்கள்) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா நேற்று சயானில் உள்ள மானவ் சேவா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டெடு நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் சுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
நூலை மராத்திய மாநில காவல்துறையின் முன்னாள் டிஜிபி சிவானந்தன் அவர்கள் வெளியிட்டார்
இராமதாஸ் அவர்கள் எழுதிய ‘My Life – My Journey’ என்ற ஆங்கில நூலை மராத்திய மாநில காவல்துறையின் முன்னாள் டிஜிபி சிவானந்தன் அவர்கள் வெளியிட, ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டெட் நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் சுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நூலாசிரியருமான இராமதாஸ் மற்றும் அவரது இணையர் தமயந்தி இராமதாஸ், நவிமும்பை தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த மீனாட்சி வெங்கடேஷ் மற்றும் லலிதா மகாதேவ் ஆகியோர் மேடையை அலங்கரித்தனர்.
மேடையில் உரையாற்றிய சுந்தரம் மற்றும் சிவானந்தன் உள்ளிட்ட அனைவரும் இராமதாஸ் அவர்கள் எழுதிய நூலைப்பற்றியும் அவரது தமிழ் பணி, வாழ்கை அனுபவங்கள் மற்றும் குணநலன்களை பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
பெருமைக்குரிய தந்தைக்கு போற்றத்தக்க பிள்ளைகளால் நடத்தப்பட்ட மகிழ்வான நிகழ்வில் நூலாசிரியர் எஸ்.இராமதாஸ் அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மும்பை தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த மிக்கேல் அந்தோணி, ஹரிஹரன், ஆறுமுகப்பெருமாள், பெ.இராமானுஜம், சுந்தரி வெங்கட்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற புரவலர் சேதுராமன் சாத்தப்பன், தமிழ் அறம் பத்திரிகை ஆசிரியர் தமிழ் அறம் இராமர், தென்னரசு பத்திரிகை ஆசிரியர் வே.சதானந்தன், கவிஞர் வ.ரா.தமிழ் நேசன்
சோபனா வாசுதேவன், பேராசிரியர் பத்மாவதி, பிரவீனா மற்றும் சேகர், முருகன், இராமதாஸ் அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாதாரண ஓர் உறுப்பினராக அறிமுகமாகி சற்றொப்ப அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு போற்றுதலுக்குரிய பணிகளை சிறப்பாக செயலாளர், சிறப்புக்குழு உறுப்பினர், துணைக்குழு உறுப்பினர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், துணைத்தலைவர், தலைவர் என்ற பல்வேறு பதவிகளில் வெகு சிறப்பாக பணியாற்றி இன்றும் தமிழ்ச் சங்கப் பணிகளுக்காக முன்னின்று வருபவர் எஸ். இராமதாஸ் அவர்கள்.
இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனங்களுள் ஒன்றான ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் ஹெட் என்ற உயர் பதவியை அலங்கரித்தவர். பண்பில் சிறப்பம்சங்களைத் தெள்ளென எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவர்
தமது எண்பதாம் அகவையில் தடம் பதித்து தமிழ்ப் பணியாற்றி வரும் அப்பெருமைக்குரியவர் பற்றிய ’எனது வாழ்க்கை எனது பயணம்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
“ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார்” என்ற சொல்லுக்கிணங்க, திருமிகு இராமதாஸ் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் அவரது அன்புத் துணைவியார் தமயந்தி அவர்கள் இருந்து வருவது மிகவும் சிறப்பு.