Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நாகர்கள் வரலாறு

10 Nov 2024 2:50 pmFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!
thennarasu Pictures nagargal

நாகா என்பது பாம்பு என்று பொருள்படுவதாக ஜான் ஓவன் (John owen) குறிப்பிடுகிறார். குமரி முதல் இமயப் பனிமலை வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-ஹரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும் பரவிக் கிடந்த திராவிடப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களைத் திராவிடர்கள் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

திராவிடர்கள் யார்? அவர்கள் நாகர்களிடமிருந்து வேறுபட்டவர்களா? அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு வெவ்வேறு பெயர்களா? திராவிடர்கள் மற்றும் நாகர்கள் என்ற சொல் ஒரே மக்களுக்கு இரண்டு வெவ்வேறு பெயர்கள் என்பது உண்மைதான்.  திராவிடர்களும் நாகர்களும் ஒரே மக்களுக்கு இரண்டு வெவ்வேறு பெயர்கள் மற்றும் நாகர்கள் என்ற திராவிடர்கள் தென்னிந்தியாவை மட்டுமல்ல, இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்துள்ளனர் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வெகு சிலரே தயாராக இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.  இருப்பினும், இவை வரலாற்று உண்மைகள். நாகர்களும் திராவிடர்களும் ஒன்றே என்கிறார்  அண்ணல்  அம்பேத்கர் .

திராவிடர்களும் நாகர்களும் ஒரே மக்கள் என்றால், தென்னிந்திய மக்களைக் குறிக்க நாகர்கள் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?   'திராவிட' என்ற சொல் அசல் வார்த்தை அல்ல. இது 'தமிழ்' என்ற சொல்லின் சமஸ்கிருத வடிவம். 'தமிழ்' என்ற மூலச் சொல் சமஸ்கிருதத்தில் இறக்குமதி செய்யப்பட்டபோது 'டமில்லா' ஆனது, பின்னர் 'தமிதா' என்பது திராவிடம். திராவிடம் என்பது மக்களின் மொழியின் பெயரே தவிர, மக்கள் இனத்தைக் குறிக்கவில்லை.

            தமிழ் அல்லது திராவிடம் தென்னிந்தியாவின் மொழி மட்டுமல்ல, ஆரியர்கள் வருவதற்கு முன்பு அது முழு இந்தியாவின் மொழியாகவும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பேசப்பட்டது. உண்மையில், இது இந்தியா முழுவதும் நாகர்களின் மொழியாக இருந்தது.   வட இந்தியாவில் இருந்த நாகர்கள் தங்கள் தாய் மொழியாக இருந்த தமிழை கைவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டனர். தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் தமிழை தங்கள் தாய் மொழியாகவே வைத்திருந்தனர் மற்றும் ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை ஏற்கவில்லை.

இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால் திராவிடம் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டும் ஏன் வந்தது என்பதை விளக்க இது உதவும்.  ஆனால், தென்னிந்தியாவின் நாகர்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழியின் மீதுள்ள பற்றுறுதியைக் கருத்தில் கொண்டு அவர்களை திராவிடர் என்று அழைப்பது மட்டும் இல்லாமல், அவர்கள் தமிழை மட்டுமே பேசும் மக்கள் என்பதால் அவர்களை திராவிடர் என்று அழைப்பது மிகவும் அவசியமானது. வடநாட்டு நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு  தென்னிந்திய மக்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படுவதற்கு உண்மையான காரணமானது.  தென்னிந்திய மக்களுக்கான திராவிடம் என்ற சொல்லின் சிறப்புப் பயன்பாடு, நாகர்களும் திராவிடர்களும் ஒரே மக்கள் என்ற உண்மையை மறைத்துவிடக்கூடாது. அவை ஒரே நபர்களுக்கு இரண்டு வெவ்வேறு பெயர்கள் மட்டுமே.  நாகர்கள் என்பது ஒரு இன அல்லது கலாச்சாரப் பெயராகவும், திராவிடம் என்பது அவர்களின் மொழிப் பெயராகவும் இருந்தது.

(டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆதாரம் - தீண்டத்தகாதவர்கள்: அவர்கள் யார், ஏன் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தகம்)  

இந்தியா மற்றும் எத்தியோப்பியாவின் இந்த ஆட்சியாளர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட,  பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்திருக்கக் கூடிய, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரின் ஒரு கிளையினரே நாகர் என சேர் பொன். அருணாசலம் அவர்கள், ‘Sketches of Ceylon History' என்ற தமது நூலில் கூறுகின்றார். பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையாரோ மேலும் ஒருபடி சென்று, “நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர். எங்கும் வேறு இன மொழிக்கு உரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை. தனி இனமாகவே வாழ்ந்தனர். ஆகவே, அவர்கள் கடல்கொண்ட தமிழகத்திலோ, தமிழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப் பிரிவினர் என்றும், கடல்கோளின் பயனாகவோ, வேறு காரணங்களாலோ எங்கும் பரந்தவர் என்றும் கருத இடமுண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் (ஆதித்த நல்லூர்) என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழிகள்" (இறந்தோரின் உடலை இட்டுப் புதைக்கும் மண்சாடிகள்) அகழ்வாராய்ச்சி யாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதை குழிகளிலிருந்து சிலநூறு மீட்டர் தூரத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியும் தொழிலகங்கள் பகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு, கறுப்பு நிற மண்பாண்டங்களின் உடைந்த  துண்டுகளும், எலும்பில் செய்த ஆயுதங்களும், இரும்பு, செம்பு, பொன் முதலிய உலோகங்களில் செய்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாகர்கள் இலங்கை மற்றும் கடல்கொண்ட பாண்டியநாடு உட்பட பல பகுதிகளுக்கு திராவிட நாட்டிலிருந்து சென்று குடியேறினார்கள் என க.ப.அறவாணர் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.  தமிழர், நாகர் என்போர் இடத்தால் வேறுபட்டவர்களே அன்றி பிறவற்றால் வேறுபட்டவர்கள் அல்லர். அவர்களின் மொழி அது வழங்கப்பட்ட இடத்தால் சிறிது வேறுபடும் தமிழே என்கிறார் K.R.சுப்ரமணியன். நாக் என்பது பாம்பினைக் குறிக்கும் வடமொழிச்சொல், ஆகவே நாகா என்று வடமொழி எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.   நாகர்கள் ஆரியர்களின் ஆதிக்கத்திற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த பழமையான மற்றும் வலிமையான மக்கள். இராமாயண காலத்திற்கு முன்பே அவர்கள் இந்தியாவில் இருந்தனர். மகாபாரதப் போரில் நாகர்கள் போர்வீரர்களாக இருந்தனர்,  நாகர் இனப் பெண்கள்  தங்கள் அழகுக்காக புகழ் பெற்றனர். அர்சுனன் தனது பயணத்தின் போது அழகிய நாக கன்னியான உலூபியை சந்தித்ததாகவும், அவளை காதலித்து மணந்ததாகவும் மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது.

1919 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட தமிழாக்கம்  மொழி பெயர்ப்பில்   சாகத்தீவு என்றும், பழைய உரையில் நாகத்தீவு என்று உள்ளது என்றும் குறிப்பிடுள்ளார்.  சாகத்தீவும், நாகத்தீவும் ஒன்றுக்கொன்று மாற்றிச் சொல்லக்கூடிய பெயராகவும், அல்லது ஆதியில் சாகத்தீவு என்று சொல்லப்பட்டு, பிறகு நாகத்தீவு என்று சொல்லப்பட்டதாகவும் இருந்திருக்க வேண்டும். என்கிறார். (திரிசிரபுரம்,  திருச்சி,செயிண்ட் ஜோஸப் கல்லூரியின் சமஸ்க்ருத பண்டிதரான உ.வே, ஸ்ரீநிவாஸாச்சார்யர்)

சாகத்தீவை நாகத்தீவு என்று அழைத்திருக்கிறார்கள் என்பதால், நாகக் குடியிருப்புகள் இந்தியக் கடல் பகுதிகளில் இருந்திருக்கக்கூடும் என்று காட்டும் சில விவரங்கள் இருக்கின்றன.  நாகாலாந்து என்னும் மாநிலமே மேற்கு வங்காளம், பர்மாப் பகுதிகளில் உள்ள இமயமலைத் தொடர் ஒன்றுடன் ஒன்று மோதி, அதனால் உயர்ந்த இடம்.  இந்த மோதலில் மலைக்குள் எத்தனையோ இடங்களில் குகைகள் ஏற்பட்டிருக்கலாம். அங்கெல்லாம் வாழ்ந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டிருப் பார்கள்.  நாகர்களுக்குச் சிவன் தெய்வமாவார்.  நாகாலாந்தில் சிவ வழிபாடு உண்டு.  இந்தப் பகுதியில் ஆரம்பித்து, 90 டிகிரி மலை ஆஸ்திரேலியா வரை செல்கிறது. அதன் தொடர்ச்சி, தென் துருவப் பகுதி வரை செல்கிறது. இந்தப் பகுதிக்கு நாகர்கள் சம்பந்தம் உண்டு என்று சொல்லும் வண்ணம் வால்மீகி ராமாயணத்தில் சுக்ரீவன் தரும் வர்ணனை இருக்கிறது.

சுமாலி தனது இரு சகோதரர்களுடன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் நோற்று, வரங்கள் பல பெற்று,  தைத்தியர்களையும், ஆதித்தர்களையும் வென்று, தேவ தச்சர் விசுவகர்மன் துணையுடன் இலங்கை நாட்டில் அழகிய நகரத்தை உருவாக்கி ஆட்சி புரிந்தவர்.  பல முறை தேவர்களை வென்ற சுமாலியின்  மகள்  நாகர் பரம்பரையில் வந்த கைகேசி என்னும் தமிழ் அரச குமாரி  புலஸ்திய முனிவரின் மகனான  விஸ்ரவன் மூலம் இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள்.  தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.  அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். இராவணன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடு தான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது.  இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன.

இலங்கைத் தீவு உருவான கதை பற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.  புவி நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன்.  இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது.

இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.  இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன.  ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது.  இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன.  இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது.  சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் மூழ்கி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம், இலங்கை முதலிய பல நாடுகளாக பிரிந்தது.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்டதாக கூறப்படுகின்றது.

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ன்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை யெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது.  மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.

அழிவுற்றது எனக்கருதப்படும் குமரிக்கண்டம் பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது.  அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களைப் பரதர், நாகர், இயக்கர், அரக்கர்,  பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது.   இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.  சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது உண்மை. 

தென்னிந்தியாவில் உள்ள மக்களைத் தான் ஆரியர்கள் அழகற்றவர் களைக் குரங்குகளாகவும் வலிமை பொருந்தியவர்களை அரக்கர்களாக வும் வர்ணிக்கப்பட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். விஷ்ணு புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில் சுவாமி விவேகானந்தர் கூறியதாவது: "ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...இராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை இராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா? கற்பனையா? என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம். இராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும் என்றார்.

இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ள போதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது.  இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும்அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்  

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராகக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது.

வானர அரசன் சுக்ரீவன் வானரப் படைகளிடம் சீதையை  தேடக்  கூறும் பொழுது  "பாம்புகளின் இருப்பிடமான 'போகவதி" என்ற நகரம் உள்ளது. அது பரந்த சாலைகளைக் கொண்டுள்ளது, எல்லா இடங்களிலும் இருந்து பாதுகாக்கப்படுகிறது, அதனால் அது அழிக்க முடியாத நகரமாக மாறுகிறது. கொடூரமான கோரைப் பற்கள் மற்றும் கொடிய விஷம் கொண்ட கொடிய பாம்புகள் அதைப் பாதுகாக்கும், அதில் மிகவும் ஆபத்தானவை. (பாம்பு) நாகர்களின் அரசன், வாசுகி ஆளும் நாக நாடாகும்." என்று விளக்குகிறார்.  (வால்மீகி ராமாயணம் - கிஷ்கிந்தா  காண்டம்  [4-41-36b, 37. 38a].)

அகத்தியர் வாழ்ந்த இடத்துக்கும், ரிஷப மலைக்கும் இடையே ஓரிடத்தை சுக்ரீவன் சொல்லும் பொழுது அந்த இடத்தின் பெயர் ‘போகவதி”.  போகவதி என்பது நாகலோகம் ஆகும்.   போகவதிக்குத் தெற்கே ரிஷப மலை சொல்லப்படவே, தென்னன் தலைநகரமான தென் மதுரை போகவதிக்கு அருகில் இருந்தது என்று தெரிகிறது.  இந்த இடம் இந்தியக் கடலில் குமரிக் கண்டம் என்றும், தென்னன் தேசம் என்றும் கருத வாய்ப்பு உள்ளது. அமராவதி என்னும் பட்டணத்தை, தேவர்களது தலை நகரம் அல்லது மேலுலக நகரம் என்றால் . அதற்கு இணையாக, போகவதியை கீழுலக நகரம் (பாதாள நகரம்)  நாகர்கள் உலகம் என்பார்கள். ஆனால் மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றில், நாகர்கள் உலகம் என்று சொல்லப்பட்டுள்ளதால், இவை எழுந்த காலக்கட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.   புகார் நகரும் அந்தப் போகவதி போன்றதே என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.   அவ்வாறு கூறுமிடத்தே, நாகர் தொடர்பையும் சேர்த்துக் கூறுகிறது.  

“நாக நீள் நகரொடு நாகனாடதனொடு
போக நீள் புகழ் மன்னும் புகார் நகரது தன்னில்”

(சிலம்பு – மங்கல வாழ்த்துப்பாடல்- 21& 22)

நாடு நலமுடன் இருந்தது. அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது. 

சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன. இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Chota Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயேயிருத்தல் காணலாம்.  நாகர் அல்லது கீழ்த் திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர் இருந்துள்ளனர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், நரவூனுண்ணிகளாயுமிருந்தனர்.  தாவர உணவுகளை உண்பவர்களாக புத்தர் மாற்றினார்.  சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரே வகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.  முண்டா மொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான்குமேர் (Mon-Khmer) மொழிகளும் ஓரினமென்று கொள்ளும் படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.

சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலைநகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது. நடுமாகாணத்தி (Central Provices)லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாகநாட்டாரே. வங்காளக்குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்துபோனபின், அவற்றினின்றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர்.

நானாகாட் கல்வெட்டுக்கள் நாகர்களை நாயணிகாவில் வருவது போன்று நாயர் என்று குறிப்பிடுகின்றது.  மலபார் நாகர்கள் முற்காலத்திய நாகர்களின் பழக்கவழக்கங்கள் மாறாது பிரதிபலிக்கின்றனர். சில கால முன்புவரை நாயர் பெண்கள் நாகப்படம் என்னும் காதணியை அணிந்தனர்.   ப.தாமோதரன் பிள்ளை, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வட இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த மக்கள் கூட்டம் நாகர்கள் என்று கூறுகிறார். அவர்கள் இன்றைய நாயர்கள் ஆனார்கள். ஒரு காலத்தில் நாகர்கள் என்று அழைக்கப்படும் பாம்பு - வழிபாட்டாளர் களுடன் தொடர்புள்ள 'நாயர்' என்ற வார்த்தையின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பது கடினம். நாயர்களின் மூதாதையர்கள் சித்தியர்களை வணங்கும் பாம்புகளின் ஒரு பிரிவினர் என்று சிலர் கருதுகின்றனர். அவர்கள் வடமேற்கு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து நாட்டின் அலட்சியப் பகுதிகளில் குடியேறினர். கே.பி.பத்மநாப மேனனின் கூற்றுப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட கேரளன் அல்லது சேரலன், நாகர்களைக் கொண்டு வந்து இங்கு குடியேற அனுமதித்தார், இந்த நாகர்கள் பின்னர் நாயர்கள் மற்றும் அம்பலவாசிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அங்கமி நாகர்கள் (ANGAMI NAGAS), அஸ்ஸாம் மணிப்பூர் நாகர்கள் : அஸ்ஸாம் நாகர்கள், மணிப்பூர் நாகர்கள் : லோதா நாகர்கள் (Lhota Nagas) பல  பிரிவுகள் இருக்கின்றன.  மொழி வேறுபாடுகளும், பழக்க வழக்கங்களும் சில இடங்களில் மாறுபடுகின்றன.

நாகர்களின் மூதாதையர் வழிபாட்டு முறைகளும், பாம்பு வழிபாடும் சைவ மத வழிபாட்டுடன் புத்தர் காலத்திலேயே கலந்துவிட்டன. உலகெங்கும் நாக வழிபாட்டை பரப்பியவர்கள் நாகர்களே. கேரளத்துப் பாம்பு மேக்காட்டு நம்பூதிரிகள் பழங்காலத்து நாகர் இன மக்களே ஆவர். லிங்கங்கள் நாகர்களின் பாதுகாப்பிலும், கவனிப்பிலும் உள்ளனவாகக் காணப்படுகின்றன. நாகார்ஜுனாவின் சீடர் புத்தமதம் தழுவி மரவழிபாடு மற்றும் பாம்பு வழிபாட்டை ஏற்றுக் கொண்டது குறித்து கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

நாகர்களில் பல கிளைகளாக இருந்தனர். எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய கிளையினர் இருந்தனர். அவர்களில் மறவரே வலிமை மிக்கவராயும் போர்த்திறம் மிக்கவராயும் இருந்தனர்,   நாகர்களில் இன்னொரு மரபினரான ஒளியர் கரிகால் சோழனால் வென்றெடக்கப் பட்டனர் என்று பட்டினப்பாலை மூலம் தெரிகிறது.  நாகர் இனத்தில் மற்றொரு வகுப்பினர் பரதவர் ஆவர். இவர்கள் மீன் பிடித்தல், கடல் வாணிபம் செய்தல் முதலிய தொழில்கள் செய்துவந்தனர்.ஓவிர் தேசம் ஓவியராகிய நாகர்கள் வாழ்ந்த மாந்தை நகரமாகும்.  நாகர்களில் அடக்காப் பண்புடையவர்கள் வயினர் அல்லது வேடர்களே ஆவர்.

ஆரியர்கள் எழுத்துக் கலையை கற்றது நாகர்களிடமிருந்து என்பர். சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை கற்பித்தவர்கள் நாகர்களே. அதனால் தான் அவ்வெழுத்துக்களுக்கு தேவநாகரி (தேவ+நாகரி) என்றழைக்கப்படுவதாக செ. ராசநாயகம் முதலியார் தெரிவிக்கிறார்.

தமிழ் சங்கங்களில் நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்கள் தன் இலக்கியங்களை அறங்கேற்றியுள்ளனர். அவர்கள்  1. புறத்திணை நன்னாகனார் 2. மருதன் இளநாகனார்,  3. முரஞ்சியூர் முடிநாகராயர்,  4. வெள்ளைக்கொடி நாகனார், 5. சங்கவருணர் நாகரியர் மற்றும் பலராவர்.

இசையிலும் மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நாகர்கள். அம்மந்திரங்களை ஆங்கில அறிஞர்கள் ரிவென்பர்க் (Rev S.W.Rivenberg) மற்றும் பெட்டிக்ரூவ் (Rev.W. Pettigrew) இருவரும் தொகுத்துள்ளனர்

நாகர்கள் பல கலைகளில் திறமை உடையவர்களாக இருந்தனர். நெசவு அவர்களின் தனித் திறமையாக இருந்துள்ளது. ஆடைகளையும், மல்மல் என்ற மெல்லாடைகளையும் ஏற்றுமதி செய்துள்ளனர். நீல நாகர்கள் தனக்களித்து மல்மல் ஆடைகளுள் ஒன்றை ஆய் எனும் வள்ளல் சிவபெருமான் சிலைக்கு பரிசளித்ததாக பத்துப்பாட்டு குறிப்பிடுகிறது.  புது நகரங்களைக் கட்டுவதில் நாக மன்னர்கள் நிபுணர்கள் ஆவர். அவர்கள் பல நகரங்களைக் கட்டினார்கள், மகாபாரதத்தில் வரும் “மாயசபை” இவர்களுடைய சித்திர வேலைத் திறனைக் காட்டுகிறது. பாதாளம், பிரஜயோடிஷ, தக்‌ஷலா, மகாத, மதுரா, விலாசபொரி முதலிய நகரங்களை அமைத்தவர்கள் நாகர்களே. உலகில் முதல் முதலில் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள், பாம்புகள், எறும்புகள் போல நிலத்தைத் தோண்டி பொன், வெள்ளி, முதலிய உலோகங்களைக் கண்டவர்கள், சிற்பக்கலை முதலிய அருங்கலைகளில் சிறந்தவர்கள் நாகர்களே. இத்தொழில்களில் இன்றுவரை நாகர் ரத்தம் உள்ளவர்களே ஈடுபட்டு வருகின்றனர்,

தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகநாதர் கோயிலில் உள்ள பல்லவர் கல்வெட்டிலும் இவ்வூர் நாகை’ என அழைக்கப்படுவதைக் காணலாம். இப்பெயர் பின்னர் ‘பட்டினம்’ (அந்நாட்களில் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகத்தைச் சுட்டும் சொல்) என்ற பின்னொட்டுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என வழங்கலாயிற்று. நாகர் இன மக்களுக்கும் இவ்விடத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் இவ்வூர் நாகை எனப் பெயர் பெற்றதாகவும் கொள்வர்.

மானுடவியலாளர்கள், தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் நாகர்கள், திராவிடர்கள் மற்றும் தமிழர்களிடையுள்ள மரபுத் தொடர்புகளைப் பற்றி ஆய்ந்து விளக்குதல் அவசியமான ஒன்றாகிறது.  (ஆதாரம் :  விகாஸ்பீடியா – நாகர்கள்  C.P.சரவணன்)

You already voted!
4.8 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jheevanandam.G
Jheevanandam.G
10 days ago

Authentic information.

Appreciable

Ebenezer Jesubatham
Ebenezer Jesubatham
10 days ago

நன்றி பழனிச்சாமி சார்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096526
Users Today : 11
Total Users : 96526
Views Today : 15
Total views : 416657
Who's Online : 0
Your IP Address : 3.145.91.152

Archives (முந்தைய செய்திகள்)